Primary tabs
6.3 சமநிலையும் இன்பமும்
முன்னர்க் கூறியதுபோல் வைதருப்பநெறியில் காட்டிய நூற்பாக்களைக் கொண்டே கௌட நெறியின் இவ்விரு பிரிவுகளைப் பற்றிக் காண்போம்.
வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவகை மெய்யெழுத்துகளும் விரவிவரத் தொடுப்பது சமநிலை என்பார் வைதருப்பர்.
விரவத் தொடுப்பது சமநிலை யாகும் (18)என்பது நூற்பா.
வல்லின எழுத்துகள் ஏனைய இருவகை மெய் எழுத்துகளினும் மிகுந்து வருமாறு இயற்றப் பெறுவது சமநிலையாகும் என்பது கௌடநெறி.
சான்று : 1
இடர்த்திறத் தைத்துற பொற்றொடி
நீயிடித் துத்தடித்துச்
சுடர்க்கொடித் திக்கனைத் திற்றடு
மாறத் துளிக்குமைக்கார்
மடக்குயிற் கொத்தொளிக் கக்களிக்
கப்புக்க தோகைவெற்றி
கடற்படைக் கொற்றவன் பொற்கொடித்
தேரினிக் கண்ணுற்றதேதோழி ஒருத்தி தலைவனின் வருகையைக் காத்திருக்கும் தலைவிக்கு அறிவிக்கும் செய்யுள் இது.
(பொற்றொடி = (பொன் வளையல் அணியும்) தலைவி இடித்துத் தடித்து = பேரிடி முழக்கம் சுடர்க்கொடி = மின்னல் துளிக்கும் = மழை பொழிதல் மைக்கார் = கருமேகம் தோகை = மயில் கடற்படை = கடல்போலும் படை கொற்றவன் = தலைவன் இனி = இப்போது)
‘பொன் வளையலணியும் தலைவியே! கரிய மேகத்தில் இடியும் மின்னலும் பெருமளவில் தோன்றி மழை பொழிய, மடப்பம் மிகுந்த குயிலானது அஞ்சி நடுங்க, தோகைமயில் களிப்படைய, கடல்போலும் படையுடைய தலைவன் ஒளியுடைய கொடியமைந்த தேரில் இதோ வருகின்றான். எனவே இனி நீ வருத்தத்தை விடுக’ என்பது பொருள்.
இச்செய்யுளில் வல்லெழுத்துகள் ஏனையவற்றிலும் மிக்கு வந்துள்ளன.
சான்று : 2
அவுணர் உரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே(கந்தர்அலங்காரம் : 7)(அவுணர் = அசுரர் உரம் = மார்பு, உடல் உதிரம் = இரத்தம் களம் = போர்க்களம் கழுது = பேய் காவலன் = முருகன்)
‘அசுரரின் உடலில் பெருகிய இரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் மகிழ்ச்சியடைந்து குடித்தும் பேய்க்கணங்கள் போர்க்களத்தில் ஆடி மகிழுமாறு வலோயுதத்தைச் செலுத்திய முருகன்’ என்பது அருணகிரிநாதர் முருகனைப் போற்றித் துதிக்கும் இப் பாடற்பகுதியின் பொருளாகும்.
இப்பாடலிலும் ஏனையவற்றினும் வல்லினம் மிக்கு வந்துள்ளமையை அறியலாம்.
இன்பம் என்பது சொல்வகையாலும் பொருள் வகையாலும் சுவைபடச் சொல்வதாகும்.
சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம் (19)என்பது நூற்பா.
வைதருப்ப நெறியின் கருத்திற்கு ஒப்பக் கௌடரும் இவ்வின்பத்தைச் சொல்லின்பமும் பொருளின்பமும் என வகைப்படுத்திக் காட்டுவர்.
சொல்லின்பம்
மோனைத்தொடை அளவோடு அமைவது வைதருப்ப நெறி சுட்டும் சொல்லின்பமாகும். மோனைத் தொடை மிகுந்து வருமாறு அமைவது கௌட நெறி சுட்டும் சொல்லின்பமாகும்.
சான்று
துனைவருநீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன்
துணைவிழிசேர் துயிலை நீக்கி
இனவளைபோல் இன்னல்சோர்ந்து இடர்உழப்ப
இறந்தவர்நாட்டு இல்லை போலும்
தனியவர்கள் தளர்வுஎய்தத் தடங்கமலம்
தளையவிழ்க்கும் தருண வேனில்
பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலில்
பரப்பிவரும் பருவத் தென்றல்(துனை = விரைவு துணை = இரண்டு இனவளை = கை வளையல்கள் இறந்தார் = பிரிந்து சென்றவர் தருணம் = பக்குவம் வேனில் = கோடைக்காலம் பனி = குளிர்ச்சி மது = தேன்)
இது, தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி, தோழியிடம் கூறியது.
‘துயரமிகுதியால் என் கண்ணிலிருந்து விரைந்து வழியும் கண்ணீரைத் துடைத்தும், உறக்கத்தை நீக்கியும், சேர்ந்திருக்கும் வளையல்கள் கழலல் போல் என் அழகும் குறையுமாறும் யான் துயருறுமாறும் என்னைப் பிரிந்து சென்றார் தலைவர். அவர் சென்ற நாட்டில் பிரிந்தோரை வருத்துவதும் தாமரை மொட்டை மலர்விப்பதுமாகிய இளவேனிற் பொழுதும், குளிர்ந்த தேனையும் தாதுக்களையும் சோலையெங்கும் பரப்பி வரும் இளந்தென்றலும் இல்லையோ’ என்பது பாடற்பொருள்.
இப்பாடலில் அடிதோறும் முதல் ஐந்து சீர்களில் மோனைத் தொடை சிறப்புற்று விளங்கிச் சொல்லின்பம் அளிக்கின்றது.
பொருளின்பம்
பொருளின்பத்தில் வைதருப்பநெறியைக் கௌடரும் ஏற்று வழிமொழிவர்.
காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது ;
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின் ;
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே(காளமேகம் : 198)என்னும் பாடல், மிகுதியாக நீர் கலந்து மோர் விற்றாள் ஒருத்தியைக் கண்டு பாடியது.
(கார் = மேகம் ககனம் = வானம் உறுதல் = பொருந்துதல் தரை = பூமி வார் = மார்புக்கச்சை)
‘வானத்தை அடையும்போது நீ மேகம் என்று பெயர் பெற்றாய்; பூமியை அடைந்த பின் நீர் என்று பெயர் பெற்றாய்; கச்சணிந்த ஆய்ச்சியர் கையை அடைந்தபின் மோர் என்று பெயர் பெற்றாய்! இப்படி மூன்று பெயர்களைப் பெற்றாய். நின் சிறப்புத்தான் என்னே’ என்பது இப்பாடலின் பொருள்.
பொருட்சிறப்புடன் திகழும் இப்பாடல் சிறந்த பொருளின்பம் அளிக்கின்றது.