Primary tabs
5.1 உதாத்த அணி
பாடலில் பாடப்பெறும் பொருளை அடிப்படையாகக் கொண்டும் சில அணிகள் தண்டியலங்காரத்தில் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று உதாத்த அணி ஆகும். உதாத்தம் என்பதற்கு 'வேறு ஒன்றிற்கு இல்லாத தனிச் சிறப்பு' என்று பொருள். இவ்வணிக்கு 'வீறுகோள் அணி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.
5.1.1 உதாத்த அணியின் இலக்கணம்
வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும். இதனை,
வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்
(தண்டி, 74)என்ற நூற்பாவால் அறியலாம்.
. உதாத்த அணியின் வகைகள்
உதாத்த அணி செல்வ மிகுதி, உள்ள மிகுதி என இரு வகைப்படும்.
5.1.2 செல்வ மிகுதி
வியக்கத்தக்க செல்வத்தின் சிறப்பை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லுதல் 'செல்வ மிகுதி' எனப்படும்.
''கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,
என்றும் வறிஞர் இனம்கவர்ந்தும், - ஒன்றும்
அறிவு அரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம செறிகதிர்வேல் சென்னி திரு''(கன்றும் - சினக்கின்ற; வய - வலிமைமிக்க; வறிஞர் - இரவலர்; இனம் - சுற்றம்; ஆல் - அசை; அம்ம - வியப்பு இடைச்சொல்; செறிகதிர் - நிறைந்த ஒளி; சென்னி - சோழ மன்னன்;
திரு - செல்வம். )இப்பாடலின் பொருள்
சினத்துடன் தன்னை எதிர்த்து வருகின்ற வலிமைமிக்க வேந்தர்களுடைய செல்வங்கள் பலவற்றையும் நாள்தோறும் கவர்ந்து கொண்டு வருதலாலும், நாள்தோறும் இரவலர்கள் தங்களுடைய சுற்றத்துடன் சென்று வேண்டியவாறு எடுத்துக் கொள்வதாலும் நிறைந்த ஒளியை உடைய வேலை ஏந்திய சோழ மன்னனுடைய செல்வமானது சிறிதேனும் அளவு அறியப்படாததாய் நிற்கும்.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில், சோழ மன்னன் கவர்ந்து வந்த செல்வம் பல என்றும், அதை வறியவர் கூட்டம் நாள்தோறும் வேண்டியவாறு வாரிச் சென்றாலும் அச்செல்வமானது சிறிது கூட அளவு அறியப்படாமல் இருக்கும் என்றும் கூறப்பட்டதால் இது 'செல்வ மிகுதி' கூறும் உதாத்த அணி ஆயிற்று.
தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தகைய பொருள் கொண்ட அணி சிறப்பாகப் பாடப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு சான்று காண்போம்.
பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்னும் பாடலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இப்பாடலில் அவர் ஓரிடத்தில் காவிரிப்பூம்பட்டினத்து மக்களின் செல்வ மிகுதியை ஓர் அழகான சிறு நிகழ்ச்சியால் பாடுகிறார். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந்நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,
அகன்நகர் வியன்முற்றத்துச்
சுடர்நுதல் மடநோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்(பட்டினப்பாலை, 20-25)என்ற அடிகளால் அறியலாம்.
(அகன்நகர் - அகன்ற நகர்; காவிரிப்பூம்பட்டினம்;
வியன் - பெரிய; நேர் இழை - செவ்வையான அணிகலன்கள்; உணங்கு - உலர்த்தும்; உணா - உணவு, நெல்;
கனங்குழை - கனமான காதணி; பொன் - அழகிய;
புரவி - குதிரை; இன்று - இல்லாமல்; விலக்கும் - தடுக்கும்.)இதில் காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வப் பெருமை உயர்த்திக் கூறப்பட்டுள்ளதால் இது, 'செல்வ மிகுதி' கூறும் உதாத்த அணி ஆயிற்று.
5.1.3 உள்ள மிகுதி
மேம்பட்ட உள்ளத்தின் உயர்ச்சியை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லுதல் 'உள்ள மிகுதி' எனப்படும்.
எடுத்துக்காட்டு
மண் அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,
பண்ணும் தவத்து இசைந்த பார்த்தன்தான் -எண்இறந்தமீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர்குலம்தொலைத்தான்கோதண்ட மேதுணையாக் கொண்டு(கிளை - சுற்றத்தார்; வனம் - காடு;
தவத்து இசைந்த - தவத்தால் இளைத்த;
பார்த்தன் - அருச்சுனன்; எண்இறந்த - அளவு இல்லாத;
அண்டர்- தேவர்கள்,சுரர்கள் கோன் - தலைவன், இந்திரன்;
வெய்யோர் - கொடியோர், அசுரர்; கோதண்டம் - வில்.)இப்பாடலின் பொருள
நாட்டை விடுத்து, சுற்றத்தாரை விட்டு நீங்கி, காட்டை அடைந்து, தவம் செய்து அதனால் வருத்தமுற்று இளைத்த பார்த்தனாகிய அருச்சுனன், தனது வில்லையே துணையாகக் கொண்டு, மேல் உலகத்தில் உள்ள எண்ணற்ற சுரர்களுக்குத் தலைவனாகிய இந்திரனை நடுங்கும்படி செய்த கொடியோராகிய அசுரர்களின் குலத்தை அழித்தான்.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில் அருச்சுனன் தவம் செய்து உடல் இளைத்த நிலையிலும், தான் ஒருவனாகவே இருந்து, தன்னுடைய வில்லின் துணைகொண்டு அசுரர் குலம் தொலைத்தான் என அவனுடைய உள்ளத்து உயர்ச்சி கூறப்பட்டிருப்பதால் இது 'உள்ள மிகுதி' கூறும் உதாத்த அணி ஆயிற்று.