தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒப்புமைக்கூட்ட அணி

  • 5.5 ஒப்புமைக்கூட்ட அணி

    கவிஞர்கள் பாடலில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் பல பொருள்களை அடுக்கிக் கூறுவது உண்டு. அவ்வாறு கூறும்போது, அப்பொருள்களைச் சமமான தன்மை உள்ள பொருள்களாகக் கூறுவார்களாயின் அப்பாடல் அழகு பெற்றுத் திகழக் காணலாம். இதன் பொருட்டுக் கூறப்படும் அணியே ஒப்புமைக்கூட்ட அணி.

    5.5.1 ஒப்புமைக்கூட்ட அணியின் இலக்கணம்

    கவிஞர் ஒரு பொருளைச் சொல்லும் போது, குணம் முதலாயினவற்றில் சிறந்த ஒரு பொருளைக் கூட்டி வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அணி ஆகும்.

    கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து ஒருபொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம்
    (தண்டி, 80)
    ஒப்புமைக்கூட்டம் - சமமான தன்மை உடைய
    பொருள்களை ஒருங்கு கூட்டுதல்.
    கருதிய குணம்- புகழ்வதற்கு உரியனவும்,
    இகழ்வதற்கு உரியனவும் என இருவகைக் குணங்கள்

    . ஒப்புமைக்கூட்ட அணியின் வகைகள்

    ஒப்புமைக்கூட்ட அணி ஒரு பொருளைப் புகழ்ந்து கூறும்போதும், பழித்துக் கூறும்போதும் தோன்றும்.

    புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே
    (தண்டி, 81)

    எனவே, ஒப்புமைக்கூட்ட அணியானது புகழ் ஒப்புமைக்கூட்டம், பழிப்பு ஒப்புமைக்கூட்டம் என்று இரு வகைப்படும்.

    5.5.2 புகழ் ஒப்புமைக்கூட்டம்

    புகழத்தக்க பொருள்களை ஒருங்கு சேர்த்துக் கூறுதல் புகழ் ஒப்புமைக்கூட்டம் எனப்படும்.

    எடுத்துக்காட்டு

    பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும், தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும், - நாண்தாங்கு வண்மைசால் சான்றவரும், காஞ்சி வண்பதியின்
    உண்மையால் உண்டுஇவ் வுலகு
    (பொருப்பு - மலை, மலையாகிய ஏகாம்பர நாதர்;
    தெய்வச் சுடர்விளக்கு - நந்தா விளக்கு; )

    இப்பாடலின் பொருள்

    அணிகலன்களை அணிந்த உமையம்மையாரின் கொங்கைகள் அழுந்துவதால் மேனி குழைந்த மலையாகிய ஏகாம்பர நாதரும், தூண்டும் தேவையற்ற தெய்வத்தன்மை பொருந்திய ஒளியுள்ள நந்தா விளக்கும், பிறர் நாணம் கொள்ளும்படியான கொடைத்தன்மை வாய்ந்த சான்றோரும் காஞ்சி என்னும் மாநகரில் உள்ளமையால் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது.

    . அணிப்பொருத்தம்

    இப்பாடலில், ஏகாம்பர நாதர், நந்தா விளக்கு, சான்றோர் ஆகிய மூன்றும் காஞ்சியில் உள்ளமையால் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இம்மூன்றும் புகழத்தக்க சமமான தன்மை உடைய பொருள்கள் ஆகும். எனவே இவற்றை ஒருங்கு சேர்த்துக் கூறியிருப்பதால் இப்பாடல் 'புகழ் ஒப்புமைக்கூட்டம்' ஆயிற்று.

    இதேபோல, பழிக்கத்தக்க பொருள்களை ஒருங்கு சேர்த்துக்கூறுதல் பழிப்பு ஒப்புமைக் கூட்டம் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 16:38:40(இந்திய நேரம்)