Primary tabs
5.2 அவநுதி அணி
கவிஞர்கள் பாடலில் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிப் பாடுவர். அப்பொருளுக்கு இயல்பான ஒரு தன்மை இருக்கும். ஆனால் அவர்கள் அதை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அப்பொருளுக்கு ஏற்றிக் கூறுவர். அவ்வாறு கூறுவது அவர்கள் பாடுகின்ற பொருளுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாகவே அமையும். இவ்வாறு பாடப்படும் அணியே அவநுதி அணி. இது பிறிது மொழிதல் அணி என்று தமிழில் உள்ளது
5.2.1 அவநுதி அணியின் இலக்கணம்
சிறப்பினாலும், பொருளினாலும், குணத்தினாலும் ஆகிய உண்மையை மறுத்துப் பிறிது ஒன்றாக உரைப்பது அவநுதி என்னும் அணி ஆகும். இதனை,
சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை
மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்
(தண்டி, 75)என்ற நூற்பாவால் அறியலாம்.
அவநுதி என்பதற்கு மறுத்துரைத்தல் என்று பொருள். உண்மை - ஒன்றற்கு இயல்பாக உள்ள தன்மை. ஏதேனும் ஒரு பொருளில் உள்ள உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பது அவநுதி ஆகும். இவ்வாறு உண்மையை மறுத்துப் பிறிது ஒன்று உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.
. அவநுதி அணியின் வகைகள்
அவநுதி அணி மூன்று வகைப்படும். அவை சிறப்பு அவநுதி, பொருள் அவநுதி, குண அவநுதி என்பனவாம். இவற்றுள் சிறப்பு அவநுதியைப் பார்க்கலாம்.
5.2.2 சிறப்பு அவநுதி
எடுத்துக்காட்டு
நறைகமழ்தார் வேட்டார் நலன்அணியும் நாணும்
நிறையும் நிலைதளரா நீர்மை - அறநெறிசூழ்
செங்கோலன் அல்லன் கொடுங்கோலன்
தெவ்அடுபோர்வெங்கோப மால்யானை வேந்து(நறை - நறுமணம்; வேட்டல் - விரும்புதல்; நலன் - அழகு;
நாண் - நாணம், வெட்கம்; நிறை - கற்பு; தெவ் - பகைவர்;
அடு - அழிக்கும்; மால் = பெரிய.)
இப்பாடலின் பொருள்
போர்க்களத்தில் பகைவர்களை அழித்த கொடிய கோபத்தை உடைய பெரிய யானைக்கு உரிய அரசன், தனது நறுமணம் கமழும் மாலையை விரும்பிய பெண்களுடைய அழகும், அணிகலனும், நாணும், நிறையும் நிலை தளராதபடி தாங்கும் அறநெறி பொருந்திய செங்கோலை உடையவன் அல்லன்; கொடுங்கோலை உடையவன் ஆவான்.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில், அரசனைச் சிறப்பித்துக் கூறும்போது, அவனுக்குச் சிறப்பாக உள்ள தன்மையாகிய செங்கோன்மையை மறுத்துக் கொடுங்கோன்மை என்ற பிறிது ஒரு தன்மையை அவன் மீது ஏற்றிச் சொல்லியிருத்தலின், இது சிறப்பு அவநுதி ஆயிற்று. அரசன் தனது மாலையை விரும்பும் பெண்களுக்குக் கொடுங்கோலன் ஆவான் என்று கூறப்பட்டிருப்பதால் அவன் தன் மனைவியை அன்றிப் பிற மகளிரை விரும்பாதவன் என்ற கருத்துப் பெறப்படுகிறது. இது அவனுடைய சிறப்பைக் காட்டலின் சிறப்பு அவநுதி ஆயிற்று.