Primary tabs
-
5.0 பாட முன்னுரை
பல விதமான உள்ளமைப்பினை உடையது மொழியாகும். இம் மொழியில் ஒலி அமைப்பு (phonetic system), ஒலியன் அமைப்பு (phonemic system), இலக்கண அமைப்பு (grammatical system) போன்ற உள்ளமைப்புகள் பல உள்ளன. இந்நிலையில் பல நூற்றாண்டுக்கும் மலோக மொழியினை மனிதன் பயன்படுத்தி வருவதால் ஒரு மொழியில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. தனி ஒரு மனிதனின் பேச்சிலேயே, ஒரு சமயம் பேசும் பேச்சுக்கும்,இன்னொரு சமயம் பேசும் பேச்சுக்கும் இடையே கூட, பலமாற்றங்கள் காணப்படுகின்றன. இதனால் அவன் பேச்சில் உச்சரிக்கும் ஒலியிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு ஒலியில் ஏற்படும் மாற்றங்கள் எதனால் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை விளக்குகிறது இப்பாடம். அதனோடு ஒலி மாற்றத்தில் ஒழுங்குமுறை, ஒலி மாற்றத்திற்கான சுற்றுச் சூழல், இன ஒலி மாற்றம், ஒலி மாற்றம் மற்றும் ஒலியன் மாற்றம் ஆகியவற்றைத் தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. மேலும் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம்பெயரல் போன்ற குறிப்பிடத்தக்க மொழிமாற்றங்களையும் விளக்குகிறது.