Primary tabs
5.6 ஒலி மாற்றங்களின் வகைப்பாடுகள்
பல்வேறு மொழிகளில் பல்வேறு வகையான ஒலி மாற்றங்களைக் காணலாம். எல்லா மொழிகளிலும் ஒரே வகையான ஒலி மாற்றங்கள்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. சூழ்நிலை அல்லது சுற்றுச் சூழல் ஒரே மாதிரியாக அமைந்தால் ஒரே வகையான மாற்றம் ஏற்படும் என நம்பலாம். ஆயினும் இம்மாற்றங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் எனக் கூறுவதற்கு இல்லை. ஒரு கிளைமொழியில் ஒரு மாதிரியான மாற்றம் இருக்க, அம்மொழியின் மற்றொரு கிளைமொழியில் வேறு மாதிரியான மாற்றமும் நிகழலாம். இலக்கியத் தமிழில் உள்ள ‘மலை’ என்ற சொல் பேச்சு வழக்கில் ‘மலெ’ என மாறுகிறது. இரண்டு உயிர் எழுத்துகளுக்கு இடையே வரும் வல்லொலி அல்லது வெடிப்பொலி சில மொழிகளில் குரல் உடை ஒலியாக மாற, சில மொழிகளில் உரசொலியாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது ஒரு ஒழுங்கினையும் காணமுடிகிறது.
எளிமையின் காரணமாக இம்மாற்றங்கள் நிகழ்கின்றன எனலாம். சிலர் வேகமாகப் பேசும்போது சில ஒலியன்களை ஒலிக்காமல் விட்டு விடுகின்றனர். பாய்ச்சு என்ற சொல்லைப் பாச்சு எனவும், பார்த்தான் என்ற சொல்லைப் பாத்தான் எனவும் கூறுகின்றனர்.
மொழிக்கு இறுதியில் மெய்யொலிகளை விட்டுவிட்டு உச்சரிக்கின்றனர். அவள் வந்தாள் என்பதை அவ வந்தா என்றும், வந்தால் (நிபந்தனை வினை) என்பதை வந்தா என்றும் கூறுகின்றனர்.
மொழிக்கு முதலிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. யாறு > ஆறு, இங்கே மொழிக்கு முதலில் வரும் மெய் ஒலியை விட்டுவிட்டு, உயிர் ஒலியை மட்டும் ஒலிக்கிறோம்.
இது போன்ற மாற்றங்கள் மெய் ஒலிகளில் மட்டும் நிகழ்வது இல்லை. உயிர் ஒலிகளிலும் உண்டு. மாதவி என்பதை மாத்வி என்கிறோம். இங்கே மொழிக்கு இடையில் வரும் உயிர் ஒலியை விட்டு விட்டு, மெய் ஒலியை மட்டும் உச்சரிக்கிறோம்.
ஒலிகள் கெடுவது மட்டும் அல்லாமல் தோன்றுதலும் உண்டு. எலும்பு என்பதை யெலும்பு என்றும் எனக்கு என்பதை யெனக்கு என்றும் கூறுவர்.
இவ்வாறு மொழியில் ஓர் ஒலி மற்றொரு ஒலியாகத் திரிதலும், ஒலிகள் தோன்றுதலும், கெடுதலும் உண்டு. இதனையே நன்னூலார்,
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் ஆகும்
(நன்னூல், 154)என்று கூறியுள்ளார் . இத்தகைய ஒலி மாற்றங்களை மொழியியலார் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், உயிர் மாற்றங்கள், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம் பெயரல் என்று பல்வேறு வகைகளாகப் பிரித்து விளக்குகின்றனர். அவற்றைக் கீழே காண்போம்.
உலக மொழிகளில் மிக அதிகமாகக் காணப்படுகின்ற ஒலி மாற்றம் ஓரினமாக்கம் (Assimilation) ஆகும். இது தமிழ்மொழியிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. ஒரு சொல்லில் ஒரு ஒலியனுக்கு முன்னரோ அல்லது பின்னரோ வருகின்ற மற்றொரு ஒலியன், முந்திய அல்லது பிந்திய ஒலியனின் உச்சரிப்பிற்கு ஏற்ப மாறி வருகின்ற மாற்றத்தை மொழியியலார் ஓரினமாக்கம் என்பர். இம்மாற்றம் ஒலியன் பிறக்கின்ற இடத்திற்கு ஏற்பவும் (place of articulation), உச்சரிக்கப்படுகின்ற முறைக்கு ஏற்பவும் (manner of articulation) நிகழக் காணலாம்.
ஒரு சொல்லில், அடுத்தடுத்து வருகின்ற இரண்டு ஒலியன்கள் வெவ்வேறு இடத்தில் பிறக்கின்றனவாகவோ, வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவனவாகவோ இருந்தால், அவை இரண்டையும் சேர்த்து உச்சரித்தல் அரிதாகும். இதற்கு மாறாக அவை இரண்டும் ஒரே இடத்தில் பிறப்பனவாகவும், ஒரே இனத்தைச் சார்ந்தனவாகவும் இருந்தால், அவற்றைச் சேர்த்து உச்சரித்தல் எளிதாகும்.
சான்று:
செண்பகம்
இச்சொல்லில் ண், ப் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வருகின்ற மெய் ஒலியன்கள் ஆகும். இரண்டும் வெவ்வேறு இனங்கள். ண்- மெல்லினம்; ப்- வல்லினம். இரண்டும் வெவ்வேறு இடத்தில் பிறப்பவை. ண்- வளைநா இடத்தில் பிறக்கின்றது; ப்- ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது. எனவே ‘ண்’ என்ற ஒலியன், தனக்குப் பின்னால் வரும் ‘ப்’ என்ற ஒலியனின் இனவெழுத்தாகிய ‘ம்’ என மாறி,
செம்பகம்
என ஓரினமாகிறது. ‘ப்’, ‘ம்’ ஆகிய இரண்டும் ஈரிதழ் உதவியுடன் பிறப்பன ஆகும். இத்தகைய ஓரினமாக்கம் தமிழில் மிகுதியான சொற்களில் காணப்படுகிறது.
சான்று:
நன்செய்> நஞ்செய் (நஞ்சை)புன்செய்> புஞ்செய் (புஞ்சை)வன்சினம்> வஞ்சினம்வெட்கம்> வெக்கம்கட்சி> கச்சிதன்பின்> தம்பிஎண்பது> எம்பதுஓரினமாக்கத்தைப் போன்றே வேற்றினமாக்கமும் ஒரு ஒலி மாற்றம் ஆகும். ஒரு சொல்லில் வருகின்ற ஒரு ஒலியன், அதனோடு இனத்தாலும் பிறப்பிடத்தாலும் ஒத்த ஒலியனாய் மாறாமல் தொடர்பில்லாத வேறொரு ஒலியனாய் மாறுவது வேற்றினமாக்கம் (dissimilation) எனப்படும்.
சான்று:
பட்டடை> பட்டரை (ட > ர)ஒட்டடை> ஒட்டரை (ட > ர)மார்வாரி> மார்வாடி (ர > ட)போடடா> போட்ரா (ட > ர)ரப்பர்> லப்பர் (ர > ல)ரவிக்கை> லவிக்கை (ர > ல)லாந்தர்> ராந்தர் (ல > ர)தகராறு> தகராலு (ற > ர)தமிழ்மொழியில் பேச்சுவழக்கில் உயிர் ஒலிகளில் ஓர் உயிர் ஒலி இன்னோர் உயிர் ஒலியாக மாறுகின்ற மாற்றம் நிறையக் காணப்படுகிறது.
- முன்னுயிர், பின்னுயிராதல்
இ, ஈ என்ற முன்னுயிர்கள், உ, ஊ என்ற பின்னுயிர்களாக மாறி அமையும்.
சான்று:
வீடு> வூடுவிடு> வுடுவிழுந்தான்> வுழுந்தான்பிடுங்கு> புடுங்கு- பின்னுயிர், முன்னுயிராதல்
உ என்ற பின்னுயிர், இ என்ற முன்னுயிராக மாறி அமையும்.
சான்று:
கத்திக்கு> கத்திக்கிபெட்டிக்கு> பெட்டிக்கிஎழுந்திரு> எழுந்திரி- மேலுயிர், கீழுயிராதல்
இ, உ என்னும் மேலுயிர்கள் முறையே எ, ஒ என்னும் கீழுயிர்களாக மாறி அமையும்.
சான்று:
இலை> எலைஇடம்> எடம்விஷம்> வெஷம்சிவந்து> செவந்துசிவப்பு> செவப்புஉடல்> ஒடல்உடம்பு> ஒடம்புஉரல்> ஒரல்உதை> ஒதைதுடை> தொடை- கீழுயிர் மேலுயிராதல்
கீழுயிராகிய ஒ என்பது, மேலுயிராகிய உ என மாறி அமையும்.
சான்று:
கொடு > குடு
உலக மொழிகள் பலவற்றிலும் அண்ணமாக்கத்தைக் காணலாம். அண்ணத்தை (மேல்வாயை) ஒட்டிப் பிறக்கின்ற ஒலி சகர ஒலி ஆகும். எனவே சகர ஆக்கத்தையே அண்ணமாக்கம் (Palatalization) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். சில ஒலிகள், அவற்றிற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ வருகின்ற ஒலிகளின் காரணமாகச் சகரமாக உச்சரிக்கப்படுமாயின், அதனை அண்ணமாக்கம் எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக இ, ஐ என்னும் முன்னுயிர்களாலும், யகர மெய்யாலும் இம்மாற்றம் நடைபெறக் காணலாம்.
சான்று:
அடித்தான்> அடிச்சான்கிழிந்தது> கிழிஞ்சதுபடைத்தான்> படைச்சான்உடைந்தது> உடைஞ்சதுகாய்த்தது> காய்ச்சதுசெய்தான்> செஞ்சான்சில சொற்களில் இடையில் உள்ள ‘உயிர் மெய் ஒலி’ ஒன்று மறைந்து போக, அந்த இழப்பை ஈடு செய்யும் பொருட்டு அதற்கு முன் உள்ள குறில் உயிர் ஒலிகள் நீண்டு ஒலிக்கும். இத்தகைய நீட்டத்தை ஈடு செய் நீட்டம் (compensatory length) என்று கூறுவர்.
சான்று:
மிகுதி> மி(கு)தி> மீதிபகுதி> ப(கு)தி> பாதிதொகுப்பு> தொ(கு)ப்பு> தோப்புபகல்> ப(க)ல்> பால்ஒரு சொல்லில் காணப்படும் சில ஒலிகள் அவை நிற்க வேண்டிய இடத்தில் நில்லாது, அடுத்து இடம் பெயர்ந்து நிற்கக் காணலாம். இம்மாற்றத்தையே இடம் பெயரல் (Metathesis) என்று கூறுவர். டாக்டர் கால்டுவெல், டாக்டர் மு. வரதராசன் ஆகியோர் இதனை மெய் இடம் பெயரல், உயிர் இடம் பெயரல் என இருவகைப்படுத்தி விளக்குகின்றனர்.
- மெய் இடம் பெயரல்
ஒரு சொல்லில் மெய் ஒலிகள் தம்முள் இடம் மாறி அமைதல் மெய் இடம் பெயரல் எனப்படும். இம்மாற்றத்தால் பொருள் சிறிதும் மாறுவது இல்லை. விரைவு காரணமாகவும், ஒலி நயம் காரணமாகவும் இந்த மெய் இடம் பெயரல் நிகழ்கிறது.
சான்று:
சதை> தசைவிசிறி> சிவிறிஇடறி> இறடிகொப்புளம்> பொக்குளம்தப்பை> பத்தைமதுரை> மருதைகொப்பூழ்> பொக்குழ்- உயிர் இடம் பெயரல்
சொற்களில் உயிர் ஒலிகள் இடம் பெயரல் ஒரு புதுமையான முறையில் காணப்படுகிறது. ஓர் உயிர் ஒலியை முதலாகக் கொண்ட சொற்களில் மூன்று உயிர் ஒலிகள் வரும்போதே இந்தப் புதுமையான இடம் பெயரல் காணப்படுகிறது. அச்சொற்களில் உள்ள மூன்று உயிர் ஒலிகளும் குறிலாகவே இருக்கும். இத்தகு சொற்களில் இரண்டாவது நிற்கும் உயிர் ஒலி மறைந்து போகும். முதலாவது நின்ற உயிர் ஒலி, அவ்விரண்டாவது உயிர் ஒலி நின்ற இடத்திற்குச் சென்று, அங்கு மறைந்துபோன உயிர் ஒலிக்கு ஈடாக நெடிலாக மாறும். இதுவே உயிர் இடம் பெயரல் எனப்படும்.
தமிழில் பேச்சுவழக்கில் மூன்று உயிர் ஒலிகளைக் கொண்ட சில சொற்களில் இத்தகைய மாற்றம் நடைபெறக் காணலாம்.
சான்று:
எனக்கு> னேக்குஒனக்கு (உனக்கு)> னோக்குஒலகம் (உலகம்)> லோகம்இங்கே சான்று காட்டப்பட்ட சொற்களுள், ‘எனக்கு’ என்பது ‘னேக்கு’ என மாறி அமையும் முறை பின்வருமாறு:
எ + ன் + அ + க் + க் + உ= எனக்குஎ + ன் + x + க் + க் + உ= என்க்குx + ன் + எ + க் + க் + உ= னெக்குன் + ஏ + க் + க் + உ= னேக்குஇவ்வாறே மற்றச் சொற்களும் உயிர் இடம் பெயரல் முறையில் மாறி அமைவதைப் பிரித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.