தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோட்டைகளின் பொறிகள்

  • 2.2 கோட்டைகளில் பொறிகள்

        சங்க காலத்துக் கோட்டைகளையும் சங்கம் மருவிய காலத்துக் கோட்டைகளையும் காண இயலாமற்போனாலும், அக்காலத்துக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தால், கோட்டைகள் எவ்வாறு சிறந்த பாதுகாப்பு அரண்களாக விளங்கின என்பதை அறிந்து கொள்ளலாம்.

        அவற்றில் பல இயந்திரப் பொறிகளும் அவற்றை இயக்கும் இயங்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கோட்டையின் உள்ளே காவல் தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    2.2.1 பொறிகள்

        மதுரை மாநகரில் இருந்த கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்பட்டிருந்த பொறிகள் பல. அவை:

    1)
    வளை விற்பொறி
    -
    வளைந்து தானே எய்யும் இயந்திரவில்,
    2)
    கருவிரலூகம்
    -
    கரிய விரல்களுடைய குரங்கைப் போலிருந்து அருகே வரும் எதிரிகளைப் பிடித்துக் கொல்லும் பொறி,
    3)
    கல்லுமிழ் கவண்
    -
    தானே கற்களை எறியும் கவண்,
    4)
    பரிவுறு வெந்நெய்
    -
    எண்ணெயைக் கொதிக்க வைத்து அருகே வருபவர் மேல் வீசுகின்ற எண்ணெய் மிடா (கொப்பரை),
    5)
    பாகடு குழிசி
    -
    செம்பை உருக்கி வைத்திருந்து எதிரிகள் மீது வீசும் மிடா, அல்லது வெல்லப்பாகைச் சிதறும் பாத்திரம்,
    6)
    காய்பொன்னுலை
    -
    படைக்கருவிகளை உருகக் காய்ச்சி எறிவதற்கேற்ப அமைந்த உலைகள்,
    7)
    தொடக்கு
    -
    கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி,
    8)
    ஆண்டலையடுப்பு
    -
    ஆண்தலைப் பறவை போன்ற பொறி, பகைவரது மண்டையைக் கொத்திச் சிதைக்கும் கருவி.
    9)
    கவை
    -
    இரு பிரிவாகப் பிரிந்து அமைந்த கவைக்கோல், மதிலேறும் பகைவரை மறித்துத் தள்ளக் கூடியது,
    10)
    கழு
    -
    கூரிய நுனியுடைய கழுக்கோல்,
    11)
    புதை
    -
    அம்புக் கட்டுகள்
    12)
    புழை
    -
    தாமே பகைவர் மீது அம்பெய்யும் வகையில் அமைந்துள்ள ஏவறைகள்
    13)
    ஐயவித்துலாம்
    -
    தன்னை நெருங்கும் பகைவர் தலையை நெருக்கித் திருகும் மரம்,
    14)
    கைபெயரூசி
    -
    மதிலைக் கைப்பற்ற முயலும் பகைவர் கையை நடுங்கச் செய்யும் ஊசிப் பொறி,
    15)
    சென்றெறி சிரல்
    -
    பகைவர் மேல் சென்று தாக்கும் சிக்கிலிப் பறவை வடிவிலமைந்த பொறி
    16)
    பன்றி
    -
    மதில்மீது ஏறும் பகைவர்களைத் தன்கொம்பால் கிழித்துக் கீழே தள்ளும் பன்றி போன்ற பொறி
    17)
    பணை
    -
    மூங்கிற் கோல் போலிருந்து தானே சென்று பகைவரை அடிக்கும் பொறி,
    18)
    எழுவும் சீப்பும் கணையமும்
    -
    கோட்டை மதிற்கதவிற்கு வலிமையாக உள்வாயிற்படியிலே பொருந்திய மரங்கள், வயிரம் பாய்ந்த கணையங்கள்
    19)
    கோல்
    -
    எறிகோல்
    20)
    குந்தம்
    -
    சிறுகவளமாகிய குந்தப்படை
    21)
    வேலும் பிறவும்
    -
    வேற்படையும், தூண்டிலும், களிற்றுப் பொறியும், புலிப்பொறி முதலியவும்

        மதில்மேல் பொருத்தப்பட்டிருந்தன என்ற செய்தி கிடைக்கிறது. இத்தகைய கோட்டைச் சிறப்பினை இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் - அடைக்கலக் காதையில், வருணித்துள்ளார் (207-218).

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 15:59:34(இந்திய நேரம்)