தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நரம்புக்கருவி

  • 3.3 நரம்புக் கருவி

        நரம்புக் கருவியைத் தந்தி வாத்தியம் என்பர். யாழ், வீணை, தம்புரா, பிடில் போன்ற கருவிகள் நரம்புக் கருவிகளாகும். துளைக்கருவி ஆயர்குல மக்கள் தந்தது போல் நரம்புக் கருவிகளை வேடுவர்கள் வழங்கினர்.

        பி. சைதன்ய தேவா தாம் எழுதிய இசைக் கருவிகள் என்
    ற நூலில் நரம்புக் கருவிகளை மூன்று வகையாகக் குறிப்பிடுகின்றார்.

    1) சுருதி அல்லது தாள உபகரணமாகப் பயன்படுபவை.                  - தம்புரா

    2) ஒரு தந்தி ஒரு சுரம் மட்டும் இசைக்கப் பயன்படுபவை.                  - யாழ்

    3) ஒரே தந்தியில் பல சுரங்கள் இசைக்கப்படுபவை                      - வீணை

    பண்டைய காலத்தில் யாழ் என்ற இசைக்கருவி மிகச் சிறப்புடன் விளங்கியது. சங்க இலக்கியம் இக் கருவி பற்றியும், இக்கருவியிலிருந்து எழும் இசையினிமை பற்றியும், இக் கருவி இசைக்கும் இசைக் கலைஞர்கள் பற்றியும் நன்கு எடுத்தியம்புகிறது. 21 நரம்புகளைக் கொண்ட பேரியாழ், 17 நரம்புகளை உடைய மகரயாழ், 16 நரம்புகளை உடைய சகோடயாழ், 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டு யாழ் பற்றிய இலக்கியச் செய்திகளை அறியலாம்.இசை இலக்கணத்தை நரம்பின் மறை என்று தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றது.

    • வீணை

        இசைக் கருவிகளின் அரசி என்று போற்றப்படும் வீணை மிகச்சிறந்த நரம்புக் கருவியாகும். இன்றும் வழக்கில் உள்ளது. தற்போது வழக்கத்தில் உள்ள வீணயைத் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் இரகுநாதநாயக்கர் (கி.பி. 17-ஆம் நூற்) உருவாக்கியது என்பர். இதனால் இரகுநாத வீணை என்றும், தஞ்சை வீணை என்றும் அழைக்கப்படுகிறது.

        குடம், மேற்பலகை, தண்டு, சுரைக்காய்,பிரடைகள்,யாளி முகம், மேளச் சட்டம், மெழுகுச் சட்டம், 24 மெட்டுக்கள் போன்ற பாகங்களைக் கொண்டு விளங்கும். பலாமரத்தால் செய்யப்படும்.

        வலது கையின் ஆள் காட்டி விரலும், நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள் காட்டி விரலும் நடுவிரலும் இசைப்பதற்கும் பயன்படுத்தப்படும். தாள, சுருதித் தந்திகள் வலது கை சுண்டு விரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காகச் சிலர் விரல்களில் நெளி எனப்படும் சுற்றுக் கம்பிகளையும் இட்டுக் கொள்வர்.

        இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் (திருவாசகம், திருப்பள்ளி 4 : 1) என்ற தொடரால் வீணையும் யாழும் மாணிக்கவாசகர் காலத்தில் வழக்கில் இருந்துள்ளதனை அறிய முடிகின்றது. காலப்போக்கில் யாழை விட வீணை அதிகம் வரவேற்புப் பெற்ற கருவியாக விளங்கியுள்ளது.

        வீணை தனம்மாள், வீணை காயத்திரி, வீணை எசு.பாலசந்தர், வீணை சிட்டிபாபு போன்றோர் இத்துறை மேம்பாட்டிற்காக உழைத்துள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:01:50(இந்திய நேரம்)