Primary tabs
1.1 கி. ராஜநாராயணன்
தற்பொழுது வாழ்ந்துவரும் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர் கி.ரா., இவரின் பிறந்த நாள் 16.9.1923. சொந்த ஊர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல் கிராமம். பெற்றோர்கள் கிருஷ்ண ராமானுஜன், இலட்சுமி அம்மாள், மனைவி கணபதி அம்மாள். இரு மகன்கள் திவாகர், பிரபாகர். இவர் 40 வயதிற்குப் பிறகு எழுத ஆரம்பித்து சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமியக் கதை, அகராதி, கடிதம் என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.
• பெற்ற பரிசுகள்
மிகச்சிறந்த நாவலாசிரியரான கி.ராஜ நாராயணனுக்குக் கிடைத்த பரிசுகள் பின்வருமாறு :
கதவு (சிறுகதைத் தொகுதி)-தமிழ்வளர்ச்சி மன்றப் பரிசு (1965)பிஞ்சுகள் (குழந்தைகள் நாவல்)-இலக்கியச் சிந்தனை பரிசு (1979)கோபல்லபுரத்து மக்கள் (நாவல்)-சாகித்ய அகாதெமி விருது1.1.1 படைப்புகள்
தமிழில் ஒரு சமூக வரலாற்று நாவலைக் கூறமுடியுமானால் அது கோபல்ல கிராமம் தான். “ஒரு நாவலாசிரியனே தனது சமூகத்தைப் பற்றி எழுதுவதில் முதன்மையானவன்” என காதரின் லிவர் என்பார் (the Novel and the Reader P.97) கூறும் கூற்று கி.ரா., நடைக்குப் பொருந்தும்.
கோபல்ல கிராமம் எழுதிய கி.ரா., கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். இந்த இரு புதினங்களும் சமூக வரலாற்றுப் புதினங்களாகத் திகழ்கின்றன. வழக்கமான நாவல்களில் வரும் கதைப் பின்னலும், நிகழ்ச்சித் தொடர்ச்சியும் இல்லாவிட்டாலும் ஒரு புது முயற்சியாகக் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலைக் கி.ரா. படைத்துள்ளார்.
1.1.2 தமிழ் இலக்கிய வரலாற்றில் பெறுமிடம்
கி.ரா., சிறுகதை, நாவல், குறுநாவல், கடிதம் போன்ற பல துறைகளில் தன் பங்களிப்பைச் செய்திருந்தாலும் ‘கரிசல் இலக்கிய முன்னோடி’ என்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகிறார்.
நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடத்தில்
ஒதுங்கினேன், பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல்
மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்என்று சொல்லும் கி.ரா.,வைப் புதுவைப் பல்கலைக் கழகம் பேராசிரியராக்கிப் பெருமையடைந்துள்ளது. இவர் ‘கதவு’ என்ற சிறுகதை மூலம் தமிழ்ச்சிறுகதை உலகின் கதவை விலாசமாகத் திறந்து வைத்தவர். இவர் 70க்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்ததோடு இரு நாவல்களையும் படைத்துள்ளார்.
• தனித்தன்மை
நாவலாசிரியர் தனக்குக் கிடைத்த கருவை விளக்கிக் காட்டவே, கதைப்பின்னல், பாத்திரங்கள், பின்னணி என்று பலவற்றை அமைத்துக் கொள்கிறார். அந்த வகையில் கி.ரா., விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயிகளின் நிலையை நன்கு உணர்ந்து கிராம மக்களின் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு நாவல்களைப் படைத்துள்ளார். மேலும் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக் குறியீடாக்கி மனிதர்கள் மனநிலையை விளக்கியுள்ளார். சங்க இலக்கியம் இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்க்கையைச் சித்திரிப்பதைப்போல, உரைநடை இலக்கியத்தில் இயற்கையோடு இரண்டறக் கலந்த கிராம மக்களின் வாழ்வைக் கூறுவது இவரது தனிச் சிறப்பாகும்.