தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கோபல்ல மக்கள் - புதினம்

  • 1.2 கோபல்லபுரத்து மக்கள் - புதினம்

    கரிசல் தமிழின் முன்னோடியான இவருக்கு ஓர் இலக்கியப் பரம்பரையை உருவாக்கிய பெருமை உண்டு. இவரது அக்கறையும், ஈடுபாடும், அன்பும், அனுதாபமும் எப்பொழுதும் சுரண்டப்படுகின்ற ஏழைக்கூலி விவசாயிகள் பக்கமே இருந்து வருகின்றது. கிராம மக்களின் வாழ்க்கைக் கூறுகளை மனிதாபிமானத்தோடு ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் ஒரு விசாலமான பார்வை அவருக்கு இருக்கிறது. முப்பத்து நான்கு வாரங்களாகக் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இந்நாவல் விடுதலைப் போராட்ட வீரவரலாறு என்றும், சாதாரண மக்களை நாயகர்களாக்கிப் படைக்கப்பட்ட நல்ல நாவல் என்றும் ஏராளமான வாசகர்களால் பாராட்டப்பட்டது. இந்த நாவலுக்குச் ‘சாகித்ய அகாதெமி’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கதைமாந்தர்கள்

    துயாரம் நாயக்கர், துயாரம் நாயக்கர் மகள் அச்சிந்தலு, அச்சிந்தலுவின் தம்பி வெங்கடபதி, அச்சிந்தலுவின் முறைமாப்பிள்ளை கிட்டப்பன், கிட்டப்பனின் மனைவி ரேணம்மா, கோட்டையார் வீட்டு கோவிந்தப்ப நாயக்கர், நந்தகோப நாயக்கர், வாத்தியார் சாமிக்கண்ணு, ஆசாரி போன்றவர்கள் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலின் கதைப்பாத்திரங்கள்.

    1.2.1 கதைப் பின்னல்

    மேற்குறிப்பிட்ட நாவலில், கோபல்ல கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சிறு சிறு கதைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பல கதைகளின் பின்னலில் கோபல்லபுரத்து மக்கள் ஒன்றிணைகிறார்கள்.

    ஆந்திராவிலிருந்து தெலுங்கு அரசர்கள் தமிழகத்தில் ஆட்சி செலுத்தியதை ஒட்டி வந்தவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். முகலாய அரசர்களுக்குப் பயந்து வந்தவர்கள்; இவ்வாறு இங்கு வந்து குடியேறி தமிழர்களோடு தமிழராய் மாறி வாழ்ந்து வரும் தெலுங்கு தேச மக்களின் சமூக வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு கி.ராஜ நாராயணன் ‘கோபல்ல கிராமம்’ என்ற ஓர் அரிய நாவலை எழுதியுள்ளார். வரலாற்றை அடியொற்றி எழுதப்பட்டிருப்பினும் சமூக வாழ்க்கையை மையமாகக் கொண்டே ‘கோபல்ல கிராமம்’ எழுதப்பட்டுள்ளது. அதைப்போலவே ‘கோபல்ல கிராமத்து மக்கள்’ என்ற நாவலும் அமைந்துள்ளது. அச்சிந்துலு, கிட்டப்பனின் வாழ்க்கை, முதல் 95 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. மீதியுள்ள 195 பக்கங்களில் ஆங்கிலேயர் வரவால் அந்த ஊரில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட நாகரிகமும், பண்பாட்டு மாற்றமும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூகத்தின் வரலாறாக, ஆவணமாக விளங்குகிறது.

    1.2.2 கதைச் சுருக்கம்

    தாய்மாமன் மகளான அச்சிந்தலு பிறந்தவுடன் அவளைக் கிட்டப்பனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், குழந்தைப் பருவம் முடிந்து பருவத்தின் தலைவாயில் வந்து நின்றபோது இரு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவினால் அவர்களுக்கு நடக்கவிருந்த திருமணம் தடைபடுகிறது. அந்தச் சூழ்நிலையில், இருவரது உள்ளத்திலும் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்ற உணர்வு எழுகிறது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. பிறகு உடல் உறுதி வாய்ந்த கிட்டப்பனுக்குச் செல்வக்குடும்பத்தில் திருமணம் நடக்கிறது. அவனுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்த உடனையே வீம்புக்காக, பேரழகியான அச்சிந்தலுவுக்கு அந்த முகூர்த்தத்தில் ஒரு அவசரத் திருமணம் நடந்து முடிகிறது. அத்திருமணம் நடந்த நான்காம் நாளே, அச்சிந்தலுவின் கணவன் நிலத் தகராறில் கொலையுண்டு இறந்து போனான். அச்சிந்தலு மாங்கல்யத்தை இழந்தாள். சின்ன வயசிலே தன்னோடு ஒட்டிப் பழகிய கிட்டப்பன், தன்னை ஒரு பொருட்டாகக் கருதாமல் உதறிவிட்டு இன்னொருத்தியின் கையைப்பிடித்தது அவளை அதிகமாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பே பழிவாங்கும் உணர்வாக மாறுகிறது.

    • அச்சிந்தலுவின் சூட்சி

    ஒவ்வொரு வருட ‘மாநோன்பு’ திருவிழாவில் வன்னிமரம் ஒன்று நடப்படும். அந்தக் கோபல்லபுரத்தின் வீரனான கிட்டப்பன்தான் அந்த மரத்தைப் பிடுங்குவான். இந்த முறை அவனைப் பழிவாங்க அச்சிந்தலு தந்திரம் ஒன்று செய்தாள். நேரான மரத்திற்குப் பதிலாகக் கவட்டையோடு கூடிய மரத்தை நடுமாறு மரம் நட வந்த தன் தம்பியிடமும் மற்றவர்களிடமும் யோசனை கூறுகிறாள். வழக்கம்போல் அந்த ஆண்டும் “மாநோன்பு” ஊர்வலம் வன்னிமரம் நட்ட இடத்தில் வந்து நிற்கிறது.

    அறிவுக் கடலான கலாதேவிக்கும் அஞ்ஞான இருளான வன்னி ராஜனுக்கும் போர் நடந்தது. தோற்று விழுந்த வன்னிராஜனை அந்த இடத்திலிருந்து பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் பங்குக்கு அந்த வன்னிமரத்தை ஆட்டி ஆட்டிப் பிடுங்கிப் பார்த்தார்கள். கிட்டப்பனுக்கு இந்தத்தடவை வைத்து விடாமல் தாங்களே ஒரு கை பார்த்து விடவேண்டும் என்று சில இளவட்டங்கள் முயன்று தோற்றார்கள். எல்லோரும் வன்னிமரத்தோடு போராடித் தோல்வியடைந்தனர். கிட்டப்பன் அதிகநேரம் போராடியும் மரம் துளிக்கூட அசைவதாகத் தெரியவில்லை. இருந்தாலும் முயன்று கொண்டிருந்தான். இறுதியில் அடக்கிய மூச்சினால் உடம்பின் நரம்புகள் புடைப்பது தெரிந்தது. நெடு நெடு என்று உள்ளமுங்கிய சத்தம் மார்புக்கு உள்ளே என்னமோ உடைகிற மாதிரி உணர்ந்தான். வன்னிமரம் மேலே வந்தது. கூட்டமும் ஆரவாரித்தது. ஆனால், அவனுக்கோ கேட்கவில்லை. ஏதோ கனவில் கேட்பது போல இருந்தது. பிடுங்கிய மரத்தோடு அவனும் மரம்போல் தள்ளாடி தலையில் சாயப்போன சமயத்தில், சாமிக்கண்ணாசாரி ஓடிவந்து தாங்கிக் கொண்டார். அன்றிலிருந்து கிட்டப்பன் படுத்த படுக்கையாகி விட்டான். மார்புக்குள் தாங்க முடியாத ஏதோ வலி ஏற்பட்டது.

    கிட்டப்பனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு அச்சிந்தலுதான் காரணம் என்பதை ஊரார் மூலம் கிட்டப்பனின் மனைவி ரேணம்மா அறிகிறாள். தன் மனதில் நீண்ட காலமாக இருந்து வரும் ஐயத்தைப் போக்கிக் கொள்ள நினைக்கிறாள். அச்சிந்தலுவுக்கும் அவனுக்கும் இருந்த பால்ய பருவ நட்பினைப் பற்றிக் கணவனிடம் வினவுகிறாள். அதற்குக் கிட்டப்பன் “உண்மைதான்; விருப்பமிருந்தால் என்னோடு இரு இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டிற்குப் போயிடு” என்று கோபமாகப் பேசுகிறான். ரேணம்மா கணவனைப் பிரிந்து செல்கிறாள்.

    கிட்டப்பனின் நினைவாகவே இருந்த அச்சிந்தலு அவனோடு முன்பெல்லாம் அமர்ந்து பேசும் மரத்தடிக்கு வந்து சேர்கிறாள். அதே மரத்தடியில் கிட்டப்பன் கீழே மயங்கிக் கிடப்பதைக் கண்டு அவனைத் தூக்கிக் காப்பாற்றுகிறாள். அன்றிலிருந்து ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அஞ்சாமல் இருவரும் உயிருள்ளவரை ஒன்றாகவே வாழ்ந்தனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:25:01(இந்திய நேரம்)