தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதை மாந்தர்

  • 1.3 கதை மாந்தர்

    கதைமாந்தரைத் தலைமை மாந்தர், துணைமாந்தர் என்று இருவகைகளாகப் பிரிக்கலாம்.

    1.3.1 தலைமை மாந்தர்

    தலைமைப் பாத்திரமான அச்சிந்தலுவுக்கு உறவுமுறையில் நடக்கவிருந்த திருமணம் தடைப்படுகிறது. அந்நிலையில் அச்சிந்தலுவின் விருப்பம் கேட்கப் படவில்லை. திருமணத்தில் வாழ்க்கைத் துணைவரைத் தெரிவு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டு யாரோ ஒருவனை விருப்பமில்லாமல் அவள் மணக்க வேண்டியுள்ளது. அப்படி நடந்த திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே கணவன் இறந்தபோது கூட அது அச்சிந்தலுவுக்கு இழப்பாக இல்லை. சாதாரண நிகழ்வாகவே உள்ளது. ஆனால், கிட்டப்பன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் அவள் அடிமனதில் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருந்தது. ஒருவர் மீது கொண்ட அதிகமான அன்பே பழிவாங்கும் உணர்வாக மாற்றம் பெறுகிறது. அதனால் கிட்டப்பனைப் பழிவாங்குகிறாள். ஆனால், அந்த நிகழ்ச்சி அவன் உடலுக்கே கேடாகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அச்சிந்தலுவின் பழிவாங்கும் உணர்வே நிறுத்தி வைக்கப்பட்ட அவர்களுடைய உறவைப் புதுப்பித்தது. திருமணத்திற்கு முன் வீட்டைவிட்டு வெளியில் வரும் அனுமதி அவளுக்கு இல்லை. ஆனால் விதவையான அச்சிந்தலுவுக்கு அந்த அனுமதி கிடைக்கிறது. அதனால், அவள் சமுதாயத்தை எதிர்த்துத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் துணிவைப் பெறுகிறாள்.

    1.3.2 துணை மாந்தர்

    துணைப் பாத்திரமான கிட்டப்பனின் மனைவி ரேணம்மாவும், பரசு நாயக்கர் மனைவியும் கணவன், “உன் அப்பன் வீட்டிற்குப்போ” என்று கூறியவுடன் வேறு யோசனை எதுவுமின்றி உடனே தந்தை வீட்டிற்குக் கிளம்பி விடுகின்றனர். துணைமாந்தராகப் படைக்கப்பட்டுள்ள பெண்கள் தன்மான உணர்வுடையவர்களாகவும், தெளிந்த சிந்தனை உடையவர்களாகவும் உள்ளனர். இது போன்று நாவலில் இடம்பெறும் ஆண்களும் பெண்களும் துணைப்பாத்திரங்களாக விளங்கி நாவலுக்குச் சுவையூட்டுகின்றனர். கி.ரா.,வின் நாவலில் இடம்பெறும் தலைமை மாந்தரும், துணைமாந்தரும் அன்றாடம் நாம் சந்திக்கும் மாந்தர்களைப் போலவே இயல்பாக வாழ்கின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:25:04(இந்திய நேரம்)