தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.3 பாரதிதாசனின் பொதுவுடைமைச் சிந்தனை

  • புதியதோர் உலகு காணப் புறப்பட்ட எழுச்சிப் படையின் தளபதியாக விளங்கியவர் பாரதிதாசன். கவிதைப் போக்கின் இருண்ட வீட்டில், குடும்ப விளக்கேற்றி ஒளியூட்டியவர். மக்களுக்காக மக்கள் மொழியில் மக்களைப் பாடிய மாக்கவிஞர். தமிழகத்தைப் பிணித்திருக்கும் சாதி இருட்டு, தீண்டாமைக் கொடுமை, நால்வருண நஞ்சு, மூடத்தனத்தின் முடை நாற்றம், மதத்தைக் கட்டிய வைதீகம், பெண்ணடிமை, கைம்மைவேதனை, உழைப்பாளர் துயர், சிந்தனை முடக்கம், மொழிப்பற்றின்மை, விதியின் பெயரால் மதிமயக்கம், எல்லாம் கடவுள் செயல் என்ற தொடை நடுங்கும் பொல்லாங்கு ஆகிய வலிமைமிக்க சங்கிலிகளை உடைத்தெறியக் காலம் தோற்றுவித்த புரட்சிக் கவிஞர்.

    பொதுவுடைமை என்பது எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான் - அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன் நிலை மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை,

    ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
    உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ

    என்ற பாடலின் மூலம் ஒத்த நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகின்றார்.

    இயற்கை அழகில் தன்னை மறப்பது கவிஞர்களின் இயல்பு. ஆனால், பாரதிதாசன் பசுமையான சோலையைப் பார்க்கும் பொழுது கூட அதனை உருவாக்கப் பாடுபட்ட தொழிலாளர்களின் நிலையை, துயரத்தை எண்ணிப் பார்க்கின்றார் என்பதை,

    சித்திரச் சோலைகளே உமைநன்கு
    திருத்த இப்பாரினிலே - முன்னர்
    எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
    உங்கள் வேரினிலே
    (பாரதிதாசன் கவிதைகள்)

    பாடலால் அறியலாம். அதுமட்டுமன்றி நிலவைக் காணும் மகிழ்ச்சியின் பெருக்கில் ஓர் உவமையைக் கூற வரும் கவிஞரின் உள்ளத்தில் வறுமையில் வாடும் பாட்டாளிகள் நிலையே காட்சி தருகிறது. வறுமையை மட்டுமே சொந்தமாகக் கொண்ட பாட்டாளி வெண்சோற்றைக் கண்டால் எவ்வாறு மகிழ்ச்சி கொள்வானோ, அவ்வகையில் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறுகின்றார்.

    .........நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
    தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
    சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
    கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ?

                      (புரட்சிக் கவி)

    கடவுள் பெயராலும் விதியின் பெயராலும் பாட்டாளிகளை ஏமாற்றும் கயவர்களைக் கடிந்து கொள்ளும் பாவேந்தர், அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விடுக்கின்றார். அதில், ஏழைகளின் இரத்தம் கொதிப்பேறும் முன் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களைத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்.

    செப்புதல் கேட்பீர் - இந்தச்
    செனத் தொழிலாளர் மிகப் பலர் ஆதலின்
    கப்பல்களாக - இனித்
    தொழும்பர்களாக மதித்திட வேண்டாம்
    இப்பொழுதே நீர் - பெறு
    இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை
    ஒப்படைப்பீரே - எங்கள்
    உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே

         (பாரதிதாசன் கவிதைகள் - தொழிலாளர் விண்ணப்பம்)

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 11:22:30(இந்திய நேரம்)