Primary tabs
- 5.0 பாட முன்னுரை
பேரிலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் உணர்த்தும். இவற்றில் ஒன்றோ பலவோ குறைந்துவரின் அவை சிற்றிலக்கியங்கள் என்று சொல்லப்படும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலம் சிற்றிலக்கிய காலம் என்று சொல்லப்படுகிறது. கி.பி.1350 முதல் கி.பி.1750 முடிய உள்ள காலம் நாயக்கர் ஆட்சிக் காலமாகும். இக்காலத்தில்தான் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின. இவை பிரபந்தங்கள் என்று வடமொழியில் வழங்கப்படுகின்றன. வடமொழியில் பிரபந்தங்கள் 96 வகை என்பர். அதற்கேற்பத் தமிழிலும் சிற்றிலக்கியங்கள் 96 என்ற வழக்கு உள்ளது. அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ், தூது, பரணி, கோவை, மடல், பள்ளு, குறவஞ்சி முதலியன இந்த வகையில் அடங்கும்.
இலக்கியத்தில் தோன்றிய இந்தப் புதிய வகையினை ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சுட்டுகிறது. சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டு அமைந்தவை. சிற்றிலக்கியங்கள் தமிழகத்தின் வரலாற்றை ஓரளவுக்கு நமக்குத் தெரிவிக்கின்றன. அக்காலச் சமூக நிலை பற்றியும் அவற்றிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது; அக்காலக் கவிதைப் போக்கினையும் நாம் அறிந்து கொள்ளலாம். சிற்றிலக்கியங்களில் ஒரு வகையாகிய அந்தாதி இலக்கியம் பற்றி இனிக் காண்போம்.