தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கவிதைச் சிறப்பு

  • சிவபெருமானின் திருவுருவச் சிறப்பிலேயும் திருவருட் சிறப்பிலேயும் மனம் தோய்ந்து பாடும் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியில் அவருடைய அன்பு வெளிப்பாட்டினைக் காணலாம். அத்துடன் நில்லாது கவிதை நயம், கற்பனை, உவமை நயம் ஆகிய பல அழகுகளையும் காணலாம். எல்லாவற்றிலும் சிவபெருமான் மீது கொண்ட எல்லையற்ற அன்பும் பக்தியும் இழையோடுவதைக் காணலாம்.

    பொருளை விளக்குவதற்கும் சிறப்புற மொழிவதற்கும் ஏற்ற அணி உவமை அல்லவா? அதைத் தக்க இடங்களில் புனைந்திருப்பதால் அற்புதத் திருவந்தாதி அழகுடன் மிளிர்வதைக் காணலாம். பெரும்பாலும் இயற்கையை உவமிப்பது அம்மையாரின் சிறப்பாகும்.

    இயற்கையை உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.

    காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
    வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
    தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
    வீங்கிருளே போலும் மிடறு
    - (65)

    வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள் சிவபெருமான் திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார்.

    மின் போலும் செஞ்சடையான் - (83)

    என்றும்,

    பொன் வரையே போல்வான் - (8)

    என்றும்,

    நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து - (41)

    என்றும் ஒளி வீசும் மின்னலையும் பொன்னையும் சிவனுக்கு உவமித்து மகிழ்வதைக் காணலாம்.

    இறைவன் திருவுருவத்தையும் அவன் அணிந்திருக்கும் கங்கை, அரவு ஆகியவற்றையும் பார்க்கும்போது தோன்றும் கற்பனைகள் பல. அவற்றை ஆங்காங்கு அழகுற எடுத்தியம்புகின்றார் காரைக்கால் அம்மையார்.

    சிவன் பிரம கபாலத்திலே பிச்சையெடுத்து உண்ணும் நிலை புராணங்களிலே பேசப்படுகின்றது. அதை எப்படிக் கற்பனை செய்கிறார் பாருங்கள்.

    கழுத்திலே அரவம் ஆட நீ பிச்சையெடுக்கச் செல்லும்போது அதைப் பார்த்துப் பயப்படும் பெண்கள் உனக்குப் பிச்சையிட மாட்டார்கள். எனவே நீ செல்லும் போது, அச்சம் தரும் இந்தப் பாம்பை விட்டுவிட்டுச் செல் என்கிறார்.

    ......... நின்னுடைய
    தீய அரவொழியச் செல் கண்டாய் -தூய
    மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
    விட அரவம் மலோட மிக்கு
    - (57)

    சிவபெருமான் பன்றியின் கொம்பை மார்பிலும் பிறைச் சந்திரனைத் தலையிலும் அணிந்திருக்கிறான். பன்றியின் கொம்பு, பிறைச்சந்திரன் ஆகிய இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருக்கின்றன. இரண்டையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கும் அரவு பிறைமதி எது என்று தெரியாததால்
    அதன் மீது பாய்ந்து பற்றாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு அரவு மதியற்றது என்ற கருத்தில் காரைக்கால் அம்மையார் பாடும் பாடலைப் பாருங்கள்.

    திரு மார்பில் ஏனச் செரு மருப்பைப்பார்க்கும்
    பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
    இது மதியென்று ஒன்றாக இன்றளவும் தேறாது
    அது மதியொன்றில்லா அரா.
    - (40)

    திங்கள் ஒவ்வொரு நாளும் தேய்கிறது. பின் ஒவ்வொரு நாளும் வளர்கிறது. சிவபெருமான் கழுத்தில் அணிந்துள்ள பாம்பு திங்களுக்கு எப்போதுமே பகை அல்லவா? இதைத் தொடர்புபடுத்தி நயம்பட ஒரு கற்பனையை அமைக்கிறார் பாருங்கள்.


    திங்கள் பாம்பைப் பார்த்து அஞ்சும் இயல்புடையது அல்லவா? அதனால் பாம்பு தன்னை அழித்து விடுமோ என்ற அச்சத்தினால் அது நாளும் மெலிந்து தேய்கிறது. தளர்ந்து போன தன் மீது பாயும் போது அதற்கு அஞ்சி நாளும் வளர்கிறதோ என்ற கற்பனையில் வரும் பாடல் இது.

    மறுவுடைய கண்டத்தீர் வார்சடை மேல் நாகம்
    தெறுமென்று தேய்ந்துழலும் ஆ ஆ - உறுவான்
    தளர மீதோடுமேல் தானதனை அஞ்சி
    வளருமோ பிள்ளை மதி
    - (36)

    எலும்பு மாலை அணிந்தவன் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவனாயிற்றே என்று இகழாமல் அவனை வழிபட்டால் எலும்பு யாக்கை கொண்டு மீண்டும் பிறவார். பிறவிப் பிணி தீர்வார் என்கிறார்.

    என்பாக்கையால் இகழாது ஏத்துவரேல் இவ்வுலகில்
    என்பாக்கையாய்ப் பிறவார் ஈண்டு
    - (37)

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 13:43:54(இந்திய நேரம்)