Primary tabs
- 6.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் நாயக்கர்கள் ஆட்சிக் காலம் சிற்றிலக்கிய காலம் என்று சொல்லப்படுகிறது. கி.பி.1350 முதல் கி.பி.1750 முடிய உள்ள காலம் நாயக்கர்கள் ஆட்சிக் காலமாகும். ஏனெனில் இக்காலத்தில் தான் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின. இவை பிரபந்தங்கள் என்று வடமொழியில் வழங்கப்படுகின்றன. வடமொழியில் பிரபந்தங்கள் 96 வகை என்பர். அதற்கேற்பத் தமிழிலும் சிற்றிலக்கியங்கள் 96 என்ற வழக்கு உள்ளது.
சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டு அமைந்தவை என்றாலும் ஓரளவு தமிழகத்தின் வரலாற்றை அறியப் பயன்படுகின்றன. பள்ளு போன்ற இலக்கியங்கள் அக்காலச் சமூக நிலையினை நன்கு எடுத்துரைக்கின்றன. பொதுவாக இறைவன், அரசன், வள்ளல், தலைவன் ஆகியோரின் சிறப்பினை எடுத்துரைத்தலே சிற்றிலக்கியங்களின் பணி எனலாம். தமிழில் சிறப்பாக உள்ள சிற்றிலக்கியங்கள் பரணி, உலா, பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, கோவை, அந்தாதி முதலியன. இனி, இவற்றுள் பிள்ளைத் தமிழ் இலக்கியம் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.