தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க இலக்கியத்தின் சிறப்புப் பிரிவுகள்

 • 1.4 சங்க இலக்கியத்தின் சிறப்புப் பிரிவுகள்

  சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பிரிப்பர். காதலைப் பற்றிப் பாடும் பாடல்களை அகம் என்றும், காதல் தவிர, பிறசெய்திகளைப் பாடும் பாடல்களைப் புறம் என்றும் கூறுவர். இதற்கான இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது.

  அகப்பாடல்கள் கற்பனையான தலைவன், தலைவியின் காதலைப்பற்றி விளக்கியுரைக்கின்றன. புறப்பாடல்கள் நாட்டை ஆளும் அரசனின் வீரம், கொடை, சமூகத்திற்கு அரசன் ஆற்ற வேண்டிய கடமைகள், கல்வியின் சிறப்பு போன்றவற்றைக் கூறுகின்றன. பெரும்பாலான புறப்பாடல்கள் அரசனின் புகழைப் பாடுவனவாகவே உள்ளன.

  பூம்புகார், உறையூர், மதுரை, வஞ்சி போன்ற நகரங்களைத் தவிர, பெரும்பாலும் சிற்றூர்களே அக்காலத்தில் இருந்தமையால் மக்கள் இயற்கையோடு இயைந்த சீரிய வாழ்க்கையை வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

  1.4.1 அகப்பாடல்கள்

  ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதலிப்பது, காதலைத் தோழி மூலம் செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கு மெல்லத் தெரியப்படுத்துவதும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளன. இவ்வாறு காதலைத் தெரியப்படுத்துவதற்கு அறத்தொடு நிற்றல் என்ற பெயரும் உண்டு. பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத சூழலில் காதலனும் காதலியும் ஊரை விட்டு வெளியூர் சென்று விடுதல் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர்.

  அக்காலத்தில் காதலித்த பெண்ணை மணந்து அவளோடு இன்பத்துடன் வாழ்ந்து வரும் தலைமகன் வேறு பெண்களை நாடிச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்குப் பரத்தையிற் பிரிவு என்று பெயர். அதனால் தலைவி அவனிடம் சினம் கொண்டு ஊடல் கொள்ளுதலும் பழக்கமாக இருந்துள்ளது.

  அகப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனைப் பாடல்களாக இருந்தாலும், அக்கால மக்களின் காதல் வாழ்க்கையை முழுமையாகவே வெளிப்படுத்துகின்றன.

  1.4.2 புறப்பாடல்கள்

  புறப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனையாகப் பாடப்படவில்லை. இரு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் போது புலவர்கள் தலையிட்டுப் போரைத் தடுத்துள்ளனர். அரசன் மக்களிடம் அளவுக்கதிகமாக வரி வாங்கும் நேரத்தில் புலவர்கள் தலையிட்டு அரசனுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிகழ்வுகள் புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

  புறப்பாடல்களில் இயற்கைக்கு மீறிய செய்திகள் கூறப்படவில்லை. சங்க கால வரலாற்றைத் தொகுப்பதற்கு, சங்கப் புறப்பாடல்கள் ஓரளவுக்குத் துணை நிற்கின்றன. அரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொண்டாலும் புலவர்களைப் பெரிதும் மதித்துள்ளனர். யாருமே தொட அஞ்சும் முரசு கட்டிலில் ஏறிப்படுத்து உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரைத் தண்டிக்காது, அவர் தூங்கி எழுகின்றவரை கவரி கொண்டு அவருக்கு விசிறினான் சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று புறநானூறு கூறுகிறது.

  அரசன் கோப்பெருஞ்சோழன் மேல் நட்புக் கொண்டிருந்த காரணத்தால், அவன் வடக்கிருந்து உயிர் துறக்கும் நேரத்தில் புலவர் பிசிராந்தையாரும் அவனுடன் உயிர் துறந்தார் எனவும் செய்தி உண்டு. பேகன் என்னும் அரசன் தன் மனைவி கண்ணகியை விட்டு நீங்கி இன்னொருத்தியுடன் வாழ்ந்ததை மாற்றி, கண்ணகியுடன் சேர்த்து வைத்தனர் கபிலரும் பரணரும் என்ற செய்தி கூறப்படுகிறது.

  இவ்வாறு அரச குடும்பங்களின் துன்ப நிகழ்வுகளிலும் புலவர்கள் பங்கு கொண்டு செயல்பட்டமை குறித்த செய்திகள் புறநானூற்றில் உண்டு. மேலும் மலையமான் திருமுடிக்காரியின் சிறு குழந்தைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலில் இட்டு மிதிக்கச் செய்ய முற்பட்டபோது கோவூர்கிழார் கூறியதால் அக்குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர் என்ற செய்தியும் புறநானூற்றில் இருக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2018 16:14:30(இந்திய நேரம்)