தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Saivam - 5.7 குமரகுருபர சுவாமிகள்-5.7 குமரகுருபர சுவாமிகள்

  • 5.7 குமரகுருபர சுவாமிகள

    சைவச்சிற்றிலக்கியங்கள் படைத்தவர்களில் குமரகுருபரருக்குத் தனித்ததொரு சிறப்பிடம் உண்டு. நெல்லை மாவட்டம் திருவைகுண்டம் நகரில் பிறந்தவர். பெற்றோர் சண்முக சிகாமணிக்கவிராயர், சிவகாமசுந்தரி. ஐந்து வயதில் திருச்செந்தூர் முருகன் அருள் பெற்று வாய்பேசும் திறம் பெற்றார்.

    அக்காலை இவர் பாடிய நூலே கந்தர் கலிவெண்பா என்பது. இதனைக் குட்டிக் கந்தபுராணம் என்பர். சிறந்த பாராயண நூல், இவரைத் தருமபுரம் ஆதீனம் 4 ஆவது குரு மூர்த்திகள் மாசிலாமணி தேசிகர் சீடராக ஏற்றுக் கொண்டார். இவர் காசியில் சைவ மடம் ஒன்றை நிறுவினார். அது பிற்காலத்தில் திருப்பனந்தாளுக்கு இடம் பெயர்ந்தது. இவர் இந்தி மொழியிலும் வல்லமை பெற்றிருந்தார். இவர்

    1. கந்தர் கலிவெண்பா
    2. மீனாட்சியம்மை
    பிள்ளைத்தமிழ்
    3. மதுரைக்கலம்பலம்
    4. நீதி நெறி விளக்கம்
    5. திருவாரூர் நான்
    மணிமாலை

    6. முத்துக்குமார சுவாமி
    பிள்ளைத்தமிழ்
    7. சிதம்பர மும்மணிக்கோவை
    8. சிதம்பரச் செய்யுட் கோவை
    9. பண்டாரமும்மணிக் கோவை
    10. காசிக் கலம்பகம்
    11. சகலகலாவல்லி மாலை

    என்ற பல்துறை நூல்களைப் படைத்துள்ளார். அளவற்ற தமிழ் அன்பும், பக்திச் சிறப்பும், இலக்கிய எழிலும், இலக்கண நுட்பமும் இவர் பாடல்களில் நிறைந்து நிற்கும்.

    5.7.1 குமரகுருபரர் நூல்கள்


    ‘பூமேவு செங்கமலப்புத்தேளும்’ என்று தொடங்கும் கந்தர் கலிவெண்பா 122 கண்ணி (இரண்டு அடிகளைக் கொண்ட ஒரு செய்யுள் வகை) களைக் கொண்டது. முருகப்பெருமானை இவர் பலபடப் புகழ்ந்து போற்றியுள்ளார்.

    ஆசு முதல் நாற்கவியும் அட்டாவ தானமும் சீர்ப்
    பேசும் இயல் பல் காப்பியத் தொகையும் - ஓசை
    எழுத்து முதலாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
    பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து
    (கந்.க. வெ. கண்ணிகள் - 118, 119)

    (அட்டாவதானம் = எட்டு வகை ஆற்றல்)

    75 முதல் 86 வரையிலான கண்ணிகளில் கந்தபுராணம் விரித்துரைக்கும் முருகன் திருவவதாரத்தைக் குமர குருபரர் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.

    5.7.2 மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்த பெண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களுள் ஒன்று. ஒரு விநாயகர் காப்பினையும், பத்துப்பருவங்களையும் 100 பாடல்களையும் கொண்டு நடையிடுவது. திருமாலின் தமிழ் அன்பை.

    பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே
    (காப்புப் பருவம் - 2)

    என்று சிறப்பித்துப் போற்றுகிறார். மீனாட்சியம்மையை,

    தென்னர்க்கும் அம்பொன்மலை
    மன்னர்க்கும் ஒரு செல்வி


    என்றும்

    சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி


    (பொலன் = அழகு)

    என்றும்

    ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லி

    (ஆணிப்பொன் = உயர் மாற்றுப்பொன்)

    என்றும் பல படப் பாராட்டிப் போற்றுகிறார். வருகைப் பருவத்தில் மீனாட்சியம்மையை அவர் போற்றிப் பரவும் தொடர்கள் நினைவு கூறத்தக்க சிறப்புடையன.

    தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
       தொடையின் பயனே; நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும்
       சுவையே : அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

    எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
       ஏற்றும் விளக்கே! வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
       இளமென்பிடியே . . .

    (மீ.பிள் தமிழ் - வருகை பாடல் - 9)

    (பழம் பாடல் = வேதம், அகந்தை = ஆணவம், தொழும்பர் = அடியவர், பொருப்பு = மலை, பிடி = பெண்யானை)

    இவ்வாறான அரிய பாடல்களின் அணி வகுப்பாக இந்நூல் திகழ்கிறது.

    5.7.3 முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

    வைத்தீஸ்வரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வமுத்துக் குமார சுவாமி மீது இவர் ஒரு பிள்ளைத் தமிழ் நூல் பாடியுள்ளார். ஆண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களுள் இது முதன்மையானது என்பர். விநாயகர் காப்பு உட்பட இந்நூலுள் 101 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. முருகனை இவர்

    ஆனேறு உயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும்
    அருமருந்தாகி நின்ற ஆதிப்பிரான்
    (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - செங்கீரை - 5)

    என்று குறிப்பிடுகிறார். சிவன் வைத்தியன், அம்மை மருத்துவச்சி, முருகனே மருந்து என்பது குறிப்பு. இந்நூலுள் அம்புலிப்பருவம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. செல்வ முத்துக்குமாரன் அருளும் திறத்தை,

     

        ... எவரெவர்கட்கும்
    ஊன்கண் உளக் கண்ணதாம்
       விழியாக முன்னின்று தண்ணளி சுரந்து அவர்கள்
    வேண்டிய வரம் கொடுப்பான்
    (அம்புலிப் பருவம் 6)

    (எல்லோருக்கும் மனத்துள் இருந்து, எதிரிலும் தோன்றி வேண்டிய வரம் தருவான்)

    என்று பாராட்டி மகிழ்கிறார்,

    அழகு பொலி கந்தபுரி தழைய வரு கந்தன்

    என்றும்,

    தென் கலைக்கும் பழைய வடகலைக்கும் தலைவா

    என்றும் முருகனைப் போற்றிப்புகழ்கிறார்.

    5.7.4 குமரகுருபரரின் பிறநூல்கள்

    நான்மணிமாலை என்பது வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்கு பாடல் வகைகளும் மாறி மாறி வர 40 பாடல்களால் நடையிடுவது. திருவாரூர் நான்மணி மாலையுள் காப்பு உட்பட 41 செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன. சிதம்பர மும்மணிக்கோவை காப்பு உட்பட 31 பாடல்களைக் கொண்டு நடையிடுகிறது. தில்லை நகர்ச்சிறப்பும், நடராஜப்பெருமானின் அருள்திறமும் மிக விரிவாக இந்நூலுள் பாடப் பெற்றுள்ளன. சிதம்பரச் செய்யுட் கோவை ஒரு புதிய முயற்சி. யாப்பருங்கலக் காரிகை என்னும் நூலில் வரும் பாக்கள், பல்வேறு பாவகைகளுக்கு உரிய உதாரணப் பாடல்களாக இந்நூல் அமைந்து தில்லைச் சிறப்புரைத்து நிறைகிறது. குமர குருபரரின் யாப்பியல் புலமைக்கு இந்நூல் சான்றாகிறது. தம் குருநாதர் மாசிலாமணி தேசிகர் மீது குமரகுருபரர் பாடிய 34 பாடல்களில் பண்டார மும்மணிக் கோவை என்பதும் ஒன்று. இது சைவ சித்தாந்தக் கருத்துரைக்கும் போக்கில் அமைந்துள்ளது. குமர குருபரர் இயற்றிய பிறிதொரு கலம்பக நூல் காசிக்கலம்பகம். காசி நகர்ச் சிறப்பும், கங்கை நதிச் சிறப்பும் 101 பாடல்களில் விரிக்கப்பட்டுள்ளது. 10 பாடல்கள் கொண்ட கலைமகள் துதி சகலகலாவல்லிமாலை, இவையன்றி மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லை சிவகாமியம்மை இரட்டை மணிமாலை என்ற மூன்று சிறு நூல்களும் குமர குருபரரால் இயற்றப்பட்டது என்பர். குமர குருபரரின் மதுரைக்கலம்பகம் காப்பு ஒன்றும், பாடல்கள் 102ம் கொண்டு அமைந்துள்ளது. மதுரைச் சொக்கநாதரின் பெருமைகளையும் திருவிளையாடல்புராண வரலாறுகளையும் இந்நூல் நயமுற எடுத்துரைக்கிறது. குமரகுருபரரின் அறமுரைக்கும் பேருள்ளத்தின் வெளிப்பாடாக நீதிநெறி விளக்கம் அமைகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 12:52:11(இந்திய நேரம்)