தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 5.3 பல்வகை நூல்கள் - நூலாசிரியர்கள்-5.3 பல்வகை நூல்கள்

  • 5.3 பல்வகை நூல்கள் - நூலாசிரியர்கள்


    ஒட்டக்கூத்தரை அடுத்து வந்த பல புலவர்கள் அவர் அளவுக்குப் புகழ் பெற்றவர்கள் அல்ல என்றாலும் தம் நூல்களில் சிவ பெருமானைப் பற்றியும் சைவ சமயக் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். திருமுறைகளுக்கும் பிற்காலத்து வந்த தலபுராணங்களுக்கும் இடையில் எழுந்த இந்த நூல்கள் மக்களின் மனத்தை அந்த அளவுக்குக் கவர இயலவில்லை. எனினும் வரலாற்றுத் தொடர்பையும் சிற்றிலக்கிய வளர்ச்சியையும் இடையறாது சென்ற சமய வாழ்க்கையையும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல்கள் அமைந்துள்ளன. எனவே இப்புலவர்களில் சிலரைப் பற்றியும் அவர்கள் நூல்களைப் பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ளலாமா?

    5.3.1 அந்தகக்கவி வீரராகவ முதலியார்

    முருகன் மீதும், சிவன் மீதும் சிறந்த சிற்றிலக்கியங்களைப் படைத்தளித்த மற்றொரு கலைவாணர் அந்தக்கவி வீரராகவ முதலியார் என்பவர். இவர் தொண்டை நாட்டில், செங்கற்பட்டு நகரை அடுத்த பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர். சைவ வேளாள குலத்தினர். பார்வையற்றவர் இவர் பாடிய நூல்கள்

    1. திருக்கழுக்குன்றப் புராணம்
    2. திருக்கழுக்குன்ற மாலை
    3. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    4. திருவாரூர் உலா.
    5. சந்திரவாணன் கோவை

    மற்றும் பல தனிப்பாடல்கள்.


    5.3.2 அதிவீரராம பாண்டியர்

    ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்ற பழமொழி ஒன்று உண்டு. வடமொழி நளன் வரலாற்றை இவர் ‘நைடதம்’என்ற பெயரில் பாடியுள்ளார். தென்காசிப் பகுதியை ஆண்ட அரசர் இவர். இப்பகுதியில் இவர் ஒரு சிவாலயத்தையும் எழுப்பியுள்ளார்.
    காசி நகரின் பெருமையை இவர் ‘காசிக்காண்டம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். மற்றும் கூர்ம புராணம், இலிங்கபுராணம் என்பனவும் இவரால் இயற்றப்பட்டன. சிறுவர்களுக்கு அறம் உரைக்கும் நறுந்தொகை என்ற நூலை இவர் ஆக்கி அளித்தார். அந்நூல் இன்று ‘வெற்றி வேற்கை’என்று அழைக்கப்படுகிறது. கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளியிருக்கும் சிவன் மீது இவர் பாடிய அரிய நூல் ‘திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி’ என்பது. இதனைக் ‘குட்டித் திருவாசகம்’ என்று அழைப்பர். அதில் வரும் ஒரு பாடல்,

    சிந்தனை உனக்குத் தந்தேன்
        திருவருள் எனக்குத் தந்தாய்
    வந்தனை உனக்குத் தந்தேன்
        மலரடி எனக்குத் தந்தாய்
    பைந்துணர் உனக்குத் தந்தேன்
        பரகதி எனக்குத் தந்தாய்
    கந்தனைப் பயந்த நாதா!
        கருவையில் இருக்கும் தேவே

    இவ்வாறான அரிய பாடல்கள் பல இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.

    (வந்தனை = வழிபாடு, பைந்துணர் = மலர்க்கொத்து, பரகதி = வீடு பேறு)

    5.3.3 அருணகிரிநாதர்

    கந்தபுராணத் தோற்றத்தை ஒட்டி, முருகன் புகழ்பாடும் அரிய சந்தக் கவிதைகளைத் தந்தவர் அருணகிரிநாதர். (இவர் திருமாலுக்கும் - முருகனுக்கும் உறவுப் பாலம் அமைத்தவர்). தேவார ஆசிரியர்களைப் போல் முருகன் உறையும் தலங்கள்தோறும் சென்று இவர் திருப்புகழ் பாடினார். அவை திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றன. இவர் பாடல்கள் தன்னிரக்க உணர்வைத் தருவன. மங்கையர் மையலில் தாம் ஆட்பட்டுச் சுழன்றதை விரிவாகக் கூறியுள்ளார். தமிழ் மக்கள் போற்றி வளர்த்த இசைச் சந்தங்(ஓசை)களும் பலவண்ணங்(இசை மரபு)களும் திருப்புகழில் நன்கு பயன்கொள்ளப்பட்டுள்ளன. தேவாரங்களைப் போல் திருப்புகழுக்குப் பண் அடைவு(பிரிவு)கள் வகுக்கப்படவில்லை. அறுபடை வீடுகளின் சிறப்பும், முருகனின் அருள்திறமும், வீரச் செயல்களும் வள்ளி, தேவானை மணமும் திருப்புகழில் நயமுறப் பேசப்பட்டுள்ளன.

    5.3.4 திருப்புகழ்

    திருப்புகழ் என்ற தொகுப்பில் 1324 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அருணகிரிநாதர் இயற்றியனவாக

    1. திருவகுப்பு கந்தர் அந்தாதி
    2. கந்தர் அலங்காரம்
    3. கந்தர் அனுபூதி
    4. வேல் விருத்தம்
    5. மயில் விருத்தம்
    6. சேவல் விருத்தம்
    7. திருஎழுகூற்றிருக்கை

    அருணகிரிநாதர்

     


    திருஎழுகூற்றிருக்கை

    பஞ்சபூதத்தலங்கள்

    என்ற எட்டுச் சிறு நூல்களும் கிடைத்துள்ளன. திருப்புகழ்த் தொகுப்பில் திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் என்ற தலைப்பில் 16 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை நூற் பெருமையும், நூலாசிரியர் சிறப்பும் பேசி நிற்கின்றன. முதலாவதாகக் ‘கைத்தலம் நிறை கனி’ என்ற விநாயகர் வணக்கப்பாடல் அமைந்துள்ளது. நூலின் முதலில் ‘முத்தைத்தரு’ என்று தொடங்கும் அரிய சந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது. 1. படை வீடுகள் 2. பஞ்சபூதத்தலங்கள் 3. பிற தலங்கள் என்ற வரிசையில் நூல் அமைந்துள்ளது. நிறைவில் சிறு நூல்களும், கடைசியில் திருவெழு கூற்றிருக்கையும் அமைக்கப்பட்டுள்ளன. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 160. பிற தலங்களை இணைத்துப் பேசும் க்ஷேத்திரக் கோவைத் திருப்புகழ் ஒன்றும் தொகுப்பில் உள்ளது.
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 13:29:41(இந்திய நேரம்)