Primary tabs
6.1 தலபுராணங்கள்
சமய வாழ்க்கை என்பது அளவற்ற நம்பிக்கையைப் பற்றுக் கோடாகக் கொண்டு அமைவது. சிறப்பு மிக்க, இறைவன் அருள் வெளிப்பட்ட தலங்களும், அடியவர்கள் துன்பநீக்கம் பெற்று மகிழ்ந்த தலங்களும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன, பயண வசதிகள் இல்லாத காலங்களிலும் மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்து இத்தகு தலங்களைச் சென்று வழிபட்டு மகிழ்ந்தனர். தாங்கள் வாழும் ஊரில் சிவாலயம் இருக்கவும் அங்கே சென்று வழிபடாது, குறிப்பிட்ட தலங்களை நாடிச் செல்லும் போக்கு உருவாயிற்று. எல்லாத் தலங்களிலும் இருக்கும் இறைவன் ஒருவனே. எங்கே வேண்டுமானாலும், உண்மையான அன்பு பூண்டு, ஈடுபாட்டுடன் வழிபட்டால் இறைவன் அருளைப் பெற முடியும் என்ற எண்ணத்தைத் தேவார ஆசிரியர்கள் வளர்த்தனர். அதையொட்டி அறிஞர்கள், தத்தம் ஊர் குறித்த சிறப்புகளைப் புராணங்களாக எழுதி வெளியிட்டு மக்களை ஈர்க்க முற்பட்டனர். தலப்பெருமை, எழுந்தருளியுள்ள இறைவன் (மூர்த்தி) அருள் செயல்கள், துன்பத்தையும் நோய்களையும் நீக்கி நலம் அளிக்கவல்ல நீர் நிலைகள் (தீர்த்தம்) ஆகியவற்றின் சிறப்புகளை இத்தகு நூல்கள் விரித்துரைத்தன. வரலாற்று நிகழ்வுகள், செவிவழிச் செய்திகள் இவற்றோடு, சில கற்பனைக் கூறுகளையும் கலந்து இயற்றப்பட்ட தலபுராணங்கள் மக்களை உள்ளூர் ஆலயத்தின் பெருமையை உணர்ந்து வழிபடத் தடம் அமைத்தன. பெரும்புலமை மிக்க கவிஞர்கள் இம்முயற்சியில் ஈடுபட்ட காலை பெருங்காப்பியங்களுக்கு இணையாகத் தலபுராணங்கள் சிறப்புப் பெற்றன. சமய நம்பிக்கை பெருகவும், தத்துவக்கூறுகள் விளக்கம் பெறவும் தலபுராணங்கள் பெரிதும் துணை நின்றன.
6.1.1 தலங்களின் சிறப்புகள்
குறிப்பிட்ட சில தலங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. சிவத் தலங்கள் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிப் பலவாறாகப் பாகுபடுத்தப்பட்டன. எண்ணிக்கையிட்டுத் தனித்துச் சுட்டப்பட்டன.
1. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்
2. திருவாசகப் பாடல் பெற்ற தலங்கள்
3. திருவிசைப்பாப் பாடல் பெற்ற தலங்கள்
4. திருப்புகழ்ப் பாடல் பெற்ற தலங்கள்
5. சிவன் திருவிளையாடல் நிகழ்த்திய தலங்கள்
6. அட்ட வீரட்டத் தலங்கள்
7. சப்த விடங்கத் தலங்கள்
8. பஞ்ச பூதத் தலங்கள்
9. முத்தித் தலங்கள்
10. நாயன்மார் வாழ்வில் அற்புதம் நிகழ்ந்த தலங்கள்
11. புராண வரலாற்று நிகழ்வு குறித்த தலங்கள்
12. மகரிஷிகளும், மாமுனிவர்களும் வழிபட்ட தலங்கள்
13. குறித்த நோய் தீர்க்கும் தலங்கள்
14. சித்தர்கள் வாழ்ந்த தலங்கள்என்றெல்லாம் சிவத்தலங்களும், முருகத்தலங்களும் தனித்தனியாக எடுத்து முன் நிறுத்தப் பட்டன. இவற்றை எல்லாம் தலபுராணங்கள் உள்வாங்கிக் கொண்டு இலக்கிய எழிலோடு கிளைத்தன. இத்தகு தலபுராணங்கள் தமிழ் மொழியில் இருநூற்றுக்கும் மேலாக உள்ளன. எனினும் இவை சேக்கிழாரின் பெரியபுராணத்தைப் போல் வரலாற்றுச் சிறப்பினைக் கொண்டு அமைந்தில.