Primary tabs
-
இவ்வாறே சைவ மக்களின் பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றாகிய புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) குறித்த தலபுராணம் ஒன்றை, காத்திருப்பு வடுக நாத தேசிகர் என்பார் இயற்றியுள்ளார். 1133 பாடல்களால் இந்நூல் அமைந்துள்ளது. சீகாழித்தலபுராணம் அருணாசலக்கவிராயரால் இயற்றப்பட்டுள்ளது. அட்ட வீரட்டத் தலங்களுள் மன்மத தகனம் நிறைவுற்ற திருக்குறுக்கை மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உடல் நோய் நீங்கிய திருத்துருத்தி (குத்தாலம்) தலபுராணங்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் பாடப் பெற்றுள்ளன. இவ்வாறாக, தல புராணங்கள் பலப்பல சைவத் திருக்கோயில்களைச் சார்ந்து கி.பி. 17,18,19 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்தன. இவை அரிய வரலாற்றுப் பதிவுகளாகவும், புலமை மிடுக்குடனும் அமைந்து தமிழ் மொழிக்கு அணிகலன்களாகத் திகழ்கின்றன.
தமிழில் முருகன் மீது பாடப்பட்ட பேரிலக்கியங்களுள் தலையானது கந்தபுராணம். இந்நூல் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த கச்சியப்ப சிவாசாரியார் என்ற அருளாளரால் இயற்றப்பட்டது. வடமொழி ‘ஸ்காந்த’த்தை இவர் தமிழில் செய்துள்ளார். ‘திகடசக்கர’ என்று முருகப் பெருமானே அடி எடுத்துத்தர இவர் இந்நூலைப் பாடினார் என்பர். கம்பனின் இராமகாதைப் போக்கில் இணைக்காப்பியமாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது. முருக பக்தர்களால் இந்நூல் பாராயண நூலாகக் கொள்ளப்பட்டு வருகிறது. சைவ வழிபாடும் முருக வழிபாடும் வேறன்று: ஒன்றே என்பதை ஆசிரியர் இந்நூலில் விரித்துரைத்துள்ளார். சிவன், உமை ஆகியோர் பெருமைகளையும் இந்நூல் விரிவாகப் பேசிக் காட்டுகிறது.
அருவமும் உருவம் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய(கந்தபுராணம் - 1-11-92 )
சிவனே முருகனாக திருவவதாரம் செய்திருப்பதாக இப்பாடல் தெரிவிக்கிறது. இந்நூல் வாழ்த்துப் பகுதியில்(கந்தபுராணம் -வாழ்த்து - 5)என்ற சிறந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இயற்கை சிறந்து மழை பொழியவும், நாட்டில் நல்லாட்சி நிலவவும் வேண்டுவது சைவர்களின் பெரும்பண்பாகக் காணப்படுகிறது.