தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Saivam - 6.6 மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை-6.6 மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  • 6.6 மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

    ஒரு தனி மனிதன் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ முடியும் என்பதை 19 ஆம் நூற்றாண்டில் நிறுவிக்காட்டிய பெருந்தமிழ் அறிஞர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. ‘பிற்காலக் கம்பர்’ என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுவர். படித்தல், பாடம் சொல்லுதல், நூல்கள் யாத்தல் என்பனவற்றையே வாழ்வாகக் கொண்டிருந்த இவர் இயற்றிய தல புராணங்கள் பல. 19-ஆம் நூற்றாண்டு வரை தலபுராணம் பாடப்பெறாத சிவதலத்தில் வாழ்ந்திருந்த சைவ அன்பர்களும், பெருஞ்செல்வர்களும் இவரைத் தம் ஊருக்கு அழைத்துச்சென்று, பெருஞ்சிறப்புகள் செய்து தம் ஊருக்குத் தலபுராணங்கள் ஆக்கித் தருமாறு வேண்டிப் பெற்றனர். தமிழ் மொழியில் இவரே அதிக எண்ணிக்கையிலான தல புராணங்களைப் பாடியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடிய திருநாகைக் காரோணப் புராணமும், மாயூரப் புராணமும் பெருங்காப்பியங்களாகப் போற்றப்படும் சிறப்பு மிக்கன. 

    • பெருமித வாழ்வு

    மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த மரபுவழித் தமிழ்ப்புலவர் சிதம்பரம் பிள்ளை என்பவர் மகவாக, சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் உள்ள சிற்றூர் எண்ணெயூரில் பிறந்தார். கி.பி. 1815 இல் பிறந்த இவர் தம் தந்தையாரிடமே தமிழ் கற்றுச் சிறந்தார். இளவயதிலேயே காவேரி என்ற நற்குணநங்கையை மனைவியாக அடைந்து திருச்சிராப்பள்ளியில் குடியேறினார். சென்னை சென்று காஞ்சிபுரம் சபாபதி முதலியார் முதலியோரிடம் பாடம் கேட்டுப் புலமை வளம் பெற்றார். திருச்சிராப்பள்ளியில் தம்மை நாடிவந்த ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்பித்தார். திருவாவடுதுறை சென்று 15ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கிய அம்பலவாண தேசிகரிடம் ஞானநூல்களைக் கற்றறிந்தார். பிற்காலத்தே இவரிடம் தியாகராசச் செட்டியார், உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர் நாவலர், சவுரிராயலு நாயக்கர் முதலிய பெரும்புலவர்கள் பாடம் கேட்டுச் சிறந்தனர்.

    6.6.1 மாயூரப்புராணம்

    அக்காலத்தில் சீகாழியில் முன்சீப்பாகப் பணியாற்றிய வேதநாயகர் என்பவரோடு மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு நட்பு மலர்ந்தது. பின் மயிலாடுதுறையில் நெடுநாள் தங்கியிருந்து மாணாக்கர்களுக்குத் தமிழ் கற்பித்தார். திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகா வித்துவான் என்ற பட்டம் அளித்துப் பாராட்டினார். நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியார் இவர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் 1876 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவரது விரிவான வாழ்க்கை வரலாற்றை மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற தலைப்பில் உ.வே.சாமிநாத ஐயர் உரை நடையில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.

    இவர் மயிலாடுதுறையில் தங்கியிருந்த போது அன்பர்கள் வேண்டுகோளை ஏற்று இவர் மாயூரப் புராணம் பாடி அரங்கேற்றினர். இவர் இயற்றிய மாயூரப்புராணம் 1895 செய்யுட்களால் அமைந்துள்ளது. 64 படலங்கள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.

    • மாயூரத்தலச் சிறப்புகள்

    மயிலாடுதுறை என்ற பழம் பெயர் கொண்ட நகரம் பிற்காலத்தில் மாயூரம் என்று மருவியது. காவிரி வடகரை பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று. இறைவர் மாயூரநாதர். அம்மை அம்சொல்நாயகி. அபயாம்பிகை என்பதே பெருவழக்கு.  திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடியுள்ள தலம். அருணகிரியாரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உண்டு. கிருஷ்ண ஐயர் என்பார் பாடிய அபயாம்பிகைச்சதகம் என்ற நூல் அம்மை அருள் திறம் உரைக்கும் நயம்மிக்கது. ஐப்பசி மாதம் முழுவதும் இத்தலத்தில் ‘துலா உற்சவம்’ நடைபெறும். மாதக் கடைசி நாளில் நடைபெறும் ‘கடை முகம்’ என்ற நீராட்டுப் பெருஞ் சிறப்பு மிக்கது. மயிலாடுதுறையைச் சுற்றிலும் பாடல்பெற்ற சிவத்தலங்கள் பல உள்ளன. இத்திருக்கோயில் பெருமை குறித்து அமைந்த தலபுராணமே மாயூரப்புராணம் என்பது. வடமொழியில் நிலவியிருந்த மாயூர மான்மியம் என்ற நூலையே தாம் தமிழில் செய்துள்ளதாக ஆசிரியர் குறித்துள்ளார். அவையடக்கப் பகுதியில் 9 செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன.

    6.6.2 அவையடக்கம்

    உமையம்மை மயில் உருக்கொண்டு சிவபெருமானைப் பூசித்த தலம் இது. காகம் ஒன்றும் ஒருகால் சிவ பெருமானை அன்புடன் பூசித்துப் பேறு பெற்றது என்பது புராண வரலாறு. அவையடக்கத்தில் இவற்றை நினைவு கூரும் ஆசிரியர், மயிலின் பூசையை ஏற்றருளிய மயூரநாதப் பெருமான், காகத்தின் பூசையையும் ஏற்றருளிய கருணையாளன் என்பதால், பெருங்கவிஞர்களின் பாமாலைகளைச் சூட்டிக் கொண்டு மகிழ்ந்த பெருமானுக்கு என் புன்கவியும் ஏற்புடையதாகவே அமையும் என்று அமைதி காட்டுகிறார்.

    சோழ நாட்டின் ஐந்திணை வளம் கூற விரும்பும் ஆசிரியருக்கு இப்பகுதியில் மலைகள் இல்லையே என்ற ஏக்கம் மிகுகிறது. எனினும் வேறுவகையில் தம் கற்பனைத் திறத்தால் அதனை ஈடு செய்கிறார். சோழநாட்டில் திரிசிராமலை (திருச்சி மலைக்கோட்டை), எறும்பியூர் (திருவெறும்பூர்), வாட்போக்கி மலை, சுவாமிமலை என்பன உள்ளமையால் இங்கே குறிஞ்சி வளமும் உண்டு என்று நயம்பட உரைக்கிறார்.

    • ஆசிரியர் - புலமை நலம்

    மாயூரம் நகரில் கருப்பங்காடுகளும், மாஞ்சோலைகளும் செறிந்திலங்கும் திறம் (நிலை) திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அடியவர் கூட்டங்களுடன் கலந்திருத்தலை நினைவூட்டுவதாகக் காட்டுகிறார். காசி, குருச் சேத்திரம் முதலான தலங்களைவிட மாயூரம் மேம்பட்ட தலம் என்பதனைச் சுட்டுகிறார்.

    • தொன்னூல் பயிற்சி

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் புலமை மாட்சி வியப்பூட்டும் பெருமிதம் மிக்கது. சங்க நூல்கள், காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அவர் கல்லாத தொன்னூல்களே இல்லை என்பதை அவர் நூல்களால் அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள ஆய்ச்சியர் குரவையை ஒட்டி முருகவேளைப் புகழ்ந்து அவ்வாறே ஒரு பாடல் செய்கிறார்.

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாய் என்ன வாயே
    வள்ளி மணவாளனைப் பேசா வாய் என்ன வாயே
    (அகத்தியர் பூசைப்படலம் - 22)

    (கடி = மணம், படி = உலகம், பிரான் = தலைவன்)

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 17:14:19(இந்திய நேரம்)