Primary tabs
-
4.4 உரைநடை பற்றிய செய்திகள்
உரைநடை பற்றிப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலும் இறையனார் களவியல் உரையிலும், உரையாசிரியர்களின் உரைகளிலும் இடம் பெற்றுள்ள உரைநடை பற்றி இனி பார்ப்போம்.
இலக்கியத்தில், உணர்த்தலுக்குச் செய்யுளே பெரும்பகுதி பயன்பட்டிருந்தாலும், உரைநடையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளதற்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சான்றுகள் உள்ளன. உரைநடை படைப்புத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டதற்குத் தொல்காப்பியம் சான்று கூறுகின்றது. உரைநடையும் பாட்டும் கலந்த நூல்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்தன என்பதை,
தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே
என்ற தொல்காப்பிய நூற்பா ஒன்று உணர்த்துகின்றது.
‘உரைவகை நடையே நான்கென மொழிப’ என்ற இன்னொரு நூற்பா ‘நால்வகை உரைநடைகள்’ இருந்ததைக் கூறும். பாட்டைப் போலவே உரையும் முற்காலத்தில் செப்பமாகச் செய்யப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. அதனால் பாட்டுடன் உரையினையும் தொல்காப்பியம் செய்யுள் வகையுள் ஒன்றாகவே கொண்டது. அவ்வாறு பொதுச்சொல்லால் குறித்த போதும், இரண்டுக்குள்ளும் வேற்றுமை இருந்ததால் ஒன்றைப் பாட்டு என்றும், மற்றொன்றை உரை என்றும் குறித்தது. இதன்மூலம் உரைநடை பாட்டிலிருந்து தோன்றி, பின் வேறுபட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
பாட்டைத் தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பது அறிஞர்கள் கருத்தாகும். அந்த உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் அறிந்து கொள்ள முடிவது, தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில்தான். அதன் பதிகத்தில்,
வாழ்த்து வரந்தரு காதையொடு
இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
என்று உரை பற்றிய குறிப்பு வருகின்றது.
சிலப்பதிகாரத்திலுள்ள கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்னும் பகுதிகளில் உரைப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை தமிழ் உரைநடையின் ஆரம்பநிலை எனலாம். மேலும் சிலப்பதிகாரத்தில் இசைத் தமிழ், நாடகத் தமிழ்ப் பகுதிகளில் உரைப்பகுதி வருவதால், முற்காலத்தில் இசை, நாடகத் தமிழிலேயே உரைநடை முதன்முதலாகக் கையாளப்பட்டது எனக் கொள்ளலாம்.
தமிழ் உரைநடை வரலாற்றிலே சிறப்பிடம் பெறுவது இறையனார் களவியல் உரையாகும். இதனையே முதல் உரைநடை என்று கூறுவாரும் உண்டு. இதன்காலம் கி.பி.7 அல்லது 8ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இறையனார் களவியல் உரையினை ஆராய்ந்தவர்கள், அதன் உரைநடை இரண்டு விதமாக அமைந்திருப்பதாகக் கூறுவார்கள்.
(1) ஒரு பொருளைக் குறித்துக் கேள்வி கேட்டுப் பதில் பெறுவது போன்ற உலக வழக்கு உரையாடல்.
(2) ஓசைப் பண்புடைய செய்யுள் நடை போன்ற உரையாடல் என்பனவே அவையாகும். இது சிலப்பதிகார உரைநடையிலிருந்து சிறிதே வேறுபட்டு நிற்கிறது. எடுத்துக்காட்டாக, ‘அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாம் கூவி, ''வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின் என்றான்'' என்ற உரைநடைப் பகுதி ஓரளவு எளிமையாக அமைந்துள்ளதைக் காணலாம்.
கி.பி.10ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதி ‘உரையாசிரியர் காலம்’ எனப்படும். அதற்குக் காரணம், அக்காலப் பகுதியில்தான் இளம்பூரணர் முதல் நச்சினார்க்கினியர் வரை இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் எளிமையான உரைகளை எழுதினர். பண்டை நூல்களாகிய தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலியனவற்றிற்கு உரைகள் எழுதப்பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களுக்குத் தத்துவ விளக்கங்கள் உரைகளாகத் தரப்பட்டன. இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் எனப் பல உரையாசிரியர்கள் உரை எழுதி உரைநடை வளர்ச்சிக்கு உதவினர்.
கல்வெட்டும் உரைநடையும்
பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றை மூன்று பிரிவுகளாகக் கொள்ளலாம்.
தனித் தமிழில் அமைந்தவை ஒரு வகை.
ஒரு பகுதி தமிழ் மொழியும், ஒரு பகுதி வடமொழியுமாக அமைந்தவை.
இடையிடையே வடமொழிச் சொற்கள் அமைக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் என்பனவே அவையாகும்.
மணிப்பிரவாள உரைநடை
மணி என்பது முத்து. பிரவாளம் என்பது பவளம். முத்தையும் பவளத்தையும் மாறிமாறி ஒரு மாலையில் கோத்தது போல வடசொற்களையும் தமிழ்ச் சொற்களையும் சரிக்குச்சரி கலந்து எழுதிய தொடர்மொழி நடை என்பது அதன் பொருளாகும். சமண, பௌத்த நூல்கள், வைணவ உரைகள் மணிப்பிரவாள உரைநடைக்கு வித்திட்டன.