தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.1-தத்துவம்

  • 6.1 தத்துவம்


        தனி மனித மேம்பாட்டிற்குத் துணை நிற்கும் குறிக்கோள்களைப்
    பற்றிப் பேசுவதைத் தத்துவக் கருத்து என்பர். இது பொதுவாக
    இறை அல்லது இறைவன், உயிர், உலகம் என்னும் மூன்று
    பொருள்களையும் அவற்றின் தொடர்புகளையும் விளக்கும்.
    இக்கருத்தைக் கடவுளோடு தொடர்புபடுத்தும்பொழுது சமயத்
    தத்துவம் என்றும், தனிமனிதனோடு தொடர்புபடுத்தும்பொழுது
    பொது தத்துவம் என்றும் குறிப்பிடுவர்.

    • தத்துவத்தின் வாழ்வு

        தத்துவக் கருத்துகள் காலம் கடந்தும் வாழ்பவை. ஏன்? உலகம்,
    உயிர் ஆகியவை பற்றிய ஆய்வு இடைவிடாது நடந்துகொண்டே
    இருக்கிறது. எனவே அவற்றைப் பற்றி விளக்க முயலும்
    தத்துவக்கருத்துகளும் என்றும் வாழும். காலம் கடந்து இன்றும்
    வாழ்கின்ற பல தத்துவக் கருத்துகளை வள்ளுவர் வழங்கியுள்ளார்.

    6.1.1 இறைவன்


        கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் சொல்லப்படும் கருத்துகள்
    இறைவனைப்     பற்றிய     வள்ளுவரின்     சிந்தனைகளை
    வெளிப்படுத்துவனவாக உள்ளன. எழுத்துகள் எல்லாம் அகரத்தை
    (‘அ’ என்னும் எழுத்தை) அடிப்படையாகக் கொண்டிருப்பதைப்
    போல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று
    கூறும் வள்ளுவர், கடவுள் என்றால் யார் என்பதற்குப் பல
    விளக்கங்கள் கொடுக்கிறார்.

    • விளக்கங்கள்

        தூய அறிவுடையவன் (குறள்:2); விருப்பு வெறுப்பு இல்லாதவன்
    (குறள்: 4); மயக்கம் தரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினையும்
    இல்லாதவன் (குறள்: 5); ஐம்பொறிகளின் வழியாகக் கொண்ட
    ஐவகை ஆசைகளையும் விட்டவன் (குறள்: 6); தனக்கு ஒப்பு
    இல்லாதவன் (குறள்: 9) என விளக்கங்கள் பல இறைவனைப் பற்றித்
    தருகிறார் வள்ளுவர். மனிதர்களுக்கு இல்லாத இயல்புகள் இவை.
    எனவே அவற்றை உடைய ஒருவன் உலகத்தையும் கடந்து நிற்கின்ற
    கடவுளாக விளங்குகின்றான்.

    • மனிதனும் கடவுளும்

        விருப்பு, வெறுப்பு உடையவன் மனிதன். விருப்பு வெறுப்பு
    இல்லாதவன் இறைவன்.     தீவினை, நல்வினை எனும்
    இருவினைகளையும் உடையவன் மனிதன். இந்த இருவினைகளுக்கும்
    அப்பாற்பட்டவன்     இறைவன்.     புலன்களின் ஆசைக்குக்
    கட்டுப்பட்டவன் மனிதன். புலன்களுக்குக் கட்டுப்படாதவன் இறைவன்.
    மனிதர்களிடமுள்ள இத்தகைய இயல்புகள் இல்லாமையால், தனக்கு
    ஒப்பு இல்லாதவன் இறைவன் என்கிறார் வள்ளுவர். இக்கருத்தையே
    எல்லாச் சமயங்களும் கூறுகின்றன.

    • இலக்கணம்

        ‘இறைமை’ அல்லது இறைவன் என்பதற்கு ஓர் இலக்கணம் அமைக்க
    வேண்டுமானால், அதற்குப் பொருத்தமாகவும் எல்லோரும் ஏற்றுக்
    கொள்ளும் வகையில் இருப்பது இறைவன் பற்றி வள்ளுவர் கூறும்
    தத்துவங்களே. எனவே இன்றும் வள்ளுவர் வாழ்கிறார்.

    6.1.2 உயிர்


        மனிதன், விலங்கு, புள்ளினம், தாவரம் ஆகியவற்றின் எல்லா
    இயக்கங்களுக்கும் (Sign of life) அடிப்படையாக அமைந்திருக்கும்
    ஆற்றலை உயிர் என்கின்றோம். அந்த உயிர் அழியாத ஒன்று
    என்பது சமயத்தைச் சார்ந்தவர் நம்பிக்கை. தமிழில் உயிரை ‘மன்
    உயிர்’ (மன் = நிலைத்த) என்று அழைப்பர். இந்த உயிர் உடலில்
    நிலைத்து இருப்பதில்லை. ஒரு கால கட்டத்தில், உடலை விட்டு
    உயிர் பிரிந்து சென்றுவிடும். இது உலகின் இயற்கை. இது மாறா
    உண்மை. உலகிலுள்ளோர் ஒத்துக் கொண்ட உண்மை. இந்த உலக
    வாழ்வியல் உண்மையை ஒரு சிறந்த எடுத்துக்காட்டின் மூலம்
    வள்ளுவர் விளக்குகிறார்.


    குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே
    உடம்போடு உயிரிடை நட்பு



    (குறள்: 338)


    (குடம்பை = முட்டைஓடு, ஒழிய = நீங்க, புள் = பறவை,
    பறந்தற்றே
    = பறந்தது போல, இடை = இடையிலான)

        இந்த உடம்புக்கும், உயிருக்கும் இடையிலான நட்பு, தான்
    குடியிருந்த முட்டை ஓடு தனித்துக் கிடக்க, அதனுள்ளிருந்து பறவை
    பறந்து சென்றதைப் போலாகும் என்கிறார் வள்ளுவர்.

        இந்த உடம்பிலிருந்து உயிர் எந்தக் கணத்திலும் பிரிந்து செல்லலாம்;
    இந்த உடம்பிற்கும் உயிருக்குமுள்ள தொடர்பு அத்தகையது என்ற
    உண்மையை எல்லோருக்கும் அறிமுகமான ஓர் எளிய உவமை
    வாயிலாக விளக்குகிறார் வள்ளுவர்.

    • கூடும் முட்டையும்

        குடம்பை என்பதற்குக் கூடு என்றும் பொருளுண்டு. எனவே,
    உடனிருந்த கூடு பின்பு பிரிந்து தனித்துக் கிடக்க, அதனுள்ளிருந்த
    பறவைக்குஞ்சு பறந்து போனது போல், உடலை விட்டு உயிர்
    பிரிந்து சென்று விடுகிறது என்றும் பொருள் கூறுவர். ஆனால்,
    பறவை, தான் ஒருமுறை கட்டிய கூட்டில் மறுபடியும் முட்டையிட்டுக்
    குஞ்சு பொரிக்கும் மரபு உண்டு. ஆனால் முட்டையிலிருந்து
    வெளிப்பட்ட குஞ்சுதான் மீண்டு அந்த முட்டைக்குள் வராது.
    எனவே குடம்பை என்பதற்கு ‘முட்டை‘, முட்டைக்கூடு எனப்
    பொருள் கொள்வதே சிறப்பாக அமையும். உடல்வேறு, உயிர்வேறு;
    உடலை விட்டு உயிர் பிரிந்து செல்வது என்பது தவிர்க்க இயலாத
    ஒன்று. அது இயற்கை. என்றும் மாறாத இந்த உண்மையை
    வள்ளுவர் உவமை ஒன்றின் வாயிலாகச் சுட்டுகிறார். வள்ளுவரின்
    இந்தக் கருத்திற்கு அல்லது தத்துவத்திற்கு அழிவு ஏது?

    6.1.3 உலகம்


        உலகத்தின் நில அமைப்பைப் பற்றியும், அதன் இயற்கைத்
    தன்மையைப் பற்றியும், வாழும் மக்களைப் பற்றியும் பலர் பல
    கருத்துகளை வழங்கியுள்ளனர். வள்ளுவரும் தாம் கூர்ந்து கவனித்து
    தெரிந்து கொண்ட உண்மைகளின் அடிப்படையில் இயற்கையைப்
    பற்றிச் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

    • நீரும் தேவையும்

        கடலால் - கடல் நீரால் சூழ்ந்தது இந்த நில உலகம். நீரால் சூழ்ந்த
    இந்த உலகத்திலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு இன்னுமொரு நீர்
    தேவை. அது மழை நீர். மழை நீர் இல்லாவிட்டால், இந்த உலகில்,
    ஒரு புல் கூட முளைக்காது. உயிர்கள் வாழா. மழையின் இந்த
    இன்றியமையாமையை ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரத்தில்
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
    உள்நின்று உடற்றும் பசி



    (குறள்: 13)


    (விண் = வானம் (வானத்திலிருந்து பெய்யும் மழை),
    பொய்ப்பின்
    = பெய்யாது பொய்க்குமானால், விரி நீர் = பரந்த
    கடல்நீர், வியன் = அகன்ற, உள்நின்று = உள்ளே நிலைத்து நின்று,
    உடற்றும்
    = வருத்தும்)

    உரிய காலத்தில் மழை பெய்யாது நின்று விடுமாயின், கடல் நீரால்
    சூழப்பட்டிருக்கும் இந்த அகன்ற உலகத்தில், பசி நிலைத்து நின்று
    உயிர்களை வருத்தும் என்கிறார் வள்ளுவர்.

    • மழையும் உலகமும்

        ஏனைய சிறப்புகள் பல பெற்றிருந்தாலும் கூட, மழை என்ற ஒன்று
    இல்லாவிட்டால், இந்த உலகில் உயிர்கள் வாழ இயலாது. அதனால்
    இந்த உலக இயக்கமே நின்றுவிடும். எனவே பெய்ய வேண்டிய
    காலத்தில் மழை பெய்தால்தான் உயிர்கள் வாழும், உலகம் இயங்கும்
    என்கிறார் வள்ளுவர்.

        மழை பெய்தால்தான் இந்த உலகத்தில் உயிர்கள் வாழும் என்று
    கூறிய வள்ளுவர், மழையின் நீரைத் தவிர இந்த உலகில்
    வாழ்வதற்கு வேறு நீர் எதுவும் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

        மழையைப் பற்றி - மழை நீரைப் பற்றிப் பல்வேறு வகையான
    அறிவியல் ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. புதிய புதிய
    கண்டுபிடிப்புகள் வெளிவருகின்றன. அவற்றால் நாளுக்கு நாள்
    முன்னைய கருத்துகள் பல மேம்பாடு அடைகின்றன, மாறுகின்றன.
    ஆனால் மழையின் இன்றியமையாமையைப் பற்றி மட்டுமே
    வள்ளுவர் கூறிய கருத்துகள் மாறாத் தன்மையுடன் திகழ்கின்றன.
    எனவேதான் அறிவியல்அறிஞர், பேராசிரியர், வா.செ. குழந்தைசாமி
    அவர்கள், ‘மனித சமுதாய வாழ்விற்கு நீரின் தேவை இருக்கும்
    வரை வள்ளுவரின் ‘வான் சிறப்பு’ ஏற்கப்படுவதாகவே இருக்கும்‘
    என்று குறிப்பிடுகிறார்.

        உலகம் பற்றி, உலகிலுள்ள உயிர்கள் பற்றி, அவற்றின் உயிர்
    வாழ்விற்குத் தேவையான மழையைப் பற்றி வள்ளுவர் கூறிய
    கருத்துகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன; என்றும் வாழும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:32(இந்திய நேரம்)