தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.4

  • 6.4 இயற்கை


        இயற்கையில் சில பொதுத் தன்மைகள் அமைந்திருக்கின்றன. அவை
    என்றும் எச்சூழலிலும் மாறாத உண்மையைக் கொண்டிருக்கின்றன.
    இவ்வுண்மையை எல்லோராலும் தெரிந்து கொள்ள இயலாது. தனது
    பட்டறிவின் வாயிலாகவும், கூர்ந்து கவனிப்பின் வாயிலாகவும், தனது
    அறிவாற்றலாலும் மட்டுமே இயற்கையின் இத்தகைய உண்மைகளை
    அறிய     இயலும். உலகத்தைப்பற்றி,     உலக மக்களின்
    வாழ்க்கையைப் பற்றி, உலகமக்களின் மனநிலையைப் பற்றி,
    அவர்களின் பண்புகளைப் பற்றித் தனது ஆழ்ந்த புலமையாலும்,
    பட்டறிவினாலும் நன்கு அறிந்த வள்ளுவர் இயற்கையைப்பற்றியும்,
    இயற்கையில் காணப்படும் பொது உண்மைகளைப் பற்றியும் நன்கு
    அறிந்திருக்கிறார்.

    6.4.1 மழை


        மழைபெய்யாவிட்டால் ஒரு புல்கூட முளைக்காது (குறள் :16);
    மக்கள் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் வருந்துவர் (குறள் :13);
    என்று கூறி மழையினால் தான் இந்த உலகம் இயங்குகிறது -
    வாழ்கிறது என்று கூறுகிறார் வள்ளுவர். மேலும், உலகத்தை
    வாழவைக்கிற மழையிடம் உலகத்தை அழிக்கும் தன்மையும்
    அமைந்து உள்ளது என்கிறார்.

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே

    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    (குறள்: 15)


    (கெடுப்பதூஉம் = கெடுப்பதும், சார்வாய் = துணையாய்,
    எடுப்பதூஉம்
    = வாழ வைப்பதுவும்)

    மழை பெய்யவேண்டிய பருவகாலத்தில் பெய்யாமல் கெடுப்பதும்
    அவ்வாறு தன்னால் கெட்டவர்க்குத் துணையாய், அப்பொழுதே
    பெய்து வாழவைப்பதும் மழையின் செயல்களாகும். எனவே
    ஆக்கலும் அழித்தலும் மழையிடம் உள்ளது என்று பொதுவாக
    இந்தக் குறளுக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

    • மழையினால் வரும் கேடு

        குறளின் தொடக்கத்தில் ‘கெடுப்பதூஉம்‘ என்று குறிப்பிடுகிறார்
    வள்ளுவர். கெடுப்பதூஉம் அதாவது கெடுப்பது என்றால், எதனால்
    கெடுப்பது என்று வரையறை செய்து குறிப்பிடவில்லை. கெடுப்பது
    அல்லது கெடுவது எதனாலும் இருக்கலாம். பெய்ய வேண்டிய
    பருவகாலத்தில் பெய்யாமலும் கெடுக்கலாம், அதிக அளவில் பெய்த
    வெள்ளப்பெருக்காலும் கெடுக்கலாம். இந்த இந்தச் செயல்களால்தான்
    கெடுக்கும் என்று சுட்டாமல், பொதுவாகக் குறிப்பிடுவது அவரது
    பொதுமை நோக்கு மட்டுமல்ல, காலப்போக்கில் ஏற்படும் பல்வேறு
    வகையான மாறுதல்களுக்கும் இடமளிக்கிறது.

        இன்றைக்கும், பல நாடுகளில் மிகுதியான மழை பெய்வதால்
    ஏற்படும் வெள்ளப்பெருக்கத்தால் ஆயிரக்கணக்கான பேர்
    இறக்கின்றனர். கிராமங்களும், நகரங்களும் அழிகின்றன. தொடர்ந்து
    மழை பெய்வதால், அன்றாட அலுவல்கள் செய்யமுடியாமலும்
    மக்கள் அல்லல் படுகின்றனர். பணிக்குச் செல்லமுடியாத ஏழைகள்
    பட்டினி கிடக்கின்றனர். இவ்வாறு மழை பலநிலைகளில் கெடுதல்
    விளைவிக்கின்றது. ஆக்கம் தருகின்ற மழை, உயிர்களை
    வாழவைக்கின்ற மழை, உலகத்தை இயங்க வைக்கின்ற மழை,
    பல்வேறு நிலையில் அழிவுக்கும் காரணமாக உள்ளது என்று
    இன்றளவும் காணப்படும் இயற்கையின் உண்மையை வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்.

    6.4.2 காலம்


        ‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது‘ (Time waits for no man)
    என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காலம் பொன்னானது‘
    என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இவற்றிலிருந்து என்ன
    தெரிகின்றது? காலம் என்பது வாழ்க்கையில் மிகவும்
    இன்றியாமையாதது. எந்தக்காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ,
    அதனை அந்தக் காலத்திலேயே செய்ய வேண்டும். காலத்தை
    வீணாக்கக்கூடாது; அது பொன்போன்றது; காலத்தின் அருமை
    தெரிந்து பயன்படுத்த வேண்டும், அதனையும் உரிய பருவம் அறிந்து
    பயன்படுத்த வேண்டும். இவை போன்ற உண்மைகளைக் காலம்
    நமக்குக் கற்பிக்கின்றது.

        எனவே, ஒவ்வொன்றையும் செய்வதற்கு உரிய காலம் என்று ஒன்று
    உண்டு. அவற்றை மனத்திற்கொண்டு செயல்பட்டால் நன்மை
    விளையும். இது இயற்கையின் தன்மை.

        நம் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளின்
    வாயிலாகவும்; வரலாற்று நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் இவற்றை
    நாம் அறிந்து கொள்ளலாம்.

    • விவசாயியும் காலமும்

        நிலத்தைப் பயிரிடும் விவசாயிகள் (Agriculturalist), பருவகாலத்தை
    அடிப்படையாகக்     கொண்டே     பயிரிடுகின்றனர். உழுது,
    விதைவிதைத்து, பயிரிட்டு, அறுவடை செய்வது வரையிலும்
    பருவகாலங்களே அடிப்படையாக அமைந்துள்ளன. காலத்தைக்
    கருத்தில் கொண்டு செய்யும் விவசாயி, தான் நினைத்த பலனைப்
    பெறுகிறான்.

        எறும்புகள்     கூட,     மழைக்காலத்தை     மனத்திற்கொண்டு,
    வேனிற்காலத்தில் உணவுகளைச் சேமிக்கின்றன. இவ்வாறு
    பலநிலைகளில் உயிர்வாழ்வன, காலத்தை அடிப்படையாகக் கொண்டு,
    அதற்கேற்ப, செயல்பட்டுப் பயன்பெறுகின்றன. இயற்கையின் இந்த
    உண்மையினை,


    ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
    கருதி இடத்தால் செயின்



    (குறள்: 484)


    (ஞாலம் = உலகம், கருதினும் = கருதினாலும், செயின் = செய்தால்)

    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

        தான் செய்யவேண்டிய வினையைத் தகுந்த காலம் அறிந்து
    செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், உலகம் முழுவதையும்
    கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் என்கிறார் வள்ளுவர்.

    • நெப்போலியனும் காலமும்

        உலகம் முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவர
    விரும்பியவன் நெப்போலியன் எனும் மாவீரன். ஆனால் அவன்
    உருசியாமீது படையெடுத்தபொழுது, காலத்தைக் கருத்தில்
    கொள்ளவில்லை, முழுமையான குளிர்காலத்தில் படையெடுத்துச்
    சென்றான். குளிரின் துன்பம் தாங்கிக்கொள்ள இயலாமல் பல படை
    வீரர்கள் இறந்தனர். நெப்போலியனால் மேற்கொண்டு முன்னேற
    முடியவில்லை. உருசிய நாட்டைக் கைப்பற்ற இயலவில்லை.
    நெப்போலியன் காலம் கருதிச் செயல்பட்டிருப்பானேயானால் உருசிய
    நாட்டை எளிதில் கைப்பற்றி மேலும் மேலும் பல வெற்றிகளைப்
    பெற்றிருக்கலாம்.

    • காலம் கருதுதலும் கருதாமையும்

        எனவே, காலம் என்பது, மிகவும் இன்றியமையாதது; ஒருவனது
    வெற்றியும் தோல்வியும், அவன் காலம் கருதிச் செயல்படுவதைப்
    பொறுத்து அமையும் என்பது வள்ளுவர் கருத்து. இன்றைய
    நடைமுறை வாழ்க்கையிலும், பிறவற்றிலும், காலம் அறிந்து
    செயல்படுவோரின் வெற்றியையும், காலம்கருதாது செயல்படுவோரின்
    தோல்வியையும்,     நாள்தோறும்     பார்த்துவருகிறோம்.
    அப்பொழுதெல்லாம் வள்ளுவரின் இந்தக்கருத்து நம் மனக்கண்முன்
    வருகிறது - மேலும் வந்து கொண்டிருக்கும். எனவே வள்ளுவர்
    இன்றல்ல என்றும் வாழ்வார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:43(இந்திய நேரம்)