தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.2

  • 6.2 பொதுமை


        இந்த உலகத்தில் நிலத்தால் பாகுபாடுகள் காணப்படுகின்றன.
    இனங்களால் வேறுபாடுகள் உள்ளன. மொழியால் பிரிவுகள்
    அமைந்துள்ளன.     எண்ணங்களாலும்,     நோக்கங்களாலும்,
    நம்பிக்கைகளாலும் கூட மாறுபாடுகள் பல காணப்படுகின்றன.
    இவ்வளவு வேறுபாடுகளும், பாகுபாடுகளும் இருந்தாலும் கூட,
    இவற்றிற்கெல்லாம் மலோக எல்லோருக்கும் பொருந்துகின்ற சில
    பொதுக்கூறுகள் அல்லது பொதுமைகள் இருக்கின்றன. அவை
    மாறாத் தன்மை உடையன, என்றும் வாழும் இயல்புடையன.
    ஆங்கிலத்தில் UNIVERSAL என்று குறிப்பிடுவது போல அது
    உலகளாவிய பொதுமை நோக்குடையது. இத்தகைய பொதுமை
    நோக்கைப் பற்றி வள்ளுவர் பல கருத்துகளை வழங்கியுள்ளார்.

    6.2.1 வாய்மை


        பொய் பேசுவது ஒரு தவறு. அதனால் தீமைகள் பல விளைகின்றன.
    கொலை செய்யாத ஒருவனைக் கொலை செய்தான் என்று பொய்
    சொன்னால்,     தவறு     செய்யாதவன்     அநியாயமாகத்
    தண்டிக்கப்படுகிறான். இவ்வாறு பொய் சொல்வதால், பிறர்
    பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொய் பேசுவது பாவம் எனச்
    சமயங்கள் கூறுகின்றன. பொய் பேசாமல் இருப்பதை வாய்மை
    என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். ஆனால், பொய் பேசுதல்
    கூட, ஒரு நிலையில் வாய்மையாகக் கருதப்படும் என்கிறார்
    வள்ளுவர். எப்பொழுது? ஏன்? ஒருவன் பொய் பேசுவதால்
    பிறருக்கு நன்மை விளையுமானால், அது பொய்யாகாது, அதுவும்
    வாய்மையாகக் கருதப்படும் என்று குறிப்பிடுகிறார்.


    பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்



    (குறள்: 292)


    (வாய்மை இடத்த = வாய்மை என்று கருதத்தக்க நிலை உடையவை,
    புரை
    = குற்றம், பயக்கும் = கொடுக்கும்)

    ஒருவன் சொல்லும் பொய்யால், குற்றம் நீங்கிய நன்மை
    விளையுமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று
    கருதத்தக்கன என்பது இந்தக் குறளின் பொருள்.

    • பொய்யின் தீமை

        ‘பொய் பேசும் வாய்க்குப் போஜனம் (சோறு) கிடையாது’ என்பது
    தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதாவது ஒருவன் பொய்பேசினால்
    அவனுக்கு உண்ணுவதற்கு உணவு கூடக் கிடைக்காது. பொய்
    பேசுவதினால் உணவு கிடைக்காத அளவுக்குத் தீமை ஏற்படும்.
    பொய் பேசுவதினால் ஏற்படும் இத்தகைய தீமையை அறிந்த
    வள்ளுவர், பொய் பேசுவது தவறு இல்லை என்று ஏன்
    குறிப்பிடுகிறார்?

    • பொய்யின் நன்மை

        நல்லது எது, கெட்டது எது என்று அறியாப் பருவம் உடைய,
    ஒருவயது மட்டுமே நிரம்பிய ஒரு சிறுகுழந்தை கூர்மையான
    கத்தியைக் கையில் எடுத்து விளையாடுகிறது, கத்தியை வைத்து
    விளையாடுவதால், குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்த தாய்,
    ஓடிச் சென்று குழந்தையின் கையிலிருந்து கத்தியைப் பறிக்கிறாள்
    (snatching). குழந்தை மீண்டும் தாயின் கையிலிருக்கும் கத்தியை
    எடுக்கத் தாவுகிறது. அப்பொழுது, தாய், கத்தியை மறைத்து
    வைத்துக் கொண்டு, ‘காக்கா தூக்கிக் கொண்டு ஓடிவிட்டது‘ என்று
    பொய் சொல்கிறாள். தாய் சொன்ன பொய்யை நம்பி குழந்தை வேறு
    ஒரு பொருளை எடுத்து விளையாடத் தொடங்குகிறது. தாய்சொன்ன
    இந்தப் பொய்யால் குழந்தைக்கு வரவிருந்த ஆபத்து நீங்கி, நன்மை
    கிடைக்கிறது. இந்தப் பொய் குற்றமில்லாத ஒரு நன்மையைக்
    கொடுக்கிறது. எனவே இத்தகைய பொய்யும் நன்மையின்
    பாற்பட்டது.

        இத்தகைய நிகழ்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் நாள்தோறும்
    நிகழுகிறது. அப்பொழுதெல்லாம் பிறருக்கு ஏற்படும் நன்மையைக்
    கருதிப் பொய் பேசுகிறோம்.

        சிலரின் மன அமைதிக்காகவும் துன்பத்தை மறந்து மகிழ்ச்சியாக
    இருப்பதற்காகவும் அவர்களிடம் பொய் பேசுகிறோம். பிறருக்கு
    நன்மையைக் கொடுக்கும் இத்தகைய பொய் பேசுதல் இன்றும்
    நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறை உண்மையையே
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    6.2.2 அன்பு


        ஒருவரின் மனம் நெகிழும் படியாக, மற்றொருவர் அவர்மேல்
    வெளிப்படுத்தும் பாசமும் நட்பும் கலந்த உணர்வை அன்பு என்று
    அழைக்கின்றோம்.

        ‘அன்பு‘ என்பது, இந்த உலகத்தில் மக்களிடையே காணப்படும்
    பிணைப்பிற்கு ஒருபாலம். ஒருவருக்கொருவர் காட்டும் அன்பே
    காதலராய், குடும்பத்தலைவன் தலைவியாய், பெற்றோராய்(parents)
    சமூகத் தொண்டராய் இன்னும் பலநிலையில் மனிதர்களை
    ஒருங்கிணைத்து இயங்க வைக்கிறது. இது இன்றளவு வரையிலும்
    உள்ள வாழ்வியல் உண்மை. மனிதர்களிடையே இந்த அன்பு என்ற
    ஒன்று இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது ஓர் உயிரற்ற அதாவது
    இயக்கம் இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும் என்கிறார் வள்ளுவர்.

    அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

    வற்றல் மரம் தளிர்த்தற்று.

    (குறள்: 78)


    (அகத்து - உள்ளத்து, வன்பாற்கண் - வளமில்லாத பாலை
    நிலத்தில், வற்றல் மரம் - வற்றிப்போன பட்டமரம்,
    தளிர்த்தற்று
    - தளிர்க்க முயல்வது போல்)

    உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை, வளம்
    இல்லாத பாலைநிலத்தில், ஏற்கனவே வற்றிப்போய்நிற்கும் மரம்,
    தளிர்க்க முயல்வது போலாகும் என்பது இந்தக் குறளின் பொருள்.

    • பாலை நிலம்

        உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டது
    என்பதை ஒரு சிறந்த உவமை வாயிலாக வள்ளுவர் விளக்குகிறார்.
    நீர்வளம் இல்லாத வறட்சியான பகுதியையே ‘பாலை‘ என்று
    குறிப்பிடுகின்றோம். இங்குச் செடி கொடிகள், மரம் போன்றவை
    வளர்வது மிகவும் கடினம். அந்த நிலத்தின் தட்பவெட்ப நிலைக்கு
    ஏற்ப வளரக்கூடிய சிலசெடி கொடிகளும் சிலமரங்களுமே வளரும்.
    அவ்வாறு வளரும் மரங்களும் நீர் இல்லாமல் வற்றிப்
    பட்டுப்போகின்றன, அந்த மரங்கள் மீண்டும் தளிர்விட்டு
    வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. அந்த மரங்களைப் போல்தான்,
    உள்ளத்தில் அன்பு இல்லாதவர் வாழ்க்கையும் அமைந்துள்ளது
    என்றுகுறிப்பிடுகிறார் வள்ளுவர்.

        பட்டமரம் புறத்தோற்றத்தில் மட்டுமே மரமாகக் காட்சியளிக்கிறது
    ஆனால் அதனுள் உயிர் இல்லை; இயக்கம் இல்லை; மீண்டும் நீர்
    பெற்று வாழும் வாய்ப்பில்லை; ஏனென்றால் அது நிற்கும் நிலம்
    நீரில்லாத வறட்சியான பாலைவனம்.

    • அன்பில்லார் வாழ்க்கை

        அன்பில்லாதவர் வாழ்க்கையும், பாலைநிலத்தில் நீர்வற்றிப்போய்,
    பட்டுநிற்கும் மரத்தைப் போல், உயிரற்ற - இயக்கமற்ற நிலையை
    உடையது. எனவே ஒருவன் உயிருடன் இருக்கிறான், வாழ்கிறான்
    என்று கூறவேண்டுமானால், அவன் அன்பு உடையவனாக அதாவது
    உள்ளத்தில் அன்பு கொண்டுள்ளவனாக இருக்க வேண்டும் என்பது
    வள்ளுவர் கருத்து. மனித வாழ்க்கையில் மனிதனிடம் காணப்படும்
    அன்பைப் பற்றிய வள்ளுவரின் இந்தக் கருத்துக்குக் கால எல்லை
    உண்டா?

    6.2.3 ஒழுக்கம்


        ஒழுக்கம் என்பதற்குத் தனிமனிதன் பின்பற்றும் நெறி அல்லது
    தனிமனிதனின் நல்ல நடத்தை என்று விளக்கம் கூறுவர்.

        அறநூல்கள் எல்லாம் ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுகின்றன. சமயத்
    தொடர்பான     அறநூல்களெல்லாம், சமயக் கோட்பாடுகள்,
    நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒழுக்கத்தைப் பற்றிய பல்வேறு
    வகையான விளக்கங்களைக்     கொடுக்கின்றன. இவையும்,
    இனத்திற்கும் இனம், சமயத்திற்குச் சமயம், நாட்டுக்கு நாடு
    வேறுபடுகின்றன. காலம் தோறும் கூட மாறுகின்றன.

    • வள்ளுவர்கூறும் ஒழுக்கம்

        வள்ளுவரும் ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுகின்றார். ஒழுக்கம் பற்றிக்
    குறிப்பிடுவதற்கு ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். ஆனால்
    வள்ளுவர் கூறும் ஒழுக்கம் - ஒழுக்கம் பற்றிய கருத்துகள், சாதி,
    சமயம், நாடு, காலம் எல்லாம் கடந்த நிலையில், ஒரு
    பொதுமைத்தன்மை உடையது, ஏன் என்றால் இதுதான் ஒழுக்கம்
    என்று எந்த எல்லையும் வகுத்துக் கூறவில்லை. எல்லோருக்கும்
    எல்லாக் காலத்துக்கும் பொருந்துகின்ற நிலையில் பொதுவாகவே
    சொல்லுகின்றார். இதனை


    நன்றிக்கு வித்து ஆகும் நல்ஒழுக்கம் தீஒழுக்கம்
    என்றும் இடும்பை தரும்



    (குறள்: 138)


    (நன்றி = நன்மை/ உதவி, தீ = தீய, இடும்பை = துன்பம்)

    என்னும் குறள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

        ஒருவனது நல்லொழுக்கம் பின்னால் விளையும் அல்லது நிகழும்
    நன்மைக்கு எல்லாம் வித்தாக அமையும். அவனது தீய ஒழுக்கம்
    எல்லாக் காலத்திலும் பெரும் துன்பத்தைத் தரும் என்பது இந்தக்
    குறளின் பொருள்.

        ஒழுக்கம் என்பதற்குத் தனி மனிதனின் நல்ல நடத்தை என்றும்
    ஒரு பொருள் உண்டு என்பதை முன்னர் குறிப்பிட்டோம், ஒருவன்
    தவறான நடத்தை அல்லது தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தால்,
    அவனது வாழ்நாளிலேயே, அதன் விளைவுகளை அனுபவிக்கிறான்.
    சில நேரங்களில் அவனது தீய ஒழுக்கம் வருங்காலத்
    தலைமுறையினரையும் பாதிக்கிறது. உடலளவில் வரும் நோய்கள்
    பல இவற்றிற்கு எடுத்துக்காட்டு. இவை அறிவியல் அடிப்படையில்
    நிரூபிக்கப்பட்டுள்ளன.

        தமிழில் ‘தன்வினை, தன்னைச்சுடும்‘ என்று ஒரு பழமொழி உண்டு.
    ஒருவனது வினை அல்லது செயலே அவனுக்கு அவனது
    வருங்காலத்தைப் பற்றிய தீர்ப்பு வழங்கும் என்பது இதன் பொருள்.
    இதனைத்தான் வள்ளுவர், ஒருவனது ஒழுக்கச் செயல் நன்மையை
    விளைவிக்கும். தீய ஒழுக்கம் தீமையை ஏற்படுத்தும் என்கிறார்.
    இவற்றை நடைமுறையிலே பார்க்கிறோம்.


    தன் மதிப்பீ்டு : வினாக்கள் : I

    1. இறைவனைப் பற்றி வள்ளுவர் கூறும்
      விளக்கங்கள் யாவை?
    1. உரிய காலத்தில் மழைபெய்யாவிட்டால், என்ன
      நிகழும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
    1. எப்பொழுது பொய்யும் மெய்யாகக் கருதப்படும்
      என்று வள்ளுவர் கூறுகிறார்?
    1. அன்பு இல்லாதவர் வாழ்க்கை எத்தகையது?
    1. வள்ளுவர் ஒழுக்கம் பற்றிக் கூறும் கருத்துகள்
      இன்றும் வாழ்கின்றன. ஏன்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:36(இந்திய நேரம்)