தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விலங்கு, பறவை, மீன் ஓவியங்கள்

  • 1.2 விலங்கு, பறவை, மீன் ஓவியங்கள்

    தமிழகத்தில் பாறை ஓவியங்களில் விலங்கின ஓவியங்கள் பல
    இடங்களில் கிடைத்துள்ளன. விலங்கு ஓவியங்களில் மான், மீன்,
    யானை, குதிரை, ஆடு, நாய், மயில் முதலியவற்றைக்
    குறிப்பிடலாம்.

    ஓவியங்களில் காணப்படும் விலங்கினங்களை இரண்டு
    வகையாகப் பிரிப்பர். முதலாவது ஆற்றல் மிக்க பெரிய
    விலங்கினங்கள், இரண்டாவது சாதாரணமாகக் காணப்படும்
    அல்லது வேட்டைக் காலத்தின்போது வேட்டையாடப்படும்
    விலங்கினங்கள். தமிழகப் பாறை ஓவியங்களில் இரண்டாம் வகை
    ஓவியங்களே அதிகம் கிடைக்கின்றன. அவை பற்றி இனிக்
    காணலாம்.

    1.2.1 மான்

    மான் ஓவியமானது செத்தவரை என்னுமிடத்தில் பக்கவாட்டுக்
    கோணத்தில் காணப்படுகிறது. முழுமையாக வரையப்பட்டுள்ள
    இவ்வுருவமானது அடர் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலம்பாடி என்னுமிடத்தில் கிடைத்துள்ள மான் ஓவியத்தில்
    ஒரு மான் மரம், செடிகளுக்கிடையே மறைந்து நிற்பது
    போன்றும் புதர்களுக்கிடையே     செல்வது போன்றும்
    அமைந்துள்ளது. மேலும் இம்மானின் ஓவியமானது சுற்று வரை
    கோட்டு முறையில் அமைந்துள்ளது.

    1.2.2 மீன்

    செத்தவரை எனுமிடத்தில் மீன் உருவங்கள் நான்கு
    காணப்படுகின்றன. மீனின் உடற் பகுதிகள் அனைத்தும் வெள்ளை
    நிறத்திலும் வெளிப் பகுதி சிவப்பு நிறத்திலும் சுற்று வரைகோட்டு
    முறையிலும் அமைந்துள்ளன.

    பலநாட்டுப் பண்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது மீன்
    தெய்வமாகவும், குறியீடாகவும், சின்னமாகவும் அமைந்துள்ளமையை
    அறியலாம். இங்குக் காணப்படும் மீனின் உருவமானது
    அம்மக்களின் தெய்வமாகவோ அல்லது அம்மக்களின் இனக்
    குழுக் குறியீடாகவோ இருக்கக் கூடும். மேலும் தொழில்
    அடிப்படையில் அவர்கள் மீன் பிடித்தலை அறிந்தவர்கள்
    என்பதையும் இதன்மூலம் அறியலாம். இதன்     அருகில்
    காணப்படும் படகு போன்ற ஓவியம் அக்கால மக்கள் மீன்
    பிடிக்கும் தொழிலை அறிந்தவர்கள் என்ற கருத்திற்கு வலிமை
    சேர்ப்பதாக அமைகிறது.

    இம்மீன் உருவக் குறியீடு, இனக்குழு மக்கள் தாங்கள் மீன்
    இனத்தைப் போன்று பெருகி வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில்
    எழுந்த வளமை வழிபாட்டுச் சடங்கினைக் (Fertility cult)
    குறிப்பதாகவும், வழிபாட்டிற்கு உரியதாகவும் கூட இருக்கலாம்.

    1.2.3 குதிரை

    பாறை ஓவியங்களில் சிறப்புடைய ஓவியமாக அமைவது குதிரை
    ஓவியமாகும். இந்தியாவில் குதிரையானது ஆரியர் வருகைக்குப்
    பின்னரே அறியப்பட்டது என்பர். கி.மு.1500-க்குப் பின்னரே
    குதிரை பற்றிய செய்தியை அறிய முடிகிறது,

    செத்தவரையில் காணப்படும் ஓவியத்தில் குதிரை மீது மனித
    உருவம் காணப்படுகிறது. குதிரைக்கு முன் மனித உருவம்
    அக்குதிரையினை அழைத்துச்     செல்வது போன்றும்
    காட்சியளிக்கிறது. இது அடர் வண்ணப் பூச்சு முறையில்
    அமைந்துள்ளது.


    (குதிரையின் மீது
    மனிதன்-வெள்ளருக்கம்
    பாளையம்)

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு
    அருகே உள்ள அணைப்பட்டியில்
    உள்ளது சித்தர்மலை. இங்கு ஒரு
    மனிதன் குதிரைமீது     அமர்ந்து
    குதிரையைச் செலுத்துவது போல்
    ஓவியம் காணப்படுகிறது. இவ்வோவியம்
    கோடுகளால் ஆனது. அதாவது சுற்று
    வரைகோட்டு ஓவியமாகும். குதிரையின்
    மீது அமர்ந்துள்ள மனிதன் தலையில் தொப்பி வைத்திருப்பது
    போன்று வரையப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர் நகருக்கு மேற்கே உள்ள வெள்ளருக்கம்
    பாளையம் என்னும் ஊரிலும் மூன்று இடங்களில் குதிரையின்
    வடிவம் காணப்படுகிறது. இதில் ஓரிடத்தில் குதிரையின் மீது
    மனிதன் அமர்ந்து ஈட்டியைக் கையில் பிடித்து வீசுவது போல்
    வரையப்பட்டுள்ளது. குறிபார்க்கும் இடம் புதர் நிறைந்தது போல்
    காட்டப்பட்டுள்ளதால் அப்புதரிடையே உள்ள விலங்கைத்
    தாக்குவதாகக் கொள்ளலாம். குதிரையின் மேல் அமர்ந்துள்ள
    மனிதனுடைய தலைப் பகுதியானது தலைப்பாகை போன்ற
    அமைப்புடன் காணப்படுகிறது. இது இனக் குழுத் தலைவனைச்
    சுட்டுவதாகக் கருதலாம். இவ்வோவியம் அடர் வண்ணக்
    கலவையில் வரையப்பட்டுள்ளது.

    சென்னைப் பல்கலைக்கழகத் தொல்பொருள் ஆய்வுத்
    துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மல்லபாடி ஓவியங்கள்
    சிறப்பானவையாகும். இரண்டு மனிதர்கள் குதிரைகளின் மேல்
    அமர்ந்து கொண்டு இடக் கையால் குதிரையின் கடிவாளத்தைப்
    பிடித்துக் கொண்டு வலக் கையில் நீளமான கம்பு போன்ற ஒரு
    பொருளை வைத்துப் போரிடும் காட்சியாக அமைந்துள்ளது.
    இவ்வோவியமானது அடர் வண்ண அமைப்பில் காணப்படுகிறது.

    மகாராஜாக்கடை என்னுமிடத்தில் கிடைத்துள்ள ஓவியத்தில்
    மனிதன் ஒருவன் குதிரையின் மீது அமர்ந்துள்ளான். அவனது
    தலையைச் சுற்றி அரைவட்டக் கோடு காட்டப்பட்டுள்ளது.
    1.2.4 யானை

    வெள்ளருக்கம் பாளையம் என்னுமிடத்தில் யானை மீது
    மனிதன் அமர்ந்த நிலையிலான ஓவியம் காணப்படுகிறது. இதே
    போன்ற ஓவியம் நீலகிரி மாவட்டம் சீகூரிலும் காணப்படுகிறது.
    வெள்ளை நிறத்தில்     அடர்த்தியான     வண்ணப் பூச்சு
    முறையில் அமைந்துள்ளன.

    1.2.5 மாடு

    மாட்டின் தலை - காமயக் கவுண்டன் பட்டி

    தேனி மாவட்டம் காமயக் கவுண்டன் பட்டியில் கிடைத்துள்ள
    ஓவியங்களில் குறிப்பிடத் தக்கது மாட்டின் ஓவியமாகும். இவ்
    ஓவியத்தில் மாட்டின் தலை கொம்புகளுடன் கழுத்துப் பகுதி வரை
    வரையப்பட்டுள்ளது.     இவ்வோவியம் வெள்ளை நிறத்தில்,
    அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் காணப்படுகிறது.
    1.2.6 எக்ஸ்ரே ஓவியம்

    எக்ஸ்ரே வடிவம் - ஆலம்பாடி

    உடம்பின் உள் உறுப்புகளைக் காட்டுவது எக்ஸ்ரே படம்
    என்பதை அறிவீர்கள். எக்ஸ்ரே படம் போல வரையப்பட்ட
    ஓவியம் எக்ஸ்ரே ஓவியம் ஆகும். தமிழகத்தில் முதல் முதலாக
    ஆலம்பாடியில்தான் எக்ஸ்ரே ஓவியம் கிடைத்துள்ளது. இத்தகு
    ஓவியம் வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் கிடைத்துள்ளன.
    ஆலம்பாடி ஓவியத்தில் எருமை ஒன்றின் எலும்புகள் கோடுகளால்
    வரையப்பட்டுள்ளன. மேலும் எருமையானது சுற்று வரைகோட்டு
    முறையில் வரையப் பட்டுள்ளதால் எலும்புகள் தெரியும்படியாக
    அமைந்துள்ளது. வேட்டைத் தொழில் செய்து வாழ்ந்த அக்கால
    மக்கள் உணவுக்காக வேட்டையாடிய விலங்குகளை அறுத்தும்.
    வெட்டியும், உடலின் உட்கூறுகளைக் கண்டறிந்தனர். எனவே
    விலங்கின் குடல் மற்றும் எலும்புகளை ஓவியத்தில் காட்டுவது
    அவர்களுக்கு எளிதான செயலானது. இத்தகு எக்ஸ்ரே ஓவியம்
    செத்தவரை ஓவியங்களிலும் இடம் பெற்றுள்ளது.
    1.2.7 பிற விலங்கினங்கள்

    மேற்கண்ட ஓவியங்கள் தவிர இன்னும் பிற விலங்கினங்களின்
    உருவங்களைத் தமிழகப் பாறை ஓவியங்களில் காண முடிகிறது.
    நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் ஆட்டின் வடிவம் அடர்
    வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டுள்ளது.

    சீகூர் எனுமிடத்தில் மயிலின் ஓவியம் கிடைத்துள்ளது. இவ்
    ஓவியமும் அடர் வண்ணப் பூச்சு முறையில் அமைந்துள்ளது.

    மல்ல சமுத்திரத்தில் வேட்டை நாய் ஒன்று தாவிய நிலையில்
    வரையப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பன்றி, காட்டுப் பூனை,
    அன்னம் ஆகியவற்றின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:37:18(இந்திய நேரம்)