தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிற் சிற்பங்கள்

  • 5.3 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிற் சிற்பங்கள்

    நாயக்கரது சிற்பக் கலை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்
    எனில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிற் சிற்பங்களைக்
    கண்டாலே போதும். அந்த அளவு ஏராளமான சிற்பங்கள் அங்கு
    அமைக்கப் பட்டுள்ளன. கிளிக் கூட்டு மண்டபம், கம்பத்தடி
    மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், புது மண்டபம் எனப் பல்வேறு
    மண்டபங்களில்     புராணம்,     இதிகாசம், தல புராணம்,
    நாட்டுப்புற இயல் ஆகியவற்றின் அடிப்படையில் சிற்பங்கள்
    அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில சிற்பங்களைப் பற்றி இங்குக்
    காண்போம்.


    5.3.1 கிளிக் கூட்டு மண்டபச் சிற்பங்கள்

    மீனாட்சியின்     கரத்தில் கிளி இடம் பெற்று இருப்பதால்
    இம்மண்டபத்தில் ஒரு கூண்டில் கிளிகள் வளர்க்கப்பட்டன.
    எனவே இது கிளிக் கூட்டு மண்டபம் என்று அழைக்கப் படலாயிற்று. இம்மண்டபத்தில்     அர்ச்சுனன், கர்ணன், சகாதேவன், நகுலன், வீமன், புருஷா மிருகம், வாலி, சுக்ரீவன் என இராமாயணம், மகாபாரதம் தொடர்பான இதிகாசச் சிற்பங்கள் இடம்பெற்று உள்ளன. அதேபோல் வேடன், நடன மாது என நாட்டுப்புறவியல் தொடர்பான சிற்பங்களும் அமைந்து உள்ளன. இவைகளில் ஒன்றுக்கொன்று பொருத்தமான சிற்பங்கள் ஒன்றுக்கு எதிராக மற்றொன்று அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அர்ச்சுனனுக்கு எதிரே கர்ணன், வாலிக்கு எதிரே சுக்ரீவன், வீமனுக்கு எதிரே புருஷா மிருகம், வேடனுக்கு எதிரே நடன மாது என அமைக்கப்பட்டு உள்ளதனைக் குறிப்பிடலாம்.

    (புருஷாமிருகம் - விலங்கும் மனிதனும் கலந்த உருவம்.
    மகாபாரதத்தில் வீமனுடன் போரிட வரும் உருவம்)

    5.3.2 கம்பத்தடி மண்டபச் சிற்பங்கள்

    சிவபெருமான் கருவறையின் நேர் எதிரே அமைந்துள்ளது
    இம்மண்டபம். சிவபெருமானது சிறப்பான வடிவங்கள் என்று
    கருதப்படும் இருபத்தைந்து உருவங்கள் இங்கு இடம்பெறுகின்றன.
    ஏக பாத மூர்த்தி, இடபாரூடர், அர்த்த நாரீசுவரர், ஹரிஹரர்,
    தட்சிணா மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, பிச்சாடனர், வீரபத்ரர்,
    ரிஷபாந்தகர், சோமாஸ்கந்தர், கல்யாண சுந்தரேசர், திரிபுராந்திகர்,
    நடராசர், காம தகனர், உமா மகேசுவரர், இராவண அனுக்கிரகர்
    போன்றவை அச்சிற்பங்களாம். இவைகளில்     தொடர்புடைய
    சிற்பங்களை அருகருகில் அமைத்துள்ளனர். உதாரணமாக சக்தி
    சிவத்தின் இணைவாகக் கருதப்படும் அர்த்த நாரி என்னும்
    சிற்பத்திற்கு அருகே சிவனும் திருமாலும் இணைந்த ஹரிஹரர்
    சிற்பம் அமைந்துள்ளது. திரிபுராந்தகர் சிற்பத்தில் புராணத்தில்
    கூறப்பட்டு உள்ளபடி விஷ்ணு சிவனது கரத்தில் அம்பாக
    இடம்பெற்றுள்ளார். இந்தச் சிறு அம்பில் கூட விஷ்ணுவின்
    உருவம்     சிறிய     அளவில்    செதுக்கப்பட்டு உள்ளமை பாராட்டுதற்கு உரியதாகும். திரிபுராந்தகர் சிற்பத்திற்கு நேர் எதிரே
    உள்ள தூணில் மூன்று அசுரர்கள் காட்டப்பட்டு உள்ளனர்.


    பிச்சாடனர்


    5.3.3 ஆயிரக்கால் மண்டபச் சிற்பங்கள்

    இம்மண்டபத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.
    இதில் பெரிய புராணத்திலிருந்து கண்ணப்ப நாயனார் சிற்பம்
    காணப்படுகிறது. திருவிளையாடற் புராணத்திலிருந்து அங்கம்
    வெட்டிய படலச் சிற்பமும், சிவபெருமான் குதிரைச் சேவகனாக
    வரும் நரியைப் பரியாக்கிய கதைச் சிற்பமும் இடம் பெற்றுள்ளன.


    அர்ச்சுனன் பேடி

    அர்ச்சுனன் பேடி உருவம் கொள்வதைக் காட்டும் சிற்பமும்
    இங்கு உள்ளது. தாடி மீசையுடன் மார்பகங்களும் கொண்ட
    சிற்பமாக இது அமைந்துள்ளது. ரதி, மன்மதன் சிற்பங்கள்
    எதிரெதிராக மிக அழகாகச் செதுக்கப்பட்டு உள்ளன. ரதி,
    மன்மதன் சிற்பங்கள் நாயக்கர் காலத்துக்     கலைகளில்
    முக்கியமான கூறாக விளங்குகின்றன. தாடிக் கொம்பு சௌந்திர
    ராசப் பெருமாள் கோயில்
    , திருமோகூர் காளமேகப் பெருமாள்
    கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் எனப் பிற
    கோயில்களிலும் இச்சிற்பங்களைக் காணலாம்.

    5.3.4 புதுமண்டபச் சிற்பங்கள்

    புதுமண்டபம் என்று அழைக்கப்படும் வசந்த மண்டபம்
    திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாகும். இதில் சிவ புராணச்
    சிற்பங்களும், திருவிளையாடற் புராணச் சிற்பங்களுமாக 24
    சிற்பங்கள் காணப்படுகின்றன. சிவபுராணச் சிற்பங்களில் இராவண
    அனுக்கிரக மூர்த்தி, திரிபுராந்தகர், அர்த்த நாரீசுவரர், ஊர்த்துவத்
    தாண்டவர், ஏகபாத மூர்த்தி, கஜ சம்ஹாரர் முதலிய
    சிற்பங்கள் சிறப்புற அமைந்துள்ளன. திருவிளையாடற்
    புராணத்திலிருந்து இந்திரன் பழி தீர்ந்தது, கரிக்குருவிக்கு
    உபதேசித்தது, கல் யானைக்குக் கரும்பு கொடுத்தது, தடாதகையின் திக்கு விசயம், மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாணம், பன்றிக்
    குட்டிகளுக்குப் பால் கொடுத்தது, புலி முலைப் புல்வாய்க்கு
    அருளியது முதலான கதைகள் தொடர்பான சிற்பங்கள்
    இடம்பெற்று உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:43:36(இந்திய நேரம்)