தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மரச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களும்

  • 5.5. மரச் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும்

    மரத்தால் செய்யப்பட்ட தேர்களில் இடம் பெற்றுள்ள
    சிற்பங்களும், சுண்ணாம்பால் ஆகிய சுதைச் சிற்பங்களும்
    விசயநகர-நாயக்கர் காலச் சிற்பங்களில் குறிப்பிடத் தக்கவை.

    5.5.1 மரச் சிற்பங்கள்

    விசயநகர-நாயக்கரது ஆட்சிக் காலத்தில் இறைவன் இறைவியின்
    திருக்கல்யாண விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.
    இதனை ஒட்டிப் பெரும்பாலான கோயில்களில் தேர்த் திருவிழாவும்
    கொண்டாடப் பட்டது. இந்தத் தேரானது மரத்தால் செய்யப்பட்டது.
    பல விதமான சிற்பங்களைத் தேரில் அழகுறச் செதுக்கியிருப்பர்.
    புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் அந்தந்த ஊர்த் தலபுராணம்
    தொடர்பான சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். தமிழகத்தில்
    சிறந்த தேர்களுக்கும் தேர்ச் சிற்பங்களுக்கும் உதாரணமாகத்
    திகழ்பவை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேர்,
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர், திருவாருர்
    தியாகேசர் கோயில் தேர் என்பன. மதுரை மீனாட்சி
    சுந்தரேசுவரர் கோயில் தேரில் சிவபுராணம் தொடர்பான
    சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் மதுரைத் தலபுராணமான
    திருவிளையாடற்     புராணம்     தொடர்பான சிற்பங்களும்
    செதுக்கப்பட்டு உள்ளன.

    தேரில் மட்டும் அன்றிக் கோயிலிலும் மரச் சிற்பங்களை
    அமைப்பதுண்டு. கோபுரங்களின் உட்பகுதியில் பருமனான உயர்ந்த
    மரங்களை அமைப்பர். அம்மரங்களில் குதிரை வீரர் சிற்பங்கள்,
    பாலியல் சிற்பங்கள், புராணச் சிற்பங்கள் எனச் செதுக்குவது
    உண்டு.

    5.5.2 சுதைச் சிற்பங்கள்

    விசயநகர-நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட விமானங்கள்
    மற்றும் கோபுரங்கள் ஆகியவற்றின் கீழ்த் தளம் கற்களாலும்
    கூரைக்கு மேல் சுதையாலும் கட்டப்பட்டு இருக்கும். இவ்வாறு கட்டப்பட்ட விமானங்களில் அந்தக் கோயில்கள் தொடர்பான தல
    புராணங்களைச் சித்திரிக்கும் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு
    இருக்கும். சைவக் கோயிலாக இருப்பின் சைவ சமயம்
    தொடர்பான சிவ புராணத்திலிருந்து சிவனது கதையை விளக்கும் சிற்பங்கள் இடம்பெறும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெற்குக் கோபுரம் முழுவதிலும் சிவ பெருமானின் சிறப்புகளை விளக்கும் சுதைச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. வைணவக் கோயில் எனில் வைணவ சமயம் தொடர்பான சிற்பங்கள் இடம்பெறும்.
    பொதுவாக இராமாயணம், மகாபாரதம் ஆகியவை தொடர்பான
    சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும்,     சில     கோயில்களில்
    கிருஷ்ண லீலைச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அழகர் கோயில்,
    ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் கோயில், மன்னார்குடி
    இராசகோபால சுவாமி கோயில் ஆகியவற்றின் கோபுரங்களில்
    இராமாயணச் சுதைச் சிற்பங்கள் அமைந்துள்ளன.

    சில கோயில் விமானங்களில் மாற்றுச் சமயச் சிற்பங்களும்
    இடம்பெறுகின்றன. மதுரை கூடலழகர் கோயில், வைணவக் கோயில், எனினும் அதன் மூன்றாம் அடுக்கில் சிவ புராணச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    1.
    நாயக்கரது இரு விதமான மண்டபச் சிற்ப அமைப்பு
    முறைகள் எவை?
    2.
    நாயக்கர்களுடைய சிற்பங்களின் பொதுத்தன்மைகள்
    யாவை?
    3.
    கிளிக் கூட்டு மண்டபம் எனப் பெயர் வரக் காரணம்
    என்ன?
    4.
    கம்பத்தடி மண்டபத்தில் சிவபெருமானது சிறப்பான
    வடிவங்கள் எத்தனை இடம் பெற்றுள்ளன?
    5.
    மதுரையின் தல புராணம் எது?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:43:44(இந்திய நேரம்)