தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.2

  • 1.2 அரசனும் படையும்

    உலக வரலாற்றை நோக்கும்போது, உடல், வலிமையின்
    அடிப்படையிலான (Muscular Power) வீரமே (Valour)
    அரசர்களுக்குரிய முதல் தகுதியாகக் கருதப்பட்டிருக்கிறது. கிரேக்க
    நாட்டு மாவீரன் அலெக்சாண்டர். அவன், தனது வீரத்தாலும் தனது
    படை பலத்தாலும், உலகத்திலுள்ள     பல     நாடுகளைக்
    கைப்பற்றினான்; ஒரு பெரிய பேரரசை ஏற்படுத்தினான்.
    அதைப்போல, தனது வீரத்தாலும், படை பலத்தாலும் உரோமப்
    பேரரசை விரிவுபடுத்தியவன் ஜுலியஸ் சீஸர். எனவே ஆட்சிக்கு
    வருவதற்கும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சியை
    விரிவுபடுத்துவதற்கும், ஆட்சியை அமைப்பதற்கும், ஆட்சியைப்
    பாதுகாப்பதற்கும் அரசின் வலிமையே அடிப்படையாக உள்ளது.
    உலகின் பல பேரரசுகள் உருவாகியதற்கும், வீழ்ச்சியடைந்தமைக்கும்,
    அடிப்படைக் காரணம் அரசர்களுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு
    அமைந்த படை பலமே. குடியாட்சிக் காலமாகிய இன்றைக்கும்,
    ஆயுதபலம் எனும் படை பலமும் பணபலமும் ஒரு நாட்டின் வெற்றி
    தோல்வியை முடிவு செய்கிறது. வல்லரசு நாடுகளுக்கு உரிய
    அளவுகோலில் (Yardstick) ஒன்று படை பலம்.

    ஓர் அரசனுக்கு அல்லது ஆட்சிக்குப் படை பலம் எவ்வளவு
    இன்றியமையாதது என்பதை உணர்ந்த வள்ளுவர், ‘படை மாட்சி’
    ‘படைச்செருக்கு’ என்னும் இரண்டு அதிகாரங்களில் படையைப்
    பற்றிக் குறிப்பிடுகிறார்.


    1.2.1 படையின் இலக்கணம்

    படை என்றால் எது? எண்ணிக்கையா? இல்லை. ஆற்றல்! எத்தகைய
    ஆற்றல்? தன் உயிர் போனாலும் கவலையில்லை, பகையை அழிக்க
    வேண்டும்; பகைவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்;
    நம் உயிரை நம்மிடம் இருந்து பிரித்துச் செல்லும் எமனே
    வந்தாலும் அவனையும் மனத் துணிச்சலுடன் ஒற்றுமையாக எதிர்க்க
    வேண்டும், எனும் இயல்புகளைக் கொண்ட வீரர்களின் ஆற்றல்
    உடையதே படை என்கிறார் வள்ளுவர்.


    கூற்று உடன்று மேல்வரினும், கூடி, எதிர்நிற்கும்
    ஆற்றல் அதுவே படை.


    (குறள்: 765)


    (கூற்று - எமன் ; உடன்று - கோபம் கொண்டு)

    இதுவே வள்ளுவர் படைக்குக் கூறும் இலக்கணம். இந்த
    இலக்கணத்தை வள்ளுவர் எங்கிருந்து பெற்றார்? அவர் வாழ்ந்த
    காலத்துத் தமிழர்களின் வீரம் மிகுந்த வாழ்வில் இருந்துதானே
    பெற்றிருக்க வேண்டும். நாட்டிற்காக வீரத்துடன் போர் செய்வது
    தமிழர்களின் பண்பாடு. அதையே வள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.


    1.2.2 எலிப்படையின் முன் நாகம் போல!

    பெருமளவில் கூட்டமாக எலிகள் ஒன்று கூடி பகைக் கூச்சல்
    போட்டாலும், பாம்பு ஒரு சீற்றம் சீறினால், அவை பகை மறந்து
    அஞ்சி ஓடிவிடும். அதைப்போலத்தான், ஆற்றல் இல்லாத
    வீரர்களும் பகைவர்களைக் கண்டு அஞ்சி ஓடி விடுவார்கள்
    என்கிறார் வள்ளுவர்.


    ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்


    (குறள் : 763)


    (உவரி - மிகுதி, நாகம் - பாம்பு, உயிர்ப்ப - சீற்றப் பெருமூச்சுவிட)

    எனவே, படைக்கு வீரர்களின் எண்ணிக்கை முக்கியம் அல்ல.
    அணிவகுப்பு கலையாமல், பகைவர்களுடைய அச்சுறுத்தலுக்கு
    அஞ்சாமல், மன உறுதியுடன் இருக்கும் ஆற்றல் வேண்டும்.
    அத்தகைய படைவீரர்கள், உயிரைக் கொண்டு செல்ல வரும்
    எமனைக் கண்டும் அஞ்சமாட்டார்கள்.


    1.2.3 விழுப்புண் படாதநாள் வீணான நாளே!

    போர் வீரரைத் தமிழ்ச் சமுதாயம் மிகவும் பெருமைப்படுத்தி
    வந்திருக்கின்றது. போர் வீரனைப் பெற்ற தாய் பெருமிதம்
    கொண்டிருக்கிறாள் நாட்டிற்காக நடைபெறும் போரில் கலந்து
    கொள்வதைத் தம் கடமையாகக் கருதியுள்ளார்கள் தமிழர்கள்.
    இதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. முதல்
    நாள் போரில் தன் தந்தையை இழந்த பெண், மறுநாள் போரில்
    தன் கணவனை அனுப்புகிறாள். கணவனும் வீர மரணம்
    அடைகிறான். மூன்றாம் நாள், தன் மகனையும் போருக்கு அனுப்பத்
    துணிகிறாள். தமிழ்ச் சமுதாயத்தில், ஒரு பெண்ணுக்கு இருக்கும்
    நாட்டுப்பற்றை இது காட்டுகின்றதல்லவா? நாட்டுப்பற்று என்பது
    தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்று. நாட்டிற்காகத் தன்
    வீரத்தை வெளிப்படுத்திப் போர் செய்யும் வீரர்களை விரும்பிப் பெண்கள்     காதலித்துள்ளார்கள்.     போரில் வீரமரணம்
    அடைந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்தி மக்கள்
    மரியாதை செலுத்தியுள்ளனர். இத்தகைய பண்பட்ட சமூகத்தின்
    வெளிப்பாடே படைவீரர்களைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்துகள்.
    எனவே, படை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறிய வள்ளுவர்,
    ஒரு வீரன் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதனைப்
    ‘படைச்செருக்கு’ (செருக்கு = பெருமிதம்) எனும் அதிகாரத்தில் மிகச்
    சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

    பகைவனை எதிர்த்துப் போரிட்டு மார்பிலே விழுப்புண் படுவதை
    ஒரு பேறாகக் கொண்டு வாழ்ந்தவன் தமிழன். அவ்வாறு விழுப்புண்
    படாத நாட்கள், பயன்படாத நாட்களாகக் கருதி வாழ்ந்தான்
    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். எனவே,


    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்கும் தன் நாளைஎடுத்து


    (குறள் : 776)


    (விழுப்புண் = உடம்பின் முற்பகுதியில் வீரத்தின் அடையாளமாகப்
    போரில் பெற்ற காயம், வழுக்கு = பயனற்றது,
    எடுத்து
    = வேறுபடுத்தி)

    என்று குறிப்பிடுகிறார்.

    ஒரு வீரன் தன் வாழ்நாட்களை எண்ணி, போரில் ஈடுபட்டு
    அவற்றுள் தன் மார்பில்     விழுப்புண்பட்ட நாட்களைப்
    பயன்பட்ட நாட்கள் என்றும், விழுப்புண் படாத நாட்களைப்
    பயனில்லாத நாட்கள் என்றும் கருதுவான் என்பது இந்தக் குறள்
    தரும் செய்தி.

    பயனுடைய நாட்களாகத் தன் வாழ்நாளைக் கழிக்க விரும்பும் வீரர்,
    போர் நிகழும்போது பகைவனைக் கண்டு அஞ்சி ஓடாமல், எதிர்
    எதிராக நின்று, போர் செய்து மார்பில் விழுப்புண் படுவதைப்
    பெருமையாகவும், கடமையாகவும் கொண்டு வாழ்ந்தனர்.


    1.2.4 எது வீரம்? - காட்சி விளக்கம்: 1

    படைவீரர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன், படைவீரர்களுக்கு
    உரிய வீரத்தைச் சுட்டுகிறார் வள்ளுவர். போரில் கலந்து
    கொண்ட வீரர்களிடம் எத்தகைய வீரத்தை எதிர்பார்த்தார்கள்?

    காட்டிலே அஞ்சி வெகு தூரத்தில் ஓடுகின்ற முயலைக்
    குறிதவறாமல் கொல்லுவது வீரமா? அல்லது தன் எதிரே நிற்கும் பலமுள்ள யானையைத் தாக்கி, அது தப்பித்துச் செல்லும் வகையில்
    தோல்வி தழுவிய முயற்சி வீரமா? வள்ளுவர் பின்னதைத்தான்
    வீரம் என்கிறார். இதனைக்,


    கானமுயல் எய்த அம்பினில் யானை
    பிழைத்த வேல் ஏந்தல் இனிது


    (குறள் : 772)


    (யானை பிழைத்த வேல் = யானை தப்பிக்குமாறு எய்திய வேல்)

    என்ற குறளில் சுட்டுகிறார்.


    1.2.5 எது வீரம் - காட்சி விளக்கம்: 2

    போர்க்களத்தின் ஒரு காட்சியைக் காணுங்கள். போர் உச்ச
    நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படை வீரன், தன்
    கையிலிருந்த வேலை ஒரு யானையின் மேல் எறிகிறான். அது
    யானையின் உடலில் போய் பதிகிறது. யானை பயந்து அந்த
    வேலுடன் ஓடுகிறது. எதிர்பாராத விதமாக, அவன் முன்னே,
    இன்னொரு யானை வந்து அவனைத்தாக்க முயல்கிறது. அந்த
    யானையைத் தாக்கக் கையில் வேல் இல்லாமல் வீரன் தவிக்கிறான்.
    திடீரென, தன் மார்பில், பகைவனால் எறியப்பட்ட வேல் ஒன்று
    பதிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி!
    யானையைத் தாக்குவதற்கு வேல் கிடைத்த மகிழ்ச்சி!! இந்த வீர
    நிகழ்ச்சியை மிக அழகாக இரண்டே வரிகளில் விளக்குகிறார்
    வள்ளுவர்.


    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்.


    (குறள் : 774)


    (களிறு = யானை; மெய் = உடல்; பறியா நகும் = பிடுங்கி மகிழ்வான்)

    இதில் அமைந்துள்ள பெரும் சிறப்பு எது என்றால், அந்த வீரனின்
    உடல் வலிமையும், மனத் திண்மையும் தான். அவன், முதலில் வந்த
    யானையைத் தாக்குவதற்கு முன்னரே, அந்த வேல், அவன் உடலில்
    பகைவனால் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், அவன்
    உடலில் பதிந்த அந்த வலோல், அவன் உடலுக்கு எந்த விதமான
    வலியும் ஏற்படவில்லை. அவ்வளவு வலுவானது அவனது உடல்.
    முன்பே வலி தெரிந்திருந்தால், அதைப் பிடுங்கி எறிந்திருப்பான்.
    அந்த வலியை உணர்த்தாத உடல் வலிமையே, அவன் உயிரை
    யானையிடம் இருந்து காப்பாற்றுவதற்குத் துணை செய்தது.

    திண்மையான உடல், அஞ்சாத நெஞ்சம், மன உறுதி, சூழலுக்கேற்ற
    செயலாற்றல இவை ஒரு வீரனுக்கு உரிய சிறந்த இலக்கணங்கள்.
    இவை அனைத்தையும் வள்ளுவர் ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம்
    மிகச் சிறப்பாக வெளியிடுகிறார். இது ஒரு படை வீரனுக்கு உரிய
    எடுத்துக்காட்டு.


    1.2.6 கலங்காத நெஞ்சினரின் சிமிட்டாத கண்

    எதிரே நின்று உரக்கக் கத்தினாலே சிலர், பயத்தினால் கண்களை
    மூடிக்கொள்வர். ஆனால் சிறந்த வீரன், பகைவன் தன் எதிரே
    நின்று, தன் மீது வேலை எறிந்தாலும், பகைவனைக் கோபத்தோடு
    பார்த்த தன் கண்களைக் கொஞ்சம் கூட சிமிட்ட (wink) மாட்டான்.
    எதிர்பாராமல் வந்த தாக்குதலைக் கண்டு, ஒரு கணம் கண்ணைச்
    சிமிட்டினாலும், அது தனக்கு வந்த பெரிய அவமானமாகக்
    கருதுவான். ஒரு வீரனின் அஞ்சாமையை வள்ளுவர்,


    விழித்தகண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின்

    ஒட்டு அன்றோ வன்கண் அவர்க்கு?

    (குறள் : 775)


    (ஒட்டு = இழுக்கு; வன்கண் அவர்க்கு = வீரர்க்கு)

    என்ற குறள்பா மூலம் காட்டுகிறார். எதிரே நிற்கும் பகைவர்களைக்
    கோபமாகப் பார்க்கின்றான் அவ்வீரன். அப்பொழுது, பகைவன்
    நேரேகுறிபார்த்து வேலை எறிகிறான். வேல் எறிவதைப் பார்த்ததும்,
    கண்ணை மூடி இமைப்பானானாால் அது அந்த வீரனுக்கு இழுக்கு
    அல்லவா?. ஒரு கணம் பார்வையை விலக்கிக் கொண்டாலே,
    பகைவன் செலுத்தும் அம்புக்கு அஞ்சிவிட்டான் என்றாகிவிடும்.
    எனவே, அஞ்சா நெஞ்சுடைய வீரன், கொஞ்சமும் நெகிழாமல்,
    தான் மேற்கொண்ட வினையிலிருந்து பின்வாங்காது நிற்கிறான்.
    ஒருகணம் பின்வாங்கினாலும் அது வீரத்திற்கு இழுக்கு என்று கருதி
    வாழ்ந்தனர் பண்டைய தமிழர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:08:08(இந்திய நேரம்)