தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.3

  • 1.3 அரசனும் குடிமக்களும்

    அரசனுக்கு அல்லது ஓர் ஆட்சிக்கு நல்ல குடிமக்கள் அமைய
    வேண்டும். நல்ல ஆட்சி அமைவதற்கு அது தேவை. இதை
    உணர்ந்த வள்ளுவர் நல்ல குடி எவ்வாறு இருக்க வேண்டும்;
    அதன் இயல்புகள் யாவை; நல்லகுடியில் பிறந்தவர்களின் கடமைகள்
    யாவை என்பனவற்றை, ‘குடிமை’, ‘குடிசெயல்வகை’ எனும் இரண்டு
    அதிகாரங்களின் மூலம் விளக்குகிறார். ஒருவனின் இயல்புகளுக்கும்,
    செயல்களுக்கும் அடிப்படை அமைத்துக் கொடுப்பது, அவன் பிறந்த
    குடியே. நல்ல குடியில் பிறந்தவர்கள், தவறான செயல்களில்
    ஈடுபடமாட்டார்கள். முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவி செய்து,
    பழி பாவங்களுக்குப் பயந்து நடப்பார்கள். இதையே வளர்ப்பு முறை
    என்பார்கள். இதனையே வள்ளுவர் குடிமை என்று குறிப்பிடுகிறார்.


    1.3.1 குடிமக்களும் பண்புகளும்

    ஒழுக்கமும், உண்மையும், பழி தரும் செயலைச் செய்வதற்குத்
    தயங்கும் நாணமும் நல்ல குடியில் பிறந்தவர்களிடம் காணப்படும்
    நல்ல குணங்கள். எவ்வளவு செல்வம் கிடைப்பதாக இருந்தாலும்,
    கண்ணியக் குறைவான செயலைச் செய்ய மாட்டார்கள். பொருளே
    இல்லாமல், வறுமையால் எவ்வளவு துன்பப்பட்டாலும் தமது
    நல்லபண்புகளை விட்டு விட மாட்டார்கள். எனவேதான்,


    ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
    இழுக்கார் குடி பிறந்தார்


    (குறள்: 952)


    (நாண் = நாணம்; இழுக்கார் = விடமாட்டார்கள்)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது நல்லகுடியில்
    பிறந்தவர்கள், ஒழுக்கம், வாய்மை, நாணம் இம்மூன்றிலிருந்தும்
    ஒருபோதும் தவறமாட்டார்கள். இயல்பாகவே இத்தகைய பண்புகள்
    அமைந்திருக்கும் குடிகளை உடைய நாட்டை ஆளும் மன்னன்
    பேறு பெற்றவன். ஏனென்றால் ஒழுக்கமும், உண்மை பேசுதலும்,
    பழிதரும் செயல்களைச் செய்ய அஞ்சும் தன்மையும் ஒருநாட்டிற்குப்
    பெருமை சேர்க்கும் செல்வங்கள். இத்தகைய மக்கள் செல்வத்தைப்
    பெற்ற அரசனுக்கு, நல்லாட்சி வழங்குவதில் என்ன தடை இருக்க
    இயலும்?


    1.3.2 குடிமக்களும் பெருமையும்

    மேலும், நல்ல குடியில் பிறந்தவர்களின் இயல்புகளைப் பற்றி
    விளக்கும்போது, நல்ல வளமான நிலத்தில் விளையும் பயிரோடு
    ஒப்பிட்டுக் கூறுகிறார்.

    ஒரு செடி, தள தள என செழிப்பாக வளருமானால், அது
    சார்ந்திருக்கும். நிலம் மிகவும் வளமாகவும், போதுமான நீரை
    உடையதாகவும், நன்கு பக்குவப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும். இது
    அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய ஒன்று. இந்த உண்மையை,
    நல்ல குலத்தில் தோன்றியோரின் தன்மையுடன் வள்ளுவர்
    ஒப்பிடுகிறார்.


    நிலத்தில் கிடந்தமை கால்காட்டும், காட்டும்
    குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்


    (குறள்: 959)


    (கால் = முளை, sprout)

    நிலத்தின் வளத்தை அதில் தோன்றி வளரும் செடி
    உணர்த்துவதைப் போல, ஒருவர் பேசும் பேச்சு அவர் தோன்றிய
    குடியின் பெருமையை வெளிப்படுத்தும்.

    ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதனை, அவன் பேசும் பேச்சில்
    இருந்தும், அவனது செயலில் இருந்தும் அறியலாம் என்பார்கள்.
    அவன் பேசும் வார்த்தை எங்கிருந்து வருகிறது? அவன்
    உள்ளத்திலிருந்து அல்லவா? அந்த உள்ளத்தை நிலம் எனகிறார்
    வள்ளுவர். அந்த உள்ளம் அமைவது அவன் பிறந்து வளர்ந்த
    குடியினால். அந்தக்குடியும் பண்பாடு உடைய குடியாக இருந்தால்,
    அவன் வாயில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும்,
    அவனது பண்பாட்டை வெளிப்படுத்தும். இதனையே வள்ளுவர்
    மேலேகுறிப்பிட்ட குறளின் வாயிலாக விளக்குகிறார்.

    வள்ளுவர், தோன்றிய தமிழ்ச்சமுதாயமாகிய நிலம் பண்பாட்டு வளம்
    மிகுந்தது. அதில் தோன்றிய செடியாகிய வள்ளுவர் வளமான
    நிலத்தில் தோன்றிய செடியைப்போல், தமிழர்களின் பண்பாட்டுச்
    சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

    மேற்குறிப்பிட்ட நல்ல பண்புகள் மிகுந்த குடிமக்கள் ஒரு நாட்டில்
    வாழ்வார்கள் என்றால், அந்த நாடு நல்ல குடிமை உடைய
    நாடாகவும், அத்தகையோரை உடைய மன்னனின் ஆட்சி சிறப்பு
    உடையதாகவும் அமையும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
    குடும்பம் சமுதாயத்தில் ஓர் அங்கம். எனவே, குடும்பத்தின்
    முன்னேற்றம் சமுதாயத்தின்     முன்னேற்றம். சமுதாயத்தின்
    முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்று கருதியது தமிழ்ச்
    சமுதாயம். தமிழர்களின் இத்தகைய எண்ணம் தமிழர்களின்
    பண்பாட்டின் வெளிப்பாடு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:08:13(இந்திய நேரம்)