தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 1.6

  • 1.6 அரசனும் நட்பும்

    நாட்டு மக்களுடனும், பக்கத்து நாட்டு மன்னர்களுடன் சுமுகமான
    உறவு இருக்க வேண்டியதும் அரசனுக்கு உரிய கூறுகளில்
    முக்கியமான ஒன்று.

    இன்றைக்கும், நாடுகளிடையே நடைபெறும் சண்டைகளின் முக்கியக்
    காரணம் பக்கத்து நாடுகளுடன் உள்ள பகையே. “பகைவனை
    நண்பனாக்கிக் கொண்டால் ஒரு நல்ல நண்பனைப் பெறுவாய்”
    என்பது சீனப் பழமொழி. வள்ளுவர் இந்த உண்மையை உணர்ந்து,
    மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மன்னனுக்கு, முக்கியமான
    பண்புகளில் ஒன்றாக நல் உறவைக் குறிப்பிடுகிறார்.

    ஒருவன் நண்பனா அல்லது பகைவனா என்பதைச் சூழல்தான்
    தீர்மானிக்கும். நல்ல நண்பன்போல் நெடுநாட்கள் நம்முடன் பழகிய
    ஒருவர் நமக்குத் துன்பம் வரும்போது, நம்மை விட்டுச் செல்லலாம்.
    அல்லது நம்மோடு பழகிய நாட்களில் நமக்குத் தீங்கு
    நினைத்திருக்கலாம். எனவே, நம்முடன் நெடுநாட்களாக நெருங்கிப்
    பழகியவர்களெல்லாம் நண்பர்கள் என்று சொல்ல முடியாது.
    நம்முடன் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தாலும், நம்முடன்
    ஒத்த கருத்துகள் உடையவர்களாக இருந்தாலும் அவர்களும்
    நண்பர்களே என்கிறார் வள்ளுவர். இதனை,


    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்


    (குறள்: 785)


    (புணர்ச்சி = தொடர்பு/ கூடியிருத்தல், உணர்ச்சி = ஒத்த
    உணர்வுகள், கிழமை = உரிமை, தரும் = கொடுக்கும்)

    என்று குறிப்பிடுகிறார்.

    ஒருவருடன் ஒருவர் நட்புக் கொள்வதற்கு ஒரே இடத்தில் கூடி
    இருக்க வேண்டும் என்பதோ, அடிக்கடி கண்டு பழக வேண்டும்
    என்பதோ தேவை இல்லை. இருவருக்கும் இடையே ஒருமித்த
    கருத்து அல்லது உணர்வுகள் இருக்குமானால், அதுபோதும்.
    அதுவே நட்பு ஏற்படுவதற்கு உரிய உரிமையைக் கொடுக்கும்
    என்பது இக்குறள் தரும் செய்தி.

    நாட்டை ஆளும் மன்னன், மக்களின் மன நிலையை அறியும்
    ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
    நாட்டுப்பற்றுடைய, நாட்டின் முன்னேற்றத்தில் விருப்பம்
    உடையவர்களை அடையாளம் காண     இயலும். நாட்டு
    முன்னேற்றத்திலும் பிறவற்றிலும் பற்றுடையவர்களை அறிந்து
    நண்பர்களாகக் கொண்டால் மன்னனது அரசாட்சிக்கு அவர்கள்
    நட்பு பெரும் துணையாக அமையும்.

    மேலும், கருத்தளவிலும், நோக்கங்களிலும் தம் கருத்துகளுக்கு
    ஒத்துச் செல்லக் கூடிய அண்டை நாட்டு அரசன் இருந்தால்
    அவனோடு நட்பு கொள்வது சிறப்பு. ஒருமித்த கருத்துடைய
    இருமன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு உடையவர்களானால்,
    பகையின்றி,     போரின்றி,     விருப்பு     வெறுப்பின்றி
    எல்லைத்தகராறுமின்றி     மக்கள் அமைதியாக இருப்பார்கள்.
    அத்தகைய நாட்டு மன்னர்களும் பகையின்றி, பயமின்றி
    நல்லாட்சியை வழங்குவர்.

    பிறரோடு கொள்ளும் நல்உறவு அல்லது நட்பு ஒருவனின்
    பக்குவப்பட்ட உள்ளத்தையும், அவனது பண்பாட்டையும்
    புலப்படுத்தும். இத்தகைய பண்பாடு தமிழ் மன்னர்களிடம் இருந்தது.
    அதன் வெளிப்பாடே வள்ளுவர் கூறும் கருத்துகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:08:26(இந்திய நேரம்)