தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 2.3

  • 2.3 அரசனின் செயல் திறன்கள்

    அரசனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் எவை எவை என்று
    சுட்டிய வள்ளுவர், அவர்களது கடமைகளைப்     பற்றியும்
    குறிப்பிட்டார். மேலும், அரசனுக்கு     இருக்க வேண்டிய
    செயல்முறைகளைப் பற்றியும் கூறியுள்ளார்.

    இயல்புகளில் அஞ்சாமை, ஈகை, ஊக்கம் போன்றவை இயல்பாகவே
    மன்னனுக்கு அமைந்து இருக்கலாம். அறிவு அவனாக முயன்று
    பெற வேண்டிய ஒன்று என்பதை முன்பே பார்த்தோம்.
    மேற்குறிப்பிட்டவை இருப்பது சிறப்பு. இவை இல்லாமலும்
    மன்னர்கள் இருக்கலாம். அதேபோல், இயற்றல், ஈட்டல், காத்தல்,
    வகுத்தல் போன்ற கடமைகள் மன்னனுக்கு இருக்க வேண்டும்.
    இவற்றைப் பற்றிய கடமை உணர்வு மன்னனுக்கு இருக்கலாம்.
    ஆனால், இவற்றில் சிலவற்றை அவனால் செயல்படுத்த
    இயலாமலும் இருக்கலாம். எனவே தான் வள்ளுவர். இயல்பாகச்
    சிலவும், கடமைகளாகச் சிலவும் இருந்தால் மட்டும் போதாது.
    அவற்றைச் செயல்படுத்துவதில் தான் ஒரு மன்னனின் திறன்
    அமைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

    கொடை வழங்குவதிலும், இரக்கம் காட்டுவதிலும், செங்கோல்
    செலுத்துவதிலும், குடிகளைப் பாதுகாத்தலிலும் ஒரு மன்னன் தன்
    செயல் திறனைக் காட்ட வேண்டும். அவ்வாறு செயல்
    திறனைக்காட்டுகின்றவன் அரசர்களிடையே ஒளிதரும் விளக்காகத்
    திகழ்வான் என்கிறார் வள்ளுவர்.


    கொடை, அளி, செங்கோல், குடிஓம்பல் நான்கும்
    உடையான் ஆம், வேந்தர்க்கு ஒளி


    (குறள்: 390)


    (அளி = இரக்கம், ஓம்பல் = பாதுகாத்தல், ஆம் = ஆகும்)

    அறிவாலோ, ஆற்றலாலோ, பண்பாலோ தகுதி உடையவர்களுக்குத்
    தேவையானவற்றை வழங்க வேண்டும். யாரிடம் இரக்கம்
    காட்டவேண்டுமோ அவர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும்.
    குடிகள் பாதிக்காதவாறு நல்ல ஆட்சியை நடத்த வேண்டும்.
    அதோடு குடிகளைப் பாதுகாத்துப் பேண வேண்டும். இத்தகைய
    செயல் திறன்கள் உடைய மன்னன் தலைசிறந்தவன். அவனே
    மன்னர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு; மன்னர்களுள் ஒளியாகத்
    திகழ்பவன் என்கிறார் வள்ளுவர்.


    2.3.1 கொடை

    அரசனுக்கு உரிய இயல்புகளில் ஒன்றாக ஈகையைச் சுட்டியுள்ளார்
    வள்ளுவர். இங்குச் செயல்திறனில் கொடையைக் குறிப்பிடுகிறார்.
    இரண்டிற்கும் என்ன வேறுபாடு? ஈகையைச் சுட்டிய பின்னால்,
    கொடையை ஏன் சுட்ட வேண்டும்?

    ‘வள்ளுவரின் குறளில் ஒரு சொல்லை எடுக்கவோ தொடுக்கவோ
    இயலாது. அவர் பயன்படுத்திய ஒவ்வொரு சொல்லும் செதுக்கி
    வைத்த சிற்பம் போன்றவை’ என்று குறிப்பிடுவர். எனவே எந்த
    ஒரு சொல்லையும் தேவை இல்லாமலும் மிகையாகவும் வள்ளுவர்
    பயன்படுத்தவில்லை. எனவே, ஈகை என்பதற்கு அவர் கொண்ட
    பொருள் வேறு, கொடை என்பதற்கு அவர் கருதிய பொருள்
    வேறு. ஈகை, என்பதைப் பற்றி இயற்கெனவே அறிந்துள்ளோம்.
    வள்ளுவர்     கொடை என்பதை ‘அறிவுடையோருக்கும்,
    சான்றோர்க்கும் அவர்களது தகுதிகளை அறிந்து, அவற்றிற்கு ஏற்ப
    உதவுதல்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தி உள்ளார்.

    பண்டைத் தமிழ் மன்னர்களை நாடிப் புலவர்கள் சென்றார்கள். தம்
    புலமையை வெளிப்படுத்திப் பரிசு பெற்றனர். அவ்வாறு பரிசு
    வழங்கிய மன்னர்களைக்     கொடை வள்ளல்கள் என்று
    குறிப்பிடுகிறோம். எனவே வள்ளுவர் ‘கொடை’ என்பதை
    மேற்குறிப்பிட்ட     வகையிலேயேதான் பயன்படுத்தினார்.
    தகுந்தவர்களுக்கு உதவுவது மன்னனின் செயல்திறன்களில் ஒன்று.
    அதுவே மன்னனது கொடை.

    அறிவிலும்,     அனுபவத்திலும், பண்பிலும் சிறப்புடைய
    பெரியவர்களாகிய சான்றோரைப் பேணி, அவர்களை உறவாகக்
    கொள்வது ஓர் அரிய செயல். இது அரசர்களின் செயல்களில்
    அரியது. இதனை,


    அரியவற்றுள் எல்லாம் அரிதே. பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்


    (குறள்: 443)


    (தமர் = உறவினர், பேணி = பாதுகாத்து)

    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்,

    நாட்டை ஆளும்     அரசன்,     சான்றோரை நண்பராக -
    உறவினராகக் கொள்ள வேண்டும். அது மன்னர் செயல்படுத்தும்
    அரிய செயல்களுள் அரியது. எனவே, தக்கோராகிய சான்றோரின்
    தேவைக்கு ஏற்ப உதவி செய்து அவர்களைப் பேணிப் பாதுகாக்க
    வேண்டும். இத்தகைய கொடைத் தன்மை ஒரு மன்னனின் செயல்
    திறன்களில் ஒன்று என்கிறார் வள்ளுவர்.


    2.3.2 இரக்கம்

    ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு’ என்பது
    கிறித்தவர்களின் விவிலியம் கூறும் கருத்து. ஆனால் இக்கருத்து
    எல்லா நிலையிலும் சூழலிலும் பொருந்துமா, பயன்தருமா? இல்லை.
    சில இடங்களில் பொருந்தும், சில இடங்களில் பொருந்தாது.
    பொருந்தும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
    அல்லது பின்பற்ற வேண்டும்.

    ஒருவன் நமது உடைமைப்பொருளைத் திருடினால், அவனைப்
    பார்த்து இன்னொரு பொருளைச் சுட்டிக் காட்டி, அதையும்
    எடுத்துச் செல் என்று கூறுவதில்லை. அவ்வாறு கூறவும் முடியாது.
    ஒருவன் மீது இரக்கம் காட்டுவது அத்தன்மையதே.

    நயவஞ்சகமாக நாட்டைக் கவர்வதற்குச் சிலர் முயல்வர்.
    அப்பொழுது நல்லவன்போல் போலியாய் நடிப்பார்கள். அதன்
    வாயிலாகச் சதித் திட்டம் தீட்டுவார்கள். அத்தகையோரைத்
    தண்டிக்காமல் இரக்கம் காட்ட முடியுமா?

    ஒரு குறிப்பிட்ட குற்றத்திற்கு மூன்று ஆண்டுக் காலம் வரையிலும்
    சிறைத் தண்டனை வழங்கலாம். ஆனால் அந்தக் குற்றத்தைச்
    செய்தவன் தவிர்க்க இயலாத தன் சூழலினால் அந்தக் குற்றத்தைச்
    செய்துள்ளான். வேண்டுமென்று செய்யவில்லை என்பவற்றை நீதி
    வழங்கும் நடுவர் உணர்வாரானால், அந்தக் குற்றவாளி மீது இரக்கம்
    காட்டலாம். தன் இரக்கத்தால் மூன்று ஆண்டுகளுக்கு மாறாக
    ஓராண்டாகக் குறைக்கலாம். அல்லது எச்சரிக்கை செய்து, விட்டு
    விடலாம். இதையே வள்ளுவர்.


    கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
    நீங்காமை வேண்டு பவர்


    (குறள்: 562)


    (கடிது = கடுமையாக, ஓச்சி = ஓங்கி, மெல்ல = மெதுவாக,
    ஆக்கம் = ஆட்சி செல்வம், வேண்டுபவர் = விரும்புபவர்)

    ஆட்சியாகிய செல்வம், தன்னிடம் நெடுங்காலம் நிலைத்து இருக்க
    வேண்டும் என்று     எண்ணும் அரசன், குற்றவாளியைத்
    தண்டிக்கும்போது தண்டனையைக் கடுமையாகக் காட்டி,
    மென்மையாகச் செய்ய வேண்டும். அதாவது கல்லை அல்லது
    வேலை எறிபவன் கையை மிக உயர்த்திப் பின்பு தாழ்த்தி மெல்ல
    எறிவது போல, தண்டனையின் அளவைக் குறைத்துத் தண்டிப்பது
    போல் காட்ட வேண்டும். இதனால் குற்றவாளி அஞ்சவும்
    வேண்டும். அதே போல், குற்றம் செய்தால் தண்டனை உண்டு
    என்பதனையும் உணர வேண்டும் என்ற உண்மைகளை எல்லாம்
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    இரக்கம் யாரிடம் காட்ட வேண்டும்? அது எவ்வாறு அமைய
    வேண்டும்? என்பவற்றைத் தெளிவாகக் கூறுகிறார் வள்ளுவர்.
    மக்கள் வெறுப்பு கொள்ளாது மனம் திருந்தும் படி இரக்கம் காட்டும்
    செயலை மன்னன் செய்ய வேண்டும். இது மன்னனின்
    செயல்திறனை வெளிப்படுத்தும்.


    2.3.3 செங்கோன்மை

    நேரான கோல்போல் ஆட்சி நேர்மையாக இருப்பதால் ‘செங்கோல்’
    (நெழிவு சுழிவு இல்லாத செம்மையான கோல்) என்று
    அழைக்கப்பட்டது. செங்கோலின் தன்மை செங்கோன்மை.

    ஓர் அரசன் நேர்மையான ஆட்சி நடத்தினால் அவனைச்
    செங்கோலன் என்றும், அவன் ஆட்சியைச் செங்கோன்மை
    என்றும் அழைப்பர். எனவே, ஒரு நாட்டின் நேர்மையான ஆட்சி
    முறைக்குச் செங்கோன்மை என்று பெயர். அரசாட்சியில்
    அமர்பவர்கள் அனைவரும் செங்கோன்மை உடையவர்கள் அல்ல.
    அவர்களுள் சிலரே செங்கோன்மை உடையவர்களாகத்
    திகழ்கின்றனர். எனவே வள்ளுவர் அத்தகையோரை மன்னர்களுள்
    ஒளியாய் இருப்பவன் என்று கூறுகிறார்.

    • மன்னனும் கடவுளும்
    முடியாட்சிக் காலத்தில் மன்னனைக் கடவுளுக்குச் சமமாகப்
    போற்றினர். கோ - என்றால் அரசன் என்று பொருள். எனவே
    அரசன் குடியிருக்கும் இடத்தையும் கோயில் (கோ+இல்=கோயில்)
    என்றே அழைத்தனர். கடவுள் எவ்வாறு விருப்பு வெறுப்பு
    இல்லாமல் திகழ்கிறாரோ-நீதி வழங்குகிறாரோ அதைப்போல்
    மன்னனும் எந்தப் பக்கமும் சாராத நேர்மையாளனாக
    இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவ்வாறு
    செயல்படுகின்றவனைக்     கடவுளாகக் கருதிப் போற்றினர்.
    முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்த வள்ளுவர் இதை நன்கு
    உணர்ந்தவர். எனவே, செங்கோலனாகத் திகழும் ஓர் அரசன்
    எவ்வாறு செயல்படவேண்டும் என்பதனை,


    ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்து செய்வஃதே முறை


    (குறள்: 541)


    (கண்ணோடாது = யாரிடமும் சிறப்பாக அன்பு கொள்ளாது,
    இறை = நடுநிலை, யார்மாட்டும் = எவரிடத்தும்)

    என்று குறிப்பிடுகின்றார்.

    தன் குடிமகன் செய்த குற்றங்களை ஆராய்ந்து, எவரிடத்தும்
    சிறப்பாக அன்பு கொள்ளாது, அறநூல்களில் கூறியவற்றிற்கு ஏற்ப
    நடுநிலைமையாகச் செயல்படவேண்டும். அதுவே ஒரு செங்கோல்
    மன்னனுக்கு உரிய செயல்திறன் என்கிறார் வள்ளுவர்.

    • மன்னனும் செங்கோலும்
    சிலப்பதிகாரத்தின் கதையை முன் பாடங்களின் மூலம் அறிவீர்கள்.
    பொற்கொல்லன் ஒருவன் கூறியதை நம்பி, அவன் பக்கம் சார்ந்து
    தீர்ப்பு வழங்கினான் பாண்டியன் நெடுஞ்செழியன். நன்கு
    ஆராயாமல், ஒரு பக்கம் சார்ந்து தவறான தீர்ப்பை மன்னன்
    நெடுஞ்செழியன் வழங்கினான் என்பதனை நிரூபித்தாள் கண்ணகி.
    செங்கோன்மை ஆட்சி செய்து வந்த பரம்பரையில் வந்த மன்னன்
    தன் தவறை உணர்ந்தான். உடனே தன் உயிரை நீத்தான். அவன்
    உயிர் நீத்தமையால், வளைந்த செங்கோல் நிமிர்ந்தது என்று
    குறிப்பிடுவார் இளங்கோ அடிகள்.


    இந்நிகழ்ச்சி எதைப் புலப்படுத்துகிறது? வள்ளுவர் கூறியவாறு,
    ஒரு நாட்டை ஆளும் மன்னன், நன்கு ஆராய்ந்து, நடுநிலைமையாக
    நீதி வழங்க வேண்டும். அத்தகைய செயல்திறன் உடையவனே
    மன்னருள் சிறப்புடையவன்.


    2.3.4 குடிஓம்பல்

    குடிமக்களைப் பாதுகாத்தலையே ‘குடிஓம்பல்’ என்று வள்ளுவர்
    குறிப்பிடுகின்றார். ஒரு நாட்டுக்கு - நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு
    என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. பகைவர்களிடமிருந்தும்,
    வறுமையிலிருந்தும் நோயிலிருந்தும், தீய செயல்களிலிருந்தும்
    மக்களைப் பாதுகாக்க வேண்டியது மன்னனின் பொறுப்பு. அதற்கு
    மன்னன் என்ன செய்ய வேண்டும் என வள்ளுவர் பட்டியலிட்டுக்
    குறிப்பிடுகிறார்.

    நோயில்லாமை, செல்வம் உடைமை, விளைவு உடைமை, இன்பம்
    உடைமை, பாதுகாப்பு உடைமை என்ற ஐந்தும்ஒரு நாட்டில் இருக்க
    வேண்டும். இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு தருபவை
    என்கிறார் வள்ளுவர்.


    பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
    அணி என்ப நாட்டிற்கு இவ்ஐந்து


    (குறள்: 738)


    (பிணி = நோய், விளைவு = விளையும் பொருள்,
    ஏமம்
    = பாதுகாப்பு)

    மக்களுக்கு நோய் வராமல் தடுக்க வேண்டும். நோய் வந்தாலும்
    அதைப் போக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்
    மக்களை நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

    இவற்றை யார் செய்வார்கள்? தனி நபர் செய்ய இயலுமா? ஒரு
    நாட்டை ஆளும் மன்னனே, மக்களின் தலைவனே செய்ய இயலும்.
    எனவே இச்செயலை மன்னனால்தான் செய்ய முடியும் என
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    மக்களின் வறுமையைப் போக்கும் வகையில் நாட்டில் வளம்
    சேர்ப்பதும், மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாத்து இன்பமாக
    வைத்திருப்பதும், நாட்டை ஆளும் மன்னனால்தான் முடியும்
    என்கிறார் வள்ளுவர். இத்தகைய பாதுகாப்புகள் மட்டும் போதாது,
    இன்னொரு இன்றியமையாத பாதுகாப்பும் குடிமக்களுக்குத் தேவை.
    நோயில்லாமல், வறுமையில்லாமல், துன்பம் இல்லாமல் இருக்கும்
    மக்களுக்குப் பகை நாட்டு ம ன்னனிடமிருந்தும் ஆபத்து வரலாம்.
    அப்பொழுது இதுவரை     மன்னன்     கொடுத்த எல்லாப்
    பாதுகாப்புகளுக்கும் மலோன ஒரு பாதுகாப்பை மன்னன் கொடுக்க
    வேண்டும். எனவே, ஐந்தாவதாக இறுதியில் ‘ஏமம்’ என்று
    குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.

    எனவே ஒரு நாட்டை ஆளும் மன்னன் மக்களுக்குத் தக்க
    பாதுகாப்பு கொடுப்பது அவனது செயல்திறன்களில் முதன்மையானது
    என்று கூறுகிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:10:05(இந்திய நேரம்)