Primary tabs
-
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், மக்கள் ஆட்சி, அதாவது
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் ஆளும் ஆட்சி
இல்லை. அரசனை இறைவனின் அவதாரமாக நம்பி இருந்த
காலம் அது. அரசனுக்குத்தான் எல்லா அதிகாரங்களும் இருந்தன.
அரசர்கள் பரம்பரையாக ஆளும் உரிமை உடையவர்களாக
இருந்தார்கள். தந்தையின் அரசுரிமை மகனுக்கு என்பதே அக்காலக்
கொள்கை. இத்தகைய சூழல் கொண்ட முடியாட்சிக் காலத்திலுள்ள,
அரசியலை அடிப்படையாகக் கொண்டு அரசனுக்கு எனச் சில
அறநெறிகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
ஆட்சிக்குத் தலைமை வகிப்பவன் அரசன். அவன் மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக அமைய
வேண்டும். காட்சிக்கு எளியவனாக இருக்க வேண்டும். மக்களிடம்
கடுமையான சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. இனிமையாகவே
பேச வேண்டும். இவற்றிற்கு மாறாக நடப்பவன் ஆளுவதற்குத்
தகுதி இல்லாதவன் என்பது வள்ளுவர் கருத்து.எனவே, ஆட்சி செய்யும் மன்னன், எந்த ஒரு செயலைச்
செய்தாலும், நன்கு ஆய்ந்து, தக்க துணையைக் கொண்டு செய்ய
வேண்டும். அத்தகைய இயல்பு கொண்டவனே சிறப்புடைய
மன்னன். இவை போன்ற பல கருத்துகளை வள்ளுவர்
குறிப்பிடுகின்றார். அவைகள் இப்பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.