தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 2.2

  • 2.2. அரசனின் கடமைகள்

    ‘இறை’ என்ற சொல்லுக்கு, தலைமை தங்குதல், கடவுள் என்று பல
    பொருள்களுண்டு. அதனால் இறை என்றதும் கடவுள் அதாவது
    இறைவனையே பொதுவாக எண்ணுவர். மக்களைப் படைத்துக்
    காத்து நெறிப்படுத்தி வாழவைப்பவன் இறைவன். இத்தகைய
    செயலைச் செய்கின்றவனும் இறைவனோடு ஒப்பிடத்தக்கவன்
    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். எனவே, இறைவனைப் போல
    மக்களுக்கு நன்மையே செய்யும் அரசனைப் பற்றிக் குறிப்பிடும்
    அதிகாரத்திற்கு ‘இறை மாட்சி’ என்றே பெயர் சூட்டியுள்ளார்.
    மேலும் மக்களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து
    காப்பாற்றும் மன்னனும் ‘இறையாகக் கருதப்படுவான்’ என்று
    அறிவிக்கிறார்.

    ஒரு மன்னன் இறையாகக் கருதப்பட வேண்டுமானால் அவன் என்ன
    என்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறை செய்கிறார்
    வள்ளுவர்.

    முடி அரசு ஆனாலும், குடி அரசு ஆனாலும், அரசின் நிதி, வரவு,
    செலவு முதலியவற்றை, ‘அரச நிதி’ என்று தொகுப்பாகச் கூறுவர்
    பொருளியல் வல்லுநர்கள். வருவாய்த் துறைகளை இயற்றல்,
    வருவாய்களை ஈட்டல், வருவாய்களைக் காத்தல் செலவுகளை
    வகுத்தல் ஓர் அரசனின் அல்லது அரசின் கடமை.
    இதனையே வள்ளுவர்.


    இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு


    (குறள்: 385)


    (இயற்றல் = உருவாக்கல், ஈட்டல் = சம்பாதித்தல்,
    வல்லது
    = வல்லமை ஆனது)

    என்று குறிப்பிடுகிறார்.

    பொருள்கள் வரும் வழிகளைக் கண்டறிந்து அவற்றை ஈட்ட
    வேண்டும். ஈட்டிய பொருள்களைச் சேமித்துப் பாதுகாக்க
    வேண்டும். அவற்றை முறையாகப் பகுத்து வழங்க வேண்டும். அரசு
    அல்லது அரசனின் இக்கடமைகளை இன்றைய நிலையில் (Public
    Revenue) நிதி நிர்வாகம் (Financial Administration) பொதுச்
    செலவீடு (Public Expenditure) எனபதனுள் அடக்கி உள்ளனர்
    என்றும், இவற்றையே அரச நிதிப் பாகுபாடு என வழங்குகின்றனர்
    எனப் பொருளியல் அறிஞர் பா.நடராசன் குறிப்பிடுகின்றார்.

    எனவே திட்டமிட்ட வழியில் நாட்டின் வருவாயைப் பெருக்கி,
    அதைச் சேமித்துப் பாதுகாத்து, மக்களுக்கு வழங்குவது மன்னனது
    கடமையாகும். இத்தகைய கடமையைச் செய்கின்ற மன்னன்
    இறைவனுக்குச் சமமானவன் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    2.2.1 இயற்றல்

    ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று
    பொருள். அந்தப் பொருளை எவ்வாறு ஈட்ட வேண்டும்,
    அதற்கு உரிய தொடக்க நிலை நடவடிக்கைகளை எந்த எந்த
    வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டம் இட வேண்டும்.
    அத்தகைய திட்டமிடுதலையே வள்ளுவர் ‘இயற்றல்’ என்று
    குறிப்பிடுகிறார்.

    அரசன். தான் செய்யும் செயல்களை ஆராய்ந்து செயல்பட
    வேண்டும். அந்த ஆராய்தலே திட்டமிடலாகும். எந்த ஒரு
    செயலையும் நன்கு சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்படும்
    ஒருவனுக்குக் கூடாதது என்று ஒன்றும் இல்லை என்கிறார்
    வள்ளுவர்.


    தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு

    அரும் பொருள் யாது ஒன்றும் இல.

    (குறள்: 462)


    (தெரிந்த = தக்கவர் என தேர்ந்தெடுத்த, இனம் = குழு,
    தேர்ந்து = ஆய்ந்து, இல = இல்லை, அரும் = அரிய)

    இவர் இதைச் செய்வதற்குத் தகுதி உடையவர் என்பதை நன்கு
    ஆராய்ந்து தேர்ந்து எடுக்க வேண்டும். அதன் பின்னர், தான்
    தேர்ந்து எடுத்தவர்களின் துணையுடன், நன்கு சிந்தித்துச் செயல்பட
    வேண்டும். இவ்வாறு, செயல்படும் மன்னனுக்கு முடியாதது என்று
    ஒன்றும் இல்லை என்பது வள்ளுவர் கருத்து.

    மேற்குறிப்பிட்ட வள்ளுவரின் கருத்திலிருந்து என்ன தெரிகிறது?
    எந்த ஒரு வினையை மன்னன் மேற்கொண்டாலும் அதற்குத்
    தொடக்க நிலையில் நன்கு ஆய்ந்து திட்டமிட வேண்டும்.
    அப்பொழுதுதான் தக்க வழிமுறைகளை அவனால் தீர்மானிக்க
    முடியும். நாட்டின் வருவாயைப் பெருக்க விரும்பும் மன்னனுக்கு
    இது மிகவும் இன்றியமையாதது. இதுவே இயற்றல் என்று
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    2.2.2 ஈட்டல்

    முன்னர் வருவாய் வரும் வழியைக் கண்டறிதலைப் பற்றிப்
    பார்த்தோம். இனி, வழிமுறைகளைக் கண்டறிந்த மன்னன்
    பொருளை அல்லது வருவாயை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்பது
    பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்.

    ஓர் அரசுக்கு அல்லது அரசனுக்கு மூன்று வழிகளில் பொருள்
    வரும் என்று வள்ளுவர் வகுக்கின்றார். அவை உறு பொருள்,
    உல்குபொருள், தெறுபொருள் ஆகிய மூன்றும் ஆகும்.
    மரபு வழி
    அல்லது குடி வழி வந்து சேருபவையும் அவற்றின் வருவாயும்
    ‘உறுபொருள்’. அயல்நாட்டு வாணிகம், உள்நாட்டு வணிகம்
    ஆகியவற்றால் கிடைக்கும் இறக்குமதி (Import) ஏற்றுமதி (Export)
    வரிகள், வாயிலாகக் கிடைப்பவை ‘உல்கு பொருள்’. போரில்
    தோல்வி பெற்ற மன்னர்கள் செலுத்தும் திறை எனும் ‘தெறு
    பொருள்’. இதனை,


    உறுபொருளும் உல்குபொருளும் தன் ஒன்னார்த்
    தெறு பொருளும் வேந்தன் பொருள்


    (குறள்: 756)


    (உல்கு = சுங்கவரி, தெறு = கப்பம் அல்லது திறை,
    ஒன்னார்
    = பகைவர்)

    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

    நிலவரியாகப் பெற்றவற்றையும், வணிக வரிகளின் வாயிலாகப்
    பெற்றவற்றையும், பகை மன்னர்கள கொடுத்த திறையையும் நாட்டின்
    வருவாயாகக் கொண்டு மன்னன் ஆட்சி செய்திருக்கிறான்.

    மேலும், வள்ளுவர் காலத்தில் தமிழ்நாட்டில் உள்நாட்டு வணிகமும்,
    வெளிநாட்டு வணிகமும் சிறப்பாக நடந்திருக்கிறது. அதனால்தானே,
    உல்கு பொருளாக வரி வசூலித்திருக்கின்றனர்?

    போரில் தோற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனுக்குத் திறையாகப்
    பொருள் கொடுத்திருக்கிறான் என வரலாற்றுச் செய்திகள்
    கூறுகின்றன. அக்காலத்தில் அதுவும் ஒரு நேர்மையான
    வருவாயாகவே கருதப்பட்டிருக்கின்றது.


    2.2.3 பாதுகாத்தல்

    பொருளை     ஈட்டுவது எவ்வளவு இன்றியமைமயாததோ,
    அதைப்போன்று இன்றியமையாத ஒன்று ஈட்டிய பொருளைப்
    பாதுகாத்தல். எனவேதான் வள்ளுவர் அரசனுக்கு உரிய
    கடமைகளுள் இரண்டாவது கடமையாகப் பாதுகாத்தலைக்
    குறிப்பிடுகிறார்.

    • தேனீக்கள்
    நாம், நமது அன்றாட வாழ்க்கையில் தேனீக்கள் மரக்கிளைகளிலும்,
    மரப்பொருந்துகளிலும் கூடு கட்டுவதைப் பார்த்திருக்கிறோம்.
    தேனீக்கள் ஏன் அவ்வாறு பாடுபட்டுக் கூடு கட்டுகின்றன? தாம்
    சேகரித்தவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு. இல்லையா?

    பூக்களில் சென்று சேகரித்த தேனைப் பாதுகாப்பாக் வைப்பதற்கு
    அவை செய்யும் முயற்சிகளையும் செயல்களையும் கொஞ்சம் கூர்ந்து
    நோக்குங்கள்.

    தேன் அடைகளைச் சிறு சிறு அறைகளில் தேக்கி வைக்கும். அந்த
    அறைகளிலும் திரவப் பொருளைச் சில அறைகளிலும், மெளுகு
    போன்றவற்றை வேறு சில அறைகளிலும் பாதுகாப்பாக
    வைத்திருக்கும். தாம் பாதுகாத்து வைத்திருக்கும் பொருளுக்கு
    ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சும் பொழுது கூட்டின்
    பக்கத்தில் வருவோரைக் கொட்டித் துரத்தும். மேலும் சிறந்த
    பாதுகாப்பு கருதியே மனிதர்களாலும், பிறவற்றாலும் எளிதில் அணுக
    இயலாத உயர்ந்த மரங்களின் நுனிக் கிளைகளிலும், கண்ணுக்குப்
    புலப்படாத மரப்பொந்துகளிலும் தம் கூடுகளைக் கட்டுகின்றன.
    இதற்கு என்ன காரணம்?

    தேனீக்கள், தாம் சேகரிக்கும் தேனுக்குத் தகுந்த பாதுகாப்பு
    கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது திட்டம்
    இருந்திருக்கிறது. எனவேதான் வள்ளுவர், மன்னன் தான் ஈட்டிய
    பொருளைப் பாதுகாக்கும் எண்ணம் வேண்டும். அதுவும் அவனது
    கடமை என வலியுறுத்துகின்றார்.


    2.2.4 வகுத்தல்

    பொதுவாக வகுத்தல் என்பதற்கு ஈட்டி, காத்த பொருளை அல்லது
    வருவாயைக் காலம் இடம் சூழல் அறிந்து பகுத்துக் கொடுக்க
    வேண்டும் என்பர். பகுத்துக்கொடுப்பதால் எவரும் பாதிக்கப்படாமல்
    நன்மை அடையும் படி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க
    வேண்டியது ஓர் அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர். அவ்வாறு
    வழங்குவது அறநூல் உடையார் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம்
    முதன்மையான அறமாகும் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்த வற்றுள் எல்லாம் தலை


    (குறள்: 322)


    (பல்லுயிர் = பல உயிர்கள், ஓம்புதல் = பாதுகாத்தல்,
    நூலோர் = அற நூலோர், தலை = முதன்மையானது)

    தான் ஈட்டிப் பாதுகாத்த பொருளைத் தக்காருக்குப் பகுத்துக்
    கொடுக்க வேண்டும். இவ்வாறு பகுத்துக் கொடுத்தல் உலகிலுள்ள
    பலவகை உயிர்களையும் இறவாமல் பாதுகாத்தலாகும். இச்செயல்,
    எல்லா நூல்களிலும் உள்ள நல்ல அறக் கருத்துகளை எடுத்து,
    எல்லோருக்கும் பயன்படும் வகையில் கூறும் அறநூலார்
    கருத்துகளை விடச் சிறந்தது. எனவே, மக்கள் நன்மை அடையும்
    வகையில் பகுத்து வழங்குதல் மன்னனது கடமை என்கிறார்
    வள்ளுவர்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I


    1.


    அரசனின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன
    யாவை?

    2.

    ஒரு செயல், வெற்றி பெறுவதற்கு மன்னனுக்குத்
    தேவையான இயல்பு யாது?

    3.

    பசியின் கொடுமையை உணர்ந்த சாத்தனார்
    அதை எவ்வாறு குறிப்பிடுகிறார்?

    4.

    ஒருவன் பெற்ற அறிவாக எது கருதப்படுகிறது?

    5.

    ஒரு மன்னன் ஏன் ஊக்கம் உடையவனாக இருக்க
    வேண்டும்?

    6.

    ஒரு மன்னனின் கடமைகளாக எவற்றை வள்ளுவர்
    குறிப்பிடுகின்றார்?

    7.

    ஒரு மன்னனுக்குப் பொருள் வரும் வழிகள்
    யாவை?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:10:00(இந்திய நேரம்)