தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 3.2

  • 3.2 அமைச்சர் - ஆற்றல்கள்

    அமைச்சனுக்கு உரிய தகுதிகளாகச் சிலவற்றைச் சுட்டினார்
    வள்ளுவர். தகுதிகள் மட்டும் இருந்தால் போதுமா? தகுதிகளின் அடிப்படையில், செயல்படுவதற்கு உரிய ஆற்றலும் இருக்க
    வேண்டும். அப்பொழுதுதான், ஆட்சி அமைப்பில் அமைச்சனின்
    உறுதுணை பயன் விளைவிக்கும். இதன் அடிப்படையில்
    அமைச்சனுக்கு உரிய ஆற்றல்களாகச் சிலவற்றை வள்ளுவர்
    வரையறை செய்கிறார்.


    3.2.1 ஆராய்ந்து அறிதல்

    எந்த ஒரு செயலாக இருந்தாலும், அந்தச் செயலை
    மேற்கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் சிந்திக்க வேண்டும்.
    அப்பொழுதுதான் அந்தச் செயலில் வெற்றி பெற முடியும். ஒரு
    நாட்டை ஆளும் அரசனும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
    சிந்தித்துச் செயல்படுவதற்கு அரசனுக்குத் துணையாக அமைபவர்
    அமைச்சன். எனவே அரசனுக்கு அறிவுரை கூறும் அமைச்சனின்
    தகுதிகளில் ஒன்றாக ‘ஆராய்ந்து அறியும் ஆற்றல், இருக்க
    வேண்டும்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    • நெப்போலியனின் தோல்வி

    உலக வரலாற்றில் சிறந்த வீரனாகக் கருதப்படுபவன் நெப்போலியன்.
    அவன் பல போர்களில் வெற்றி பெற்றவன். அவன் உருசிய
    (Russia) நாட்டின் மீது படையெடுத்தான். அவன் படையெடுத்த
    காலம் மிகுந்த குளிர்காலம். அதைப்பற்றி அவன் சிந்திக்கவில்லை. படையெடுப்பதற்கு     முன்னால், காலத்தைப் பற்றி அவன்
    கருத்தில் கொள்ளவில்லை. குளிர் காலத் துன்பத்தைத் தாங்கிக்
    கொள்ள இயலாமல் படைவீரர்கள் பின்வாங்கினர். நெப்போலியன்
    தோல்வி அடைந்தான். பல போர்களில் பெரும் வெற்றியை
    ஈட்டித் தந்த நெப்போலியனின் படை வீரர்கள் உருசியாவில்
    மட்டும் ஏன் தோல்வி அடைந்தார்கள்?

    அவர்கள் படையெடுத்த     காலம்     குளிர்காலம் என்பதை
    அறியாதிருந்தார்கள். அவர்களது     தானைத் தலைவனாகிய
    நெப்போலியனும் காலத்தைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்கவில்லை.
    முன் எச்சரிக்கையாக அதைப்பற்றி ஆராயவில்லை. எனவே
    பழக்கமி்ல்லாத இடத்தில், பழக்கமில்லாத குளிரை அவர்களால்
    தாங்கிக்கொள்ள     முடியவில்லை.     குளிரோடும், எதிரியின்
    படைகளோடும் போரிட இயலாமல் திரும்பினார். காலம் கருதி,
    குளிர் காலத்தைத் தவிர்த்துப் போரிட்டால் முடிவு வேறு விதமாக
    அமைந்து இருக்கலாம்.

    எனவே எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் காலம் கருதி
    செயல்பட வேண்டும் என்பது நெப்போலியன் வரலாறு நமக்கு
    உணர்த்தும் ஓர் உண்மை. இத்தகைய உண்மையை நன்கு
    உணர்ந்தவர் வள்ளுவர். எனவே, அரசனுக்கு அறிவுரை கூறும்
    அமைச்சனுக்கு உரிய தகுதிகளில் காலம் கருதிச் செயல்படும்
    ஆராய்ந்து அறியும் ஆற்றல் இன்றியமையாத ஒன்று என்று
    வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.


    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு


    (குறள்: 631)


    (அரு = அரிய, வினை = செயல், மாண்டது = மாட்சிமை உடையது)

    எந்த வினையை மேற்கொள்ள வேண்டும் என்று முதலில்
    தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னர் அதைச் செயல்படுத்துவதில் பின்பற்றும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் அல்லது
    ஆராய, வேண்டும். இத்தகைய சூழல்களில் மன்னனுக்குத் தன்
    மதிநுட்பத்தால் அறிவுரை கூறுபவன் அமைச்சன். அறிவுரைகள்
    கூறுவதற்குரிய சில தகுதிகள் அவனிடம் இருக்க வேண்டும்.
    அந்தத் தகுதிகளையே, வள்ளுவர் மேற்குறிப்பிட்ட குறளில்
    சுட்டுகிறார்.

    செய்வதற்கு அரிய செயல்களைத் தேர்ந்து எடுப்பதோடு அமையாது
    அதைச் செயல்படுத்துவதற்கு உரிய காலம், கருவி அதாவது முறை
    ஆகியவை பற்றி அறியும் ஆற்றலாகிய தகுதி அமைச்சனுக்கு
    இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


    3.2.2 உறவுகளை உருவாக்கல்

    ஒரு நாட்டின் ஆட்சித் தலைவனாக இருக்கும் மன்னனுக்குப்
    பலவகையான தொடர்புகள் அல்லது உறவுகள் இருப்பது இயல்பு.
    தன்னோடு உறவுகொள்ளும் அனைவரைப் பற்றியும் அறிந்து
    கொள்ளும் சூழல் அல்லது வாய்ப்பு மன்னனுக்கு இருப்பது மிகவும்
    அரிது. எனவே, மன்னர்களோடு தொடர்பு உடையவர்களைக்
    கண்காணித்து, அவர்களைப் பற்றிய முழுமையான ஒரு மதிப்பீடு
    செய்யும் ஆற்றல் அமைச்சருக்கு வேண்டும். அப்பொழுதுதான்
    மன்னனுக்கு வரும் தீ்ங்கினை நீக்கவும், வரும் நன்மையினை
    எடுத்துரைக்கவும் அமைச்சனால் முடியும்.

    மன்னனுடன் உறவு கொண்டோரில் அவனுக்குத் தீங்கு செய்யக்
    கூடியவர்களை இனம் காணும் ஆற்றல் அமைச்சனுக்கு இருக்க
    வேண்டும். புதிதாக உறவு கொள்ள விரும்பும் தீயவர்களையும்
    அடையாளம் காணும் ஆற்றல் அமைச்சனுக்கு இருக்க வேண்டும்.
    தீயவர்கள் அல்லது சுயநலக்காரர்கள் சூழ்ச்சியால், மன்னனை
    விட்டு விலகி நிற்கும் நல்லவர்களை மீண்டும் மன்னனிடத்தில்
    சேர்க்கும் ஆற்றலும் அமைச்சனுக்கு இருக்க வேண்டும் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனைப்


    பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்லது அமைச்சு


    (குறள்: 633)


    என்ற குறள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

    தீயவர்கள் யார், நல்லவர்கள் யார், யாரைச் சேர்த்துக் கொண்டால்
    நன்மை விளையும் என ஆராய்ந்து அறியும் ஆற்றல்
    அமைச்சனுக்கு இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அரசனையும்,
    நாட்டையும் தீமையிலிருந்தும், பகைவர்களிடமிருந்து காப்பாற்ற
    முடியும்.

    இவ்வாறு, ஆக்கல், அழித்தல், பாதுகாத்தல் என்ற மூன்று
    இயல்புகளும் கொண்ட வல்லமை உடையவனே சிறந்த அமைச்சன். அவனே ஒரு மன்னனுக்கு உரிய சிறந்த துணை என்பது வள்ளுவர்
    கருத்து.


    3.2.3 உறுதியாகச் சொல்லுதல்

    எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கு
    முன்னால் ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டும். அதன்
    பிறகு, தேர்ந்து எடுத்த செயலை எவ்வகையில் செயல்படுத்துவது
    என்று ஆயவேண்டும். ஆய்ந்து முடிவு எடுத்த பின்னர், அதைப்பற்றிய தெளிவான சிந்தனையுடன் உறுதியுடன் சொல்லும்
    ஆற்றல் அமைச்சனுக்கு வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


    தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு


    (குறள்: 634)


    (தேர்ந்து = ஆய்ந்து, ஒருதலை = ஒரே நிலையில், வல்லது = வல்லமை உடையது)

    அமைச்சனுக்குத் துணையாக இருந்து அறிவுரை கூற வல்ல
    அமைச்சனுக்கு உரியதைத் தேர்ந்தெடுக்கும் அறிவு வேண்டும்.
    உரிய வழியில்     செயல்படுத்தும் சிந்தனை     வேண்டும்.
    அவற்றோடு, ஐயத்திற்கு இடம் இல்லாத வகையில் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துச் சொல்லும் ஆற்றல் வேண்டும்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I


    1.


    ஓர் அமைச்சனுக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

    2.

    ‘ஆன்று அமைந்த சொல்லான்’ என்பதை
    வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார்?

    3.

    அமைச்சனுக்கு உரிய ஆற்றல்களாக எவை
    சுட்டப்படுகின்றன?

    4.

    உறவுகளை உருவாக்குதல் என்றால் என்ன?

    5.

    எவற்றை அமைச்சன் ஆராய்ந்து அறிய வேண்டும்?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:12:00(இந்திய நேரம்)