தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l4-1.4 தீவக அணி

  • 1.4 தீவக அணி
        தண்டியலங்காரம்     பொருளணியியலில் சொல்
    அடிப்படையில் அமையும் சில அணிகள் இடம் பெறுகின்றன.
    பாடலில் வரும் சொற்கள் பொருள் விளக்கத்திற்குக் காரணமாக
    இருப்பதால் இவை பொருளணியியலில் வைக்கப்பட்டன.
    இத்தகைய அணிகளில் தீவக அணியும் ஒன்று.
    1.4.1 தீவக அணியின் இலக்கணம்
        ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ,
    பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர்
    இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள
    சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது
    தீவக அணியாம். அது முதல் நிலைத் தீவகம்,
    இடைநிலைத் தீவகம், கடை நிலைத் தீவகம்
    என்னும்
    மூன்று விதமாக வரும்.

    குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
    ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்
    தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும்
    (தண்டி. 39)
    1.4.2 தீவக அணி - பெயர்க் காரணம்
        தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள்.
    ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது
    அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு
    வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்
    நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள
    சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால்
    இவ்வணி தீவக அணி எனப்பட்டது.
    1.4.3 தீவக அணியின் வகைகள்
        பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல்
    எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது
    முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது
    இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத்
    தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி,
    பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம்.
    ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும்
    வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக
    விரியும், அவை வருமாறு:

    1) முதல் நிலைக் குணத் தீவகம்
    2) முதல் நிலைத் தொழில் தீவகம்
    3) முதல் நிலைச் சாதித் தீவகம்
    4) முதல் நிலைப் பொருள் தீவகம்
    5) இடைநிலைக் குணத் தீவகம்
    6) இடைநிலைத் தொழில் தீவகம்
    7) இடைநிலைச் சாதித் தீவகம்
    8) இடைநிலைப் பொருள் தீவகம்
    9) கடைநிலைக் குணத் தீவகம்
    10) கடைநிலைத் தொழில் தீவகம்
    11) கடைநிலைச் சாதித் தீவகம்
    12) கடைநிலைப் பொருள் தீவகம்

        இங்கு முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம்,
    கடைநிலைத் தீவகம் ஆகியவற்றை ஒவ்வொரு பாடல் கொண்டு
    விளக்கமாகக் காண்போம்.

    1.4.4 முதல் நிலைத் தீவகம்

    எடுத்துக்காட்டு:

    சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
    ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
    திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
    மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

    (சேந்தன-சிவந்தன; தெவ்-பகைமை; சிலை-வில்;
    மிசை-மேலே; புள்-பறவை;)

    இப்பாடலின் பொருள் :

        அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை
    சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள்
    சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன;
    வலிமை உடைய வில் பொழிந்த அம்புகளும் சிவந்தன;
    குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில் முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன)
    என்பது நிறம் பற்றிய குணச் சொல் (பண்புச் சொல்) இது.

    வேந்தன் கண் சேந்தன
    தெவ்வேந்தர் தோள் சேந்தன
    குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
    அம்பும் சேந்தன
    மிசைஅனைத்தும் சேந்தன
    புள் குலமும் சேந்தன

    என்று பாடலின் இடையிலும் இறுதியிலும் ஆகப் பல
    இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று சேர்ந்து நின்று
    பொருள் விளக்கம் தந்ததைக் காணலாம். இப்பாடல் முதல்
    நிலைக் குணத் தீவக அணியாகும
    ்.

    1.4.5 இடை நிலைத் தீவகம்

    எடுத்துக்காட்டு:

    எடுக்கும் சிலைநின்று எதிர்ந்தவரும், கேளும்,
    வடுக்கொண்டு உரம் துணிய, வாளி - தொடுக்கும்
    கொடையும், திருவருளும், கோடாத செங்கோல்
    நடையும் பெரும்புலவர் நா

    (உரம்-மார்பு; வாளி-அம்பு; கோடாத-வளையாத;)

    இப்பாடலின் பொருள் :

        அரசன் தன்னை எதிர்த்த பகைவர்களும் அவர்களைச்
    சார்ந்தவர்களும் புண்பட்டு மார்பு பிளக்குமாறு, தான் எடுத்த
    வில்லிலிருந்து அம்புகளைத் தொடுப்பான். அவ்வளவிலே,
    புலவருடைய நாவானது, அவனுடைய ஈகையையும், சிறந்த
    அருளையும், வளையாத செங்கோல் சிறப்பையும் பாடல்களில்
    தொடுக்கும் (தொடுத்துப் பாடும்).

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில் இடையில் வந்த 'தொடுக்கும்' என்னும்
    சொல் தொழில் பற்றிய சொல்லாகும். இச்சொல்,

    வாளி (அம்பு) தொடுக்கும்
    பெரும்புலவர் நாத் தொடுக்கும்

    என்று பாடலின் பிறஇடங்களில் சென்று பொருந்திப் பொருள்
    விளக்கம் செய்தமையால் இது இடைநிலைத் தொழில் தீவக
    அணியாகும்
    .

    1.4.6 கடை நிலைத் தீவகம்

    எடுத்துக்காட்டு:

    புறத்தன, ஊரன, நீரன, மாவின்
    திறத்தன, கொல்சேரி யவ்வே, - அறத்தின்
    மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி
    முகனை முறைசெய்த கண்

    (புறத்தன-மான்; ஊரன-அம்பு; நீரன-தாமரை;
    மாவின் திறத்தன
    -மாவடு;
    கொல்சேரிய
    -கொல்லன் உலைக்களத்தில் உள்ள வாள;
    வஞ்சியாட்டி-வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெண்;
    முகன்-முகம்;)

    இப்பாடலின் பொருள் :

        அறத்திற்காக மகனையே தேர்க்காலில் கிடத்தி அவன்
    மீது தேரைச் செலுத்திக் கொன்று முறை செய்த மனுநீதிச்
    சோழனுக்கு உரிய வஞ்சி என்னும் ஊரில் வாழும்
    தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் வெளியில் உள்ள
    மான்களுடைய கண்களைப் போன்றும், ஊரில் உள்ள
    அம்புகளைப் போன்றும், நீரில் உள்ள தாமரை மலர்களைப்
    போன்றும், மாமரத்தில் உள்ள வடுக்களைப் போன்றும்,
    கொல்லன் சேரியில் உள்ள வாள்களைப் போன்றும் இருக்கின்றன.

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில் இறுதியில் வந்துள்ள 'கண்' என்பது
    பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல். இது பாடலின் பல
    இடங்களிலும் உள்ள 'புறத்தன, ஊரன, நீரன, மாவின்
    திறத்தன, கொல்சேரிய,' ஆகிய சொற்கேளாடு தனித்தனியே
    இணைந்து நின்று பொருள் விளக்கம் செய்தமையால்
    கடைநிலைப் பொருள் தீவக அணியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:51:20(இந்திய நேரம்)