தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l3-1.3 உருவக அணி

  • 1.3 உருவக அணி
        உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை
    ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறு
    வேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது
    உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும்
    இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக்
    காட்டவிரும்புகிறார். கவிஞர்.

        'தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு,
    இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவு
    எனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும்
    வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்ற
    மனவுணர்வு தோன்றுகிறது,

    முகம் ஆகிய தாமரை

        என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்
    பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து
    உருவக அணி தோன்றுவதை உணரலாம்.
    1.3.1 உருவக அணியின் இலக்கணம்
        உவமையாகின்ற     பொருளுக்கும்    (உவமானம்)
    உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான
    வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும்
    உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது
    உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில்
    உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதனை,

    உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
    ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்
    (தண்டி. 35)

    என்ற நூற்பாவால் அறியலாம்.
    1.3.2 உருவக அணி விளக்கம்
        உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம்
    பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில்
    போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்று
    வரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம்
    பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய'
    என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும்
    வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும்.
    இவை மறைந்து வருதலும் உண்டு.

    மலர்போன்ற கண், மலர்க்கண் - உவமை
    கண் ஆகிய மலர், கண்மலர் - உருவகம்

        மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும்
    வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகிய
    மலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும்
    வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் நீங்கள்
    காணலாம்.
    1.3.3 உருவக அணியின் வகைகள்
        உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என்று
    தண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி. 37) அவை வருமாறு:
    1) தொகை உருவகம்
    2) விரி உருவகம்
    3) தொகைவிரி உருவகம்
    4) இயைபு உருவகம்
    5) இயைபு இல் உருவகம்
    6) வியனிலை உருவகம்
    7) சிறப்பு உருவகம்
    8) விரூபக உருவகம்
    9) சமாதான உருவகம்
    10) உருவக உருவகம்
    11) ஏகாங்க உருவகம்
    12) அநேகாங்க உருவகம்
    13) முற்று உருவகம்
    14) அவயவ உருவகம்
    15) அவயவி உருவகம்

    இவற்றுள் குறிப்பிடத்தக்க சில வகைகளை மட்டும் விளக்கமாகக்
    காண்போம். மேலும் தண்டியாசிரியர் குறிப்பிடாததும் திருக்குறள்
    முதலான பழம்பெரும் இலக்கியங்களில் பயின்று வருவதுமாகிய
    'ஏகதேச உருவகம்' என்பது குறித்தும் விளக்கமாகக் காண்போம்.

    • தொகை உருவகம்

        'ஆகிய' என்னும் உருவக உருபு மறைந்து வருவது
    தொகை உருவகம் ஆகும். அதாவது     உவமேயமும்
    உவமானமும் இணைப்புச்சொல் எதுவும் இன்றிச் சேர்ந்து வருவது.

    எடுத்துக்காட்டு:

    அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்
    கொங்கை முகிழும் குழல்காரும் - தங்கியதோர்
    மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த
    காதற்கு உளதோ கரை.

    (முகிழ்-அரும்பு; கார்-மழை; மாதர்-விருப்பம்)

    இப்பாடலின் பொருள் :

        'நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகிய
    தளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகிய
    அரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்
    தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்த
    காதலுக்கு எல்லை உலகத்தில் உண்டோ இல்லை' என்று
    தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்
    'ஆகிய' எனும் உருபு மறைந்து 'அங்கைமலர்' என
    வந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே 'அடித்தளிர்,
    கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்' என்னும்
    உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்
    தொகை உருவகம் ஆயிற்று.

    • விரி உருவகம்

        'ஆகிய, ஆக' என்னும் உருபுகள் வெளிப்பட்டு நிற்பது
    விரி உருவகம்.

    எடுத்துக்காட்டு:

    கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
    அங்கை மலரா அடி தளிரா - திங்கள்
    அளிநின்ற மூரல் அணங்காம் எனக்கு
    வெளிநின்ற வேனில் திரு

    (மருங்குல்-இடை; அளி-அருள; மூரல்-முறுவல்;
    அணங்கு-தெய்வப்பெண்; திரு-திருமகள்)

    இப்பாடலின் பொருள் :

        'கொங்கை அரும்பாக, நுண் இடை வஞ்சிக் கொடியாக,
    அழகிய கை மலராக, பாதம் தளிராகக் கொண்டவள்;
    நிலவு போன்ற ஒளியும் அருளும் முறுவலை உடையவள்;
    நேற்று அணங்கு போன்றிருந்தாள். இப்பொழுது எனக்கு
    வேனில் காலத்தில் தோன்றிய திருமகளை ஒப்பவள் ஆனாள்'
    என்று தலைவன் பாங்கனிடம் தலைவியின் அழகை கூறுகிறான்.

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில் கொங்கை முகையாகவும், இடை வஞ்சிக்
    கொடியாகவும், கை மலராகவும், பாதம் தளிராகவும்
    உருவகிக்கப் பட்டுள்ளதைக் காணுங்கள். இப்பாடலில்,
    முகையாக, கொம்பாக, மலரா, தளிரா என 'ஆக' 'ஆ' என்ற
    உருவக உருபுகள் விரிந்து வருதைக் காணலாம். ஆகவே
    இது விரி உருவக அணி ஆகும்.

    • இயைபு உருவகம்

        பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது,
    அவற்றை ஒன்றற்கு ஒன்று இயைபு (பொருத்தம்) உடைய
    பொருள்களாக வைத்துக் கூறுவது இயைபு உருவகம்.

    எடுத்துக்காட்டு:

    செவ்வாய்த் தளிரும் நகைமுகிழும் கண்மலரும்
    மைவார் அளக மதுகரமும் - செவ்வி
    உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்
    துடைத்தாரே அன்றோ துயர்

    (முகிழ்-அரும்பு; அளகம்-கூந்தல்; மதுகரம்-வண்டு;)

    இப்பாடலின் பொருள் :

        சிவந்த வாயாகிய தளிரையும், புன்முறுவலாகிய முல்லை
    அரும்பையும், கண்ணாகிய மலரையும், கரிய நீண்ட
    கூந்தலாகிய வண்டையும் உடைய திருமுகத்தை என்
    உள்ளத்திலே வைத்தார். இதனாலே என்னுடைய உள்ளத்தில்
    உண்டாகிய துயரத்தை நீக்குவார் அன்றோ? (தலைவியைத்
    தலைவன் மரியாதையுடன் வைத்தார், நீக்குவார் என்று
    கூறுகிறான்.)

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில் வாய் தளிராகவும், புன்முறுவல் முல்லை
    அரும்பாகவும், கண் மலராகவும், கூந்தல் வண்டாகவும்
    உருவகப் பட்டுள்ளதைக் காண்கிறீர்கள். உருவகம் செய்யப்
    பயன்படுத்திய தளிர், முகிழ் (அரும்பு), மலர், மதுகரம்
    (வண்டு) என்ற நான்கும் ஒன்றோடு ஒன்று இயைபு உடைய
    பொருள்களாகும். இவ்வாறு தொடர்புடைய பொருள்களைக்
    கொண்டு உருவகம் செய்தமையால் இது இயைபு
    உருவக அணி ஆகும்.

    • இயைபு இல் உருவகம்

        உருவகம் செய்யப்படும் பொருள்களை ஒன்றோடு ஒன்று
    இயைபு இல்லாத பொருள்களாக உருவகித்துக் கூறுவது
    இயைபு இல் உருவகம்.

    எடுத்துக்காட்டு:

    தேன் நக்கு அலர்கொன்றை பொன்னாக,
    செஞ்சடையே
    கூனல் பவளக் கொடியாக, - தானம்
    மழையாக, கோடு மதியாகத் தோன்றும்
    புழையார் தடக்கைப் பொருப்பு

    (நக்கு-ஊறி; தானம்-மதம்; கோடு-கொம்பு;
    புழை-துளை; பொருப்பு-மலை;)

    இப்பாடலின் பொருள் :

        இப்பாடல் யானைமுகனான விநாயகப் பெருமானைக்
    குறிப்பது. துளை உடைய துதிக்கையைக் கொண்ட
    யானையாகிய (விநாயகன்), மலையானது, தேனைச் சிந்தும்
    கொன்றை மலர் பொன்னாகவும், சிவந்த சடையே பவளக்
    கொடியாகவும், மதநீர் மழையாகவும், தந்தம் பிறைச்
    சந்திரனாகவும் கொண்டு தோன்றுகின்றது.

    அணிப் பொருத்தம் :

        இப்பாடலில், விநாயகன், அவன் அணிந்துள்ள கொன்றை
    மாலை, செஞ்சடை, மதநீர், தந்தம் ஆகியவை உருவகப்
    படுத்தப்பட்டுள்ளன. இவ்வுருவகத்திற்குப் புலவர் கையாண்ட
    மலை, பொன், பவளக்கொடி, மழை, பிறை ஆகிய
    பொருள்கள் ஒன்றோடு ஒன்று இயைபு இல்லாதவை
    என்பதைக் காணலாம்.    இவ்வாறு இயைபு இல்லாத
    பொருள்களைக் கொண்டு உருவகம் செய்திருப்பதால் இது
    இயைபில் உருவக அணி ஆகும்.

    • ஏக தேச உருவகம்

        இது உருவக அணி வகைகளில் ஒன்று. ஆனால்
    இது பற்றித். உருவகம் செய்யும் இரு பொருள்களுள் ஒரு
    பொருளை உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய
    மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது
    ஏக தேச உருவகம் ஆகும்.

    எடுத்துக்காட்டு:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    (குறள். 10)

    இப்பாடலின் பொருள் :

        இறைவன் அடியாகிய புணையைப் (தெப்பம்) பற்றிக்
    கொண்டோர்,     பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்;
    அப்புணையைப் பற்றிக் கொள்ளாதோர் பிறவிப் பெருங்கடலை
    நீந்தமாட்டார்கள்.

    அணிப் பொருத்தம் :

        இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்து
    விட்டு, அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகிய
    இறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாது
    விட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:51:15(இந்திய நேரம்)