தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5- நாட்டிய நாடகங்களில் இசையமைதிகள்

  • 4.5 நாட்டிய நாடகங்களில் இசையமைதி

        (அமைதி = அமைப்பு, இலக்கணம்)

        நாட்டிய நாடகங்களில் இடம்பெறும் இசையை இரு  வகையாகப் பகுக்கலாம்.

    1. இசைப்பாடல் வகைகள்

    2. இசையமைதிகள்

    4.5.1 இசைப்பாடல்கள்

        நாட்டிய     நாடகங்களில்     பயன்படுத்தப்படும் இசைப்பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

    1. இயற்பா வகைகள்

    2. இசைப்பா வகைகள்

        இயற்பா இலக்கண வரையறைகளைப் பெற்றவை இயற்பா வகைகளாகும். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, விருத்தம்  போன்றன இயற்பாக்களாகும். இப்பாடலை இசை கூட்டிப் பாடுவர்.

        இசைப்பாவிற்குரிய வடிவத்தையுடைய கீர்த்தனை, தரு, திபதை, சிந்து போன்றன இசைப்பாக்களாகும்.

        இவ்வகைப்     பாக்கள்     நாட்டிய     நாடகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறவஞ்சி, பள்ளு போன்ற நாட்டிய நாடகங்களில் இவைகளைக் காணலாம்.

    4.5.2 இராக தாள அமைதிகள்

        நாட்டிய நாடகங்களில் இசைக்குரிய இராக தாள அமைதிகள் சிறப்பாக அமைந்திருக்கும். கீர்த்தனை நாடகங்கள்  என்ற பெயரில் இசை நாடகங்கள் பல உள. சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை, கோபால கிருட்டிண  பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்றன  இவ்வகையில் அமையும் நாட்டிய நாடகங்களாக உள்ளன.

        குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் செவ்வியல் இசையும்,  நாட்டுப்புற இசையும் விரவிய நாட்டிய நாடகமாக அமையும். முதற்பகுதி செவ்வியல் சார்பும், பிற்பகுதி நாட்டுப்புறச் சார்பும் நிறைந்ததாக அமையும்.

        நாட்டிய நாடகங்களில் காணப்படும் இசை உருப்படிகள் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது எண்ணிக்கையில் அமையும் தாள அமைதிகளைப் பெற்று விளங்கும். இவை ஆடலுக்கேற்ற தாள அமைதி உடையனவாய் அமையும். இதற்கேற்ற வகையில் பாடலின் சந்தமும், இசையின் மெட்டும் அமைந்து விளங்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:02:36(இந்திய நேரம்)