தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தீர்மானிப்பு உதவி முறைமையின் வகைப்பாடுகள்

  • 4.3 தீர்மானிப்பு உதவி முறைமையின் வகைப்பாடுகள்

        தீர்மானிப்பு உதவி முறைமைகளைப் பல்வேறு முறைகளில் வகைப்படுத்தலாம். வல்லுநர்கள், ஆய்வாளர்கள் தமது ஆய்வு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிப்பு உதவி முறைமைகளைப் பல்வேறு கண்ணோட்டங்களில் வகைப்படுத்தி உள்ளனர். முறைமையோடு பயனர் கொள்ளும் உறவுமுறை அடிப்படையிலும், பொதுப்படையான செயல்பாடுகளின் அடிப்படையிலும், பயனருக்கு உதவும் பாங்கின் (mode of assistance) அடிப்படையிலும் தீர்மானிப்பு உதவி முறைமைகளை வல்லுநர்கள் வகைப்படுத்தியுள்ளனர். மூவகை வகைப்பாடுகளையும் இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.

    4.3.1 பயனர் உறவுமுறை அடிப்படையில்

        ஹேட்டன்ஸ்ச்விலர் (Haettenschwiler) என்பார் தீர்மான உதவி முறைமை பயனருடன் கொண்டுள்ள உறவுமுறை அல்லது உதவும் முறையின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்துகிறார்:

    (1) முனைப்பிலாத் தீர்மான உதவி முறைமை (Passive DSS):

    சிக்கலுக்கான தீர்வுகளில் முடிவெடுப்பதற்கு உதவி புரியும் ஆதாரமான தகவல்களை, புள்ளி விவரங்களைத் திரட்டித் தரும். ஆனால் சிக்கலுக்கான தீர்வுகளை வழங்கவோ, வெளிப்படையான தீர்மானிப்பு ஆலோசனைகளை வழங்கவோ இத்தகைய முறைமைகளால் இயலாது.


    (2) முனைப்புறு தீர்மான உதவி முறைமை (Active DSS):

    இத்தகைய முறைமைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகள், மாதிரியங்களின் அடிப்படையில் சிக்கலுக்கான தீர்வுகளை வழங்க வல்லவை. தீர்மானிப்பில் ஆலோசனகளையும் வழங்கக் கூடியவை.


    (3) ஒத்துழைப்புத் தீர்மான உதவி முறைமை (Cooperative DSS):

    இத்தகைய முறைமைகள் தாம் வழங்கும் தீர்மானிப்பு ஆலோசனைகளைத் தீர்மானிப்பாளர்கள் திருத்தி, முழுமைப்படுத்தி அல்லது செழுமைப்படுத்திச் சரிபார்ப்புக்காக மீண்டும் முறைமையில் செலுத்த அனுமதிக்கின்றன. அதன்பின் முறைமையானது அவற்றை மேலும் செழுமைப்படுத்தி, முழுமைப்படுத்தி தீர்மானிப்பாளருக்கு வழங்கும். உகந்த முடிவை எட்டும்வரை இந்தப் பரிமாற்றம் தொடரும்.

    4.3.2 செயல்பாட்டு அடிப்படையில்

        1980-ஆம் ஆண்டு ஸ்டீவன் ஆல்ட்டர் என்பார் 56 தீர்மானிப்பு உதவி முறைமைகளைப் பற்றிக் கள ஆய்வு செய்து, அவற்றைப் பொதுப்படையான செயல்பாடுகளின் அடிப்படையில் ஏழு வகையாகப் பிரிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அவை பின்வருமாறு:

    (1) கோப்பு இழுப்பு முறைமை (File Drawer System):

    உரை, விரிதாள், படிமம், கேட்பொலி, நிகழ்படம் போன்ற பல்வேறு வடிவிலான கோப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள தரவுக் கூறுகளை அணுகி ஆலோசனை பெற வாய்ப்பளிக்கிறது.


    (2) தரவுப் பகுப்பாய்வு முறைமை (Data Analysis System):

    குறிப்பிட்ட பணிக்கென்றே வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மென்பொருள் கருவிகள் மூலமாகவோ, மிகப் பொதுப்படையான கருவிகள் மற்றும் இயக்கிகள் மூலமாகவோ சேமிக்கப்பட்டுள்ள ஏராளமான தரவுகளைப் பகுத்தாய்ந்து, முடிவுகள் மேற்கொள்ள உதவும்.


    (3) பகுப்பாய்வுத் தகவல் முறைமை (Analytical Information System):

    தீர்மானிப்பை நோக்கமாகக் கொண்ட தரவுத்தளங்கள் மற்றும் சிறிய மாதிரியங்களை அணுகி ஆலோசனை பெற உதவும்.


    (4) கணக்கியல், நிதியியல் மாதிரியங்கள் (Accounting and Financial Models):

    குறிப்பிட்ட வணிகச் சூழலில் வேறுபட்ட நடவடிக்கைகளினால் ஏற்படும் ஆதாய, இழப்பு விளைவுகளைக் கணக்கிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்க வழிகாட்டும்.


    (5) பிரதிநிதித்துவ மாதிரியங்கள் (Representational Models):

    பாவிப்பு மாதிரியங்களின் அடிப்படையில் ஒரு சிக்கலின் தீர்வுக்கான வேறுபட்ட முடிவுகளின் விளைவுகளை மதிப்பிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்க உதவும்.


    (6) உகப்பாக்க மாதிரியங்கள் (Optimization Models):

    இடர்ப்பாடுகளோடு கூடிய சிக்கலுக்கு முரணற்ற உகப்பான ஒரு தீர்வை வழங்குகிறது.


    (7) ஆலோசனை மாதிரியங்கள் (Suggestion Models):

    ஓரளவு கட்டமைக்கப்பட்ட அல்லது நன்கு புரியப்பட்ட பணி பற்றிய தீர்மானிப்பில் குறித்த முடிவெடுப்புக்கு இட்டுச் செல்லும் தருக்க ரீதியான செயலாக்கங்களை மேற்கொள்கின்றன.

    4.3.3 உதவும் பாங்கு அடைப்படையில்

        டேனியல் போவர் என்பார் தீர்மானிப்பாளருக்கு உதவும் பாங்கின் அடிப்படையில் தீர்மான உதவி முறைமைகளை ஐந்தாக வகைப்படுத்துகிறார்:

    (1) மாதிரிய முடுக்கம் (Model-Driven DSS):

    நிலைமைக்கு ஏற்றவாறு புள்ளியியல், நிதியியல், உகப்பாக்கம் (Optimization), பாவிப்பு (Simulation) ஆகிய மாதிரியங்களின் அடிப்படையில் செயல்படுவது. பயனர் தரும் தரவுகள், அளபுருக்களைப் பயன்படுத்திச் சூழ்நிலையைப் பகுப்பாய்ந்து முடிவெடுக்கத் தீர்மானிப்பாளருக்கு உதவும்.


    (2) தகவல் தொடர்பு முடுக்கம் (Communication-Driven DSS):

    ஒன்றுக்கு மேற்பட்டோர், பகிர்ந்தளிக்கப்பட்ட பணி தொடர்பாக விவாதித்து, ஆலோசித்து முடிவெடுக்க உதவி செய்யும். அலுவலகச் சூழலிலும், வலையகம் வழியாகவும் குழுச் செயல்பாடுகளில் பயன்படுகிறது.


    (3) தரவு முடுக்கம் (Data-Driven DSS):

    கால வாரியாக, வகை வாரியாக, நிகழ்நிலையிலும் அகல்நிலையிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள அகநிலை, புறநிலைத் தரவுகளைப் பகுத்தாய்ந்து முடிவெடுக்கத் தீர்மானிப்பாளருக்கு உதவும்.


    (4) ஆவண முடுக்கம் (Document-Driven DSS):

    உரை ஆவணம், மீவுரை ஆவணம், விரிதாள், தரவுத்தள ஏடுகள், படிமம், கேட்பொலி, நிகழ்படம் போன்ற பல்வேறு மின்னணு வடிவமைப்பில் உள்ள கட்டமைக்கப்படாத தகவல்களைச் சேமித்துப், பராமரித்து, மீட்டெடுத்துக் கையாள உதவும்.


    (5) அறிவு முடுக்கம் (Knowledge-Driven DSS):

    மெய்ம்மைகள், விதிமுறைகள், செயல்முறைகள் இன்னும் இதுபோன்ற கட்டமைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள தனிச்சிறப்பான சிக்கல் தீர்வுக்கான நிபுணத்துவத்தை வழங்க வல்லது. இத்தகு தீர்மான உதவி முறைமைகளை ‘அறிவுசார் முறைமை’ (Knowledge-based System) எனவும் ‘வல்லுநர் முறைமை’ (Expert System) எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பாடத்தின் இறுதிப் பகுதியில் வல்லுநர் முறைமை பற்றி விரிவாகப் படிப்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 11:47:48(இந்திய நேரம்)