தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    • ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் தீர்மானிக்கும் அல்லது முடிவெடுக்கும (Decision Making) அதிகாரம் பெற்ற அமைப்பே ’மேலாண்மை அமைப்பு’ எனக் கருதப்படுகிறது.
    • ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பு பெரும்பாலும் கீழ்நிலை, இடைநிலை, மேல்நிலை என மூன்று அடுக்குகளாக அமையும்.
    • கீழ்நிலை அடுக்கில் அனைத்துப் பணிப்பிரிவுகளிலும் உள்ள மேற்பார்வை யாளர்களும், கண்காணிப்பாளர்களும் அடங்குவர். இடைநிலை மேலாண்மை வகுத்துக் கொடுத்த இலக்குகளின்படி செயல்பாடுகளைத் திட்டமிடுவதும் அவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை வரையறுத்துக் கொடுப்பதும் இவர்களின் பணியாகும். உற்பத்தி, வினியோகம், விற்பனை போன்ற அன்றாடப் பணிகளை மேலாண்மை செய்கின்றனர்.
    • இடைநிலை மேலாண்மை என்பது, பல்வேறு பணிப்பிரிவுகளின் மேலாளர்கள், துணை மேலாளர்களை உள்ளடக்கியதாகும். உற்பத்தி, வினியோகம், விற்பனை, நிதி ஆகியவற்றில் மேல்நிலை மேலாண்மை வரையறுக்கும் இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிடலும், பல்வேறு பணிப்பிரிவினருக்குப் பணி இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைச் செய்துமுடிப்பதற்கான செயல்நுட்பங்களை வகுத்துக் கொடுப்பதும் இவர்களின் வேலையாகும்.
    • மேல்நிலை மேலாண்மை என்பது இயக்குநர்களின் குழுவையும் அக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், ஒரு முதன்மைத் தலைமை அதிகாரி அல்லது மேலாண்மை இயக்குநரையும், துணைத் தலைவர்களையும் நிர்வாகக் குழுவையும் கொண்டிருக்கும். நிறுவனத்தின் உள்ளார்ந்த குறிக்கோள்களையும் நோக்கங்களையும் திட்டங்களையும் இவர்களே முடிவு செய்வர்.
    • எந்த எந்திரத்தை இயக்குவது, எந்த எந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பது, எத்தனை பணியாளர்களுக்கு விடுப்புக் கொடுப்பது, எவருக்கெல்லாம் கூடுதல் பணிநேரம் (overtime) வழங்குவது, ஒவ்வொரு விற்பனை முனையத்துக்கும் எவ்வளவு பொருட்களை அனுப்புவது என்பது போன்ற ’செயல்பாட்டு முடிவுகளை’ (Operational Decisions) மேற்கொள்வதும் அவற்றை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துவதும் கீழ்நிலை மேலாண்மையின் தலையாய பணியாகும்.
    • செயல்பாட்டு முடிவுகள் முழுக்கவும் கட்டமைக்கப்பட்ட முடிவுகளாகும் (structured decisions). முன்பே வரையறுக்கப்பட்ட புறமுக முடிவுகளாக (objective decisions) இருக்கும். உற்பத்தி, வினியோகம், விற்பனை தொடர்பான உள்ளீடுகளின் அடிப்படையில் தானியக்க முறையில் நிர்ணயிக்கப்படும் முடிவுகளாக இருக்கும். பெரும்பாலும் கணிப்பொறி நிரலே முடிவுகளை வெளியிடும். மேலாண்மை அமைப்பில் உள்ளவர்களின் அகமுகத் தலையீடு (subjective cosideration) தேவையில்லை. அடிக்கடி எடுக்கப்பட வேண்டிய முடிவுகளாக இருக்கும்.
    • மேல்நிலை மேலாண்மையின் செயல்திட்டங்களை நிறைவேற்ற இடைநிலை மேலாண்மை அவ்வப்போது மேற்கொள்ளும் முடிவுகள் செயல்நுட்ப முடிவுகள் (Tactical Decisions) எனப்படுகின்றன. இவை ஓரளவு கட்டமைக்கப்பட்ட முடிவுகளாகும் (semi-structured decisions). பெரும்பாலும் முன்வரையறுக்கப்பட்ட புறமுக முடிவுகளாக (objective decisions) இருக்காது. ஓரளவு அகமுகத் தலையீடு (subjective cosideration) தேவைப்படும் முடிவுகளாக இருக்கும். அடிக்கடியோ, எப்போதோ எடுக்கப்படும் முடிவுகள் அல்ல. அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளாகும்.
    • நிறுவனத்தை விரிவாக்குதல், பிற நிறுவனத்தை வாங்குதல், புதிய பொருளை உற்பத்தி செய்தல், இழப்பு ஏற்படும் பொருளின் உற்பத்தியை நிறுத்திவிடல், வேறு வணிகத்தில் முதல¦டு செய்தல் போன்ற முடிவுகள் செயல்திட்ட முடிவுகள் (Strategic Decisions) எனப்படுகின்றன. இத்தகைய செயல்திட்ட முடிவுகளை மேல்நிலை மேலாண்மையே எடுக்கும். செயல்திட்ட முடிவுகள் முழுக்கவும் கட்டமைக்கப்படாத முடிவுகளாகும் (unstructured decisions). முடிவெடுப்பதில் மேலாண்மை அமைப்பில் உள்ளவர்களின் அகமுகத் தலையீடு (subjective cosideration) தேவை. அடிக்கடி எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் அல்ல. எப்போதேனும்¢ அரிதாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளாகும்.
    • வணிகம் மற்றும் நிறுவனத் தீர்மானிப்பு நடவடிக்கைகளில் உதவி செய்வதற்கென உருவாக்கப்பட்ட, கணிப்பொறி அடிப்படையிலான சிறப்புவகை தகவல் முறைமை ‘தீர்மானிப்பு உதவி முறைமை’ என்று அழைக்கப்படுகிறது. நிறுவனச் செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்வு காணவும் முடிவுகளை மேற்கொள்ளவும் தீர்மானிப்பாளர்களுக்கு உதவுகிறது.
    • 1950-களின் பிற்பகுதியிலும், 1960-களின் தொடக்கத்திலும் கார்னெஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிறுவனத் தீர்மானிப்பு (Organisational Decision Making) பற்றிய கருத்துரு ரீதியான ஆய்வுகள், 1960-களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஊடாடல் கணிப்பொறி முறைமைகள் (Interactive Computer Systems) பற்றிய ஆய்வுப் பணிகள் ஆகியவற்றின் சங்கமத்தில் 1970-களின் மத்தியில் ’தீர்மானிப்பு உதவி முறைமை’ என்னும் கருத்துரு ஒரு தனி ஆய்வுக் களமாக உருவாகியது.
    • 1987-ஆம் ஆண்டு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் யுனைட்டடு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ‘வாசல் ஒப்படைப்புத் திரைக்காட்சி முறைமை’ (Gate Assignment Display System) என்னும் தீர்மானிப்பு உதவி முறைமையை உருவாக்கிக் கொடுத்தது.
    • 1990-களின் தொடக்கத்தில் தரவுக் கிடங்கு (Data Warehousing), நிகழ்நிலைப் பகுப்பாய்வுச் செயலாக்கம் (On-Line Analytical Processing - OLAP) ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தீர்மானிப்பு உதவி முறைமையின் செயல்பரப்பை விரிவாக்கியது.
    • தரவுத்தள ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு, மனிதர்-கணிப்பொறி ஊடாடல், பாவிப்பு வழிமுறைகள், மென்பொருள் பொறியியல், தொலை தொடர்பு ஆகியவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புத்தாக்கங்கள் தீர்மானிப்பு உதவி முறைமையின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தன. காலப்போக்கில் மேலாண்மையில் மிகவும் இன்றியமையாத கூறாகத் தீர்மானிப்பு உதவி முறைமை இடம்பெறலாயிற்று.
    • தீர்மானிப்பு உதவி முறைமையின் கட்டமைப்பு கணிப்பொறிப் பிணையம், தரவுத்தளம், பகுப்பாய்வுக் கருவிகள், பயனர் இடைமுகம், பயனர்கள் ஆகிய ஐந்து உறுப்புகளை உள்ளடக்கியது.
    • தீர்மானிப்பு உதவி முறைமைகள் தாமே முடிவெடுத்துச் செயல்படுத்துவதில்லை. சேமிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், பகுப்பாய்வு மாதிரியங்கள், கருவிகள் மற்றும் ஊகிப்புப் பொறியின் உதவியுடன், முடிவெடுப்பதற்கு உதவுகின்ற தகவல்களையும் ஆலோசனைகளையும் மட்டுமே வழங்குகின்றன. மேலாளர்கள் அவற்றின் அடிப்படையில் தம் சொந்த அனுபவ அறிவையும் பயன்படுத்தி உகந்த முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
    • மருத்துவத் துறையில் மருத்துவ நோயாய்வு செய்ய, வங்கியில் கடன் வழங்குதலில் முடிவெடுக்க. பொறியியல் நிறுவனம் பல்வேறு திட்டப்பணிகளுள் ஆதாயமுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பங்குச் சந்தையில் முதல¦டு செய்வதில் ஆலோசனை வழங்க. வணிக நிறுவனங்கள் வணிக வளங்களைச் சிறப்பான முறையில் ஒதுக்கீடு செய்ய. சந்தையின் சாதக, பாதகப் போக்குகளை அறிந்துகொள்ள. புதிய உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்தக்கூடிய பகுதியைத் தீர்மானிக்க. இரயில், விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, வேளாண்மை உற்பத்தி, சந்தைப்படுத்தலில் சரியான முடிவுகள் எடுக்க தீர்மானிப்பு உதவி முறைமைகள் பயன்படுகின்றன.
    • தீர்மானிப்பு உதவி முறைமைகளின் பலன்களைக் கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்: முறைமையைப் பயன்படுத்தும் ஒருவரின் செயல்திறனை மேம்படுத்துகிறது. சிக்கலுக்கான தீர்வுகாணலை விரைவுபடுத்துகிறது. பணியாளர்களிடையே தகவல் தொடர்புக்கு வகைசெய்கிறது. கற்றலுக்கும் பயிற்சிக்கும் ஊக்கம் தருகிறது. நிறுவனக் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. எடுக்கும் ஒரு முடிவுக்கு ஆதரவாகப் புதிய தடயத்தை உருவாக்குகிறது. வணிகத்தில் போட்டியாளரைவிட அதிக அனுகூலத்தை உருவாக்குகிறது. வணிக நடவடிக்கைகளில் முடிவெடுப்பவரின் கூர்ந்தாய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. சிக்கல் வெளியில் (Problem Space) சிந்திப்பதில் புதிய அணுகுமுறைகளை வெளிப்படுத்துகிறது.
    • ஹேட்டன்ஸ்ச்விலர் என்பார் தீர்மான உதவி முறைமை பயனருடன் கொண்டுள்ள உறவுமுறை அல்லது உதவும் முறையின் அடிப்படையில் முனைப்பிலா முறைமை, முனைப்புறு முறைமை, ஒத்துழைப்பு முறைமை என மூன்றாக வகைப்படுத்துகிறார்.
    • ஸ்டீவன் ஆல்ட்டர் என்பார் தீர்மானிப்பு உதவி முறைமைகளைப் பொதுப்படையான செயல்பாடுகளின் அடிப்படையில் கோப்பு இழுப்பு முறைமை, தரவுப் பகுப்பாய்வு முறைமை, பகுப்பாய்வுத் தகவல் முறைமை, கணக்கியல், நிதியியல் மாதிரியங்கள், பிரதிநிதித்துவ மாதிரியங்கள், உகப்பாக்க மாதிரியங்கள், ஆலோசனை மாதிரியங்கள் என ஏழு வகையாகப் பிரிக்கிறார்.
    • டேனியல் போவர் என்பார் தீர்மானிப்பாளருக்கு உதவும் பாங்கின் அடிப்படையில் தீர்மான உதவி முறைமைகளை மாதிரிய முடுக்கம் தகவல் தொடர்பு முடுக்கம், தரவு முடுக்கம், ஆவண முடுக்கம், அறிவு முடுக்கம் என ஐந்தாக வகைப்படுத்துகிறார்:
    • குறிப்பிட்ட துறையில் சவாலாக விளங்கும் பணிகளில் ஒரு வல்லுநருக்கு நிகரான தரத்தில் சிக்கலுக்கான தீர்வுகளை வழங்கவல்ல செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ‘வல்லுநர் முறைமை’ (Expert System) என்று அழைக்கப்படுகிறது. ‘அறிவுசார் முறைமை’ (Knowledge-based System) என்றும் அழைக்கப்படும்.
    • வல்லுநர் முறைமையின் அகநிலைக் கட்டமைப்பு அறிவுத் தளம், ஊகிப்புப் பொறி என்னும் இரண்டு மென்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. புறநிலைக் கட்டமைப்பு, பயனர், பயனர் இடைமுகம் மற்றும் வல்லுநரையும் உள்ளடக்கியது.
    • வல்லுநர் முறைமையின் செயல்பாடு, அறிவுச் சேகரிப்புப் பாங்கு, ஆலோசனைப் பாங்கு, தீர்வு விளக்கப் பாங்கு என்னும் மூன்று பாங்குகளில் (modes) அமைகிறது.
    • வல்லுநர் முறைமைகள் மருத்துவம், வங்கி, பழுதறிதல், கணிப்பொறி விளையாட்டுகள், வடிவாக்கமும், உற்பத்தியும், இயற்கை அறிவியல், திட்டமிடலும் கால வரையறுப்பும், மேலாண்மைத் தீர்மானிப்புகள் ஆகிய துறைகளில் பயன்படுகின்றன.
    • ஒரு வல்லுநர் முறைமை பல வல்லுநர்களின் நிபுணத்துவத்தைச் சேமித்து வைத்துள்ளது. எனவே பல சிக்கலான சூழ்நிலைகளில் ஒற்றை மனித வல்லுநரைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறது. சிக்கல்களை அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு செய்கிறது. சரியான முடிவெடுப்பதில் உதவுகிறது. மனிதர்களைப் போல அவ்வப்போது சிலவற்றை மறந்து போகாது. எல்லா நாளும் எல்லா நேரமும் பணியாற்றும். சலிப்படையாது. வேலைப் பளுவால் கவனம் சிதறாது.
    • வல்லுநர் முறைமை வரம்புக்குட்பட்ட அறிவுக் களத்தில் குறித்த வகையான சிக்கல்களுக்கு மட்டுமே சிறந்த தீர்வுகளை வழங்கும். பொது அறிவைப் பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டிய சில சிக்கலான தருணங்களில் வல்லுநர் முறைமையால் உதவ முடியாது. அறிவுத் தளத்தில் பிழைகள் ஏற்பட்டு, தவறான முடிவுக்கு இட்டுச் செல்லவும் வாய்ப்புள்ளது. வல்லுநர் முறைமையை அமைக்கவும் பராமரிக்கவும் செலவு அதிகமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 17:02:52(இந்திய நேரம்)