தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கரடி ஆட்டம்

  • கரடி ஆட்டம்

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    தலையில் கரடியைப் போலச் செய்யப்பட்ட பொம்மைக் கூட்டினை மாட்டிக்கொண்டு, கருப்பு வண்ணத்தாள் துண்டுகளால் அல்லது நூலால் அலங்கரிக்கப்பட்ட அங்கியால் தன்னை மறைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரடி ஆட்டம் என்று கூறுவர்.

    கரடி ஆட்டம் கரகாட்டத்தின் துணைநிலை ஆட்டங்களுள் ஒன்று. தஞ்சை வட்டாரங்களில் இந்த ஆட்டம் பரவலாகக் காணப்படுகிறது. வீரக்கலை கற்றோரால் முகரம் பண்டிகையின் போது மட்டுமே இந்தக் கரடியாட்டம் ஆடப்படுகின்றது என்னும் கருத்தும் நிலவுகிறது. பொழுதுபோக்கினை அடிப்படை நோக்கமாகக் கொண்டு வீரக்கலை அறியாத இளைஞர்களால் ஆடப்படும் இந்த ஆட்டம் சிறுவர் சிறுமியர்களால் விரும்பி இரசிக்கப்படுகிறது.

    ஆட்டம் தொங்கும் போது கடவுள் வாழ்த்து ஏதும் பாடப்படுவதில்லை. கரடி வேடம் புனைந்தவர் ஆடுகளத்திற்குள் நுழையும் போது,

    “கத்தாழ தோப்புக்குள்ள

    கரடி வந்து துள்ளுதடி”

    என்னும் பாடல் நாதஸ்வரத்தில் வாசிக்கப்படும். பாட்டுக்கேற்ப ஆடிக் கொண்டே ஆடுகளத்தில் நுழையும் கரடி வேடம் புனைந்தவர் கூட்டத்தைப் பார்த்து பயமுறுத்துவது போலப் பாய்வார். இது தேரோட்டத் திருவிழாக் காலத்தில் ஆடப்படுகின்றது.

    கரடி வேடமணிந்து ஒருவர் மட்டுமே ஆடுவர். அவரோடு பபூன் இணைந்து நடிப்பார். கரடி வேடம் அணிபவர் ஆண்களே. பெண்கள் இந்த ஆட்டத்தில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைக்கவில்லை. பபூன் வேட்டியைக் கோவணமாகத் தலையில் முண்டாசு கட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு மேடையில் நுழைவார்.

    முதலில் கவனிக்காமல் கரடியின் அருகில் நெருங்குவோர் பின்னர் திடீரென்று கரடியைப் பார்த்து பயந்து அலறுவார். குச்சியால் கரடியைக் குத்த கரடி துரத்தும். மேடையில் இருவரும் வட்டமாக ஒருவர் பின் ஒருவர் ஓடுவர், ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு தரையில் உருளுவர்.

    கரடி பபூனைக் கீழே தள்ளி மேலே அமர்ந்து கையில் பாட்டிலில் மறைத்து வைத்திருக்கும். சிவப்பு வண்ண திரவத்தைப் பபூன் மேல் ஊற்றிப் பூச பபூன் இறந்து விட்டதாக நடிப்பார். கரடி பபூனை முகர்ந்து பார்க்கும்.

    கை, கால், தலை முதலானவற்றை ஒவ்வொன்றாகத் தூக்கிவிட, அவை பொத்தென்று விழும். கரடி அதனைக் கண்டு மகிழ்ந்து ஆடும். பபூனைத் தலையில் கை வைத்துத் தூக்கப் பிணம் போல உடல் விறைத்து எழுவார். அவரைத் தூக்கிக் கொண்டு கரடி ஆடுகளத்தை விட்டு வெளியே போகும்.

    கரடியாட்டத்தில் சண்டைக் காட்சி மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறுவர், சிறுமியர் கரடி ஆட்டத்தை விரும்பி ஆரவாரம் எழுப்பிப் பார்க்கின்றனர். கரடி ஆட்டம் எவ்வளவு காலம் ஆடப்பட்டு வந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

    இந்த ஆட்டத்தைக் கற்றுக்கொள்வதற்காக யாரும் பயிற்சி அளிப்பதாக தெரியவில்லை. ஒருவர் ஆடுவதைப் பார்த்து மற்றவர் அறிந்துகொள்கின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:54:10(இந்திய நேரம்)