தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொக்கலிக்கட்டை ஆட்டம்

 • கொக்கலிக்கட்டை ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  மக்கள் வாழ்க்கையிலிருந்து தானாகவே நாட்டுப்புறக் கலைகள் தோன்றின. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கைக்கு ஆழமாகவும் பதிந்துள்ளன. நாட்டுப்புற நடனங்கள் ஒரு நாட்டின் தொன்றுத்தொட்டு வரும் மரபுகளாகவும் விளங்குகின்றன. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலைகளை உருவாக்கினர். நாட்டு மக்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும் வரலாற்றினைத் தெரிந்துக்கொள்ளவும் கலைகள் பெரிதும் பயன்படுகின்றன.

  நாட்டுப்புறக் கலைகள் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துதல் என்ற நோக்கத்திற்காக மட்டும் அல்லாது, நாட்டுப்புறக் கலைஞர்களின் மன மகிழ்ச்சிக்காகவும் ஆடப்படுவனவாக உள்ளன. தொன்மையான தோற்றம் காண இயலாதவையாவும் நாட்டுப்புறக் கலைகள் சந்த நயத்தோடு தாமே நிரம்பி வழியும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் என்பர்.

  “அடுத்தது காட்டும் பளிங்குப் போல் நெஞ்சம்

  கடுத்தது காட்டும் முகம்”.

  “நீண்ட கால்களை உடைய கொக்கினைப் போன்று நீண்ட மரக்கட்டைகளைக் காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டத்தினைக் “கொக்கலிக்கட்டை ஆட்டம்” என்பர். மூன்று, நான்கு கால்கள் உடைய இருக்கைகள் முறையே முக்காலி, நாற்காலி என்று கூறப்படுவதைப் போன்று கொக்கின் கால்களைப் போலவே உயரமான கால்கள் ‘கொக்காலி’ என்று கூறப்பட்ட பின்னர் ‘கொக்கலி’ என்று அழைக்கப்பட்டிருந்தன எனத் திரு.கார்மேகன் தம் கருதினைப் பதிவு செய்துள்ளார்.

  வேலூர், வாலாசாப்பேட்டை ஆகிய ஊர்களில் வைகாசி மாதம், அமாவாசையை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை, கெங்கையம்மன் கோவிலுக்குக் காப்புக்கட்டி, அடுத்த செவ்வாய்,. அன்றும், காப்புக் கட்டிய எட்டாம் நாள் திருவிழா நடத்தப்படுகின்றன. அத்திருவிழாவில் அம்மனுக்கு நேர்ந்து கொண்ட ஆண்கள் கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் பங்கேற்கின்றனர். பெண்கள் இந்தக் கொக்கலிக்கட்டை ஆட்டத்தின் கலந்து கொள்வதில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் இந்த ஆட்டத்தினைப் பெண்கள் ஆடுகின்றனர் என்று தினத்தந்தி பத்திரிக்கைச் செய்திகள் மூலம் அறியலாம். (தினத்தந்தி, 3.10.1991, ப.11) இந்த ஆட்டம் ஆடுவதால் கெட்ட ஆவிகள் தங்களிடம் வராது என்று அவர்கள் நம்புகின்றனர்.

  ஆதிதிராவிடர்கள் இந்த ஆட்டத்தில் ஆட்டக்காரர்களாகவும் கலந்து கொள்வதில்லை. அகமுடைய முதலியார், நாயக்கர், முத்திரையர், மந்திரி, பிள்ளை, கோனார், வன்னியர் போன்ற சாதியினர் ஆடுகின்றனர். வாலாசாப் பேட்டையில் வன்னியர்களே அதிகமாகவும் கலந்துகொள்கின்றனர். இப்போது எல்லா இனத்தவரும் கொக்கலிக்கட்டை ஆட்டத்தை ஆடுகின்றனர். ஆட்டத்தில் கலந்துகொள்ளும் முன் பயிற்சி தேவை என்பதாகும்.

  வயதில் முதிர்ந்த ஆட்டக்காரர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையரிமும் உற்சாகமும் கொண்ட ஒருவர் இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் இந்த ஆட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே இத்தகைய பயிற்சி தவிர இந்த ஆட்டத்தைக் கற்றுத் தரப் பள்ளி எதுவும் இல்லை.

  கொக்கலிக்கட்டை ஆட்டம் ஆடுவோர் அம்மனுக்குக் காப்புக் கட்டியது முதல் ஆட்டம் முடியும் வரை கடுமையான விரதம் இருக்கவேண்டும். இரவில் கோவிலில் படுத்து உறங்குவர்கள். இவ்வாறு விரதம் இருந்தால் அவர்களுடைய நம்பிக்கை வெளிப்படுகின்றன.

  ஆட்டக்காரர்களின் ஒப்பனை தனித்தன்மை வாய்ந்தன. வாலாசாப் பேட்டையில் திருவிழா நடப்பதற்கு முதல் நாள் இரவு ஏழு மணிக்கே தம்மை அலங்காரம் செய்யத் தொடங்குகின்றனர். ஒருவர் மூன்று பேருக்கும் அலங்காரம் செய்வதற்குள் விடிந்துவிடும். அலங்காரம் செய்யும் நேரம் வேலூர் அருகில் இருக்கும் ரங்காபுரத்தில் அமைகிறது.

  எனவே, காலை பதினோரு மணிக்கு அலங்காரம் செய்யத் தொடங்கிச் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும். உடலில் பழங்குத்துதல் அலங்காரத்தின் இன்றியமையாத அம்சமாகும். மெல்லிய ஊசியில் நூலினைக் கோத்து விடுவார்கள். இரு கைகளிலும் பழம் குத்தி அலங்காரம் செய்துக் கொள்வதும் உண்டு என்பர்.

  தோளில் பிளாஸ்டிக் அல்லது பஞ்சால் செய்யப்பட்ட கிளிகளைக் கட்டிக் கொள்வர்கள். பின்பு மார்பில் பெருக்கல் குறி போல மலர் மாலையைப் போடுவார்கள். தொன்றுதொட்டு மஞ்சள் அரைக்கால் சட்டையை அணிவர்கள். இவற்றில் எல்லா வகையான நிறக் கால் சட்டைகளையும் அணிந்து கொண்டு ஆடுவார்கள். கட்டையில் சலங்கையும் கட்டப்பட்டிருக்கும். கட்டைகளைக் கட்டு முன் அவற்றைக் கோயில் வாசலில் வைத்து கொண்டு சூடம் ஏற்றி வணங்குவர்கள். இத்தகைய அலங்காரத்துடன் ஆட்டம் தொடங்கும்.

  இரு கைகளையும் விரித்தால் இடிக்காத அளவு இடைவெளிகள் விட்டு ஆட்டக்காரர்கள் நின்று கொள்வர்கள். வீதிகளில் செல்லும்போது இரண்டு இரண்டு பேர் அல்லது மூன்று பேர்கள் கொண்டு வரிசையாகவும் நின்று ஆடுவர்கள். எனவே சற்று அகன்ற இடங்களிலும் கோயில் முன்புறமும் வட்டமாக நின்று கொப்பி (கும்மி) கொட்டியும் ஆடுவர்கள். ஆட்டத்தில் ஒத்த அடி, ரெட்டடி என்று ஏழு அடி வரை உள்ளதாகக் கூறப்படுகின்றன.

  இந்த ஆட்டத்தில் தொன்மையான வரலாறு பற்றியும் தெரியவில்லை. ஆட்டக்காரர்கள் தலைமுறை தலைமுறையாகவும் ஆடி வருகின்றோம் என்று கூறினர். மாதவி ஆடியதாகவும் இளங்கோவடிகள் சுட்டும் பதினோரு ஆடல்களுள் ஒன்றான ‘மரக்காலாடல்’ கொக்கலிக்கட்டை ஆட்டத்தோடும் பின்னிப் பிணைத்துப் பார்க்கத் தக்கதாகவும் உள்ளன. எனவே அதே நேரத்தில் பதினோராடல்களில் முதல் ஆறு ஆடல்கள் நின்றாடும் ஆடல்கள் என்றும் ஏனைய ஐந்து வீழ்ந்தாடல்கள் என்றும் அடியார்க்கு நல்லார் உரை உணர்த்துகின்றது.

  “துடிகடையும் பேடு மரக்காலே பாவை

  முடிவுடன் வீழ்ந்தால் ஐந்து”

  என்ற பாடலில் துடிக்கூத்து, கடையக்கூத்து, பேடியாடல், மரக்காலாடல், பாவைக் கூத்து முதலானவை என்றும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவதும் தற்போதைய கொக்கலிக்கட்டையாட்டம் நின்றாடும் ஆட்டமாகவும் இருப்பதையும் நினைத்துக்கொள்ள வேண்டும்.

  தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர், வாலாசாப்பேட்டை முதலான ஊர்ப்பகுதிகளில் கெங்கையம்மன் கோயில் விழாவில் மட்டுமே ஆடப்பட்டு வந்த இந்த ஆட்டம் கடந்த பத்து ஆண்டுகளில் தன் ஆடுகளத்தை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளது. அழைப்பில் பேரில் வெளியூர்க்கோயில் மற்றும் விழாக்களில் சென்று ஆடுகின்றனர்.

  இவற்றில் வெளியூர் செல்லும்போது சுமார் பத்துப்பேர் வரை செல்கின்றனர். பழம், நூல், ஊசி, துணி, போக்குவரத்து, உணவு செலவுகள் ஒரு நாளைக்கு ரூ. 25 முதல் ரூ. 100 வரை கூலி கொடுக்கின்றனர். இதன் மூலம் கோயிற் சடங்கு, கலை தொழிற்கலையாகவும் மாறி வருவதையும் அறியமுடிகின்றது.

  சுதந்திர தினம், குடியரசு தின, அமைச்சர்கள் வரவேற்பு முதலான அரசு விழாக்களிலும், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் அழைப்பின் பேரில் ஆடச் செல்கின்றனர். ஆனால் இத்தகைய ஆட்டம் ஆட விரதம் எதுவும் இருப்பதில்லை.

  மரக்கட்டை மீது ஏறி நின்று ஆடும் ஆட்டம் ஆந்திரம், மத்தியப் பிரதேசம் முதலான மாநிலங்களிலும் ஆடப்படுவதாகவும் தெரிகின்றது. ஆடுவோர் ஆடப்படும் நோக்கம், காலம் பற்றி அறியமுடியவில்லை. கர்நாடகத்தில் இவ்வாட்டம் ‘மரக்காலு வீசு கம்மாலே’ என்று சொல்லப்படுகிறது. ஆட்டத்தின் போது மாகதேசுவரனைப் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. நாட்டுப்புறக் கலைகளில் கொல்லிக்கட்டை ஆட்டம் சிறப்பாகக் காணப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:08:15(இந்திய நேரம்)