தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வீரபத்ரசாமி ஆட்டம்

 • வீரபத்ரசாமி ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  இறைவழிபாட்டுக்கு உதவுமாறு பலவிதமான நாட்டுப்புற ஆட்டக் கலைகள் நடத்தப் பெறுகின்றன. அவை பெரும்பாலும் ஊர்த் தெய்வங்களுக்கு விழா நடத்தும் போது நடைபெறுகின்றன. குறிப்பிட்ட தெய்வங்களுக்குக் குறிப்பிட்ட ஆட்டக் கலைகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அனைத்துச் சமயச் சார்பு ஆட்டக் கலைகளும் இறை வணக்கத்துக்காகவே நடைபெறுகின்றன.

  முழு முதற்கடவுளாகிய சிவனின் பிள்ளைகளுள் ஒருவராகத் தோற்றமளித்தவர் வீரபத்ரசாமி ஆவார். இவருக்குப் பல இடங்களில் பல பெயர்கள் உண்டு. இவர் பல இன மக்களுக்குக் குலதெய்வமாகவும், சிலருக்குக் காவல் தெய்வமாகவும் விளக்குகிறார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என்று ‘திருவிளையாடல் புராணம்’ கூறுகிறது. ‘தக்னகயாகப்பரணியில் தக்கனை அழிக்க வீரனாகக் காட்சி தந்தார் என வருகிறது. ‘கந்த புராணத்தில்’ வீரபத்ர படலம்’ என்றே இடம்பெற்றுள்ளது.

  குறும்பர்கள் – ஓர் அறிமுகம்

  ‘குறும்பர்’ இன மக்களுக்குக் குலத்தெய்வம் அகோர பத்திரர் ஆவார். தர்மத்தின் வழி நிற்கும் இந்திய மக்களுள் இவர்களும் ஒருவர். இவர்கள் வட ஆற்காடு, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டம், தற்பொழுது ஊட்டி போன்ற இடங்களில் வசிப்பவர்கள் ஆவார். இவர்கள் கன்னடம் கலந்த ‘லிபி’ இல்லாத தமிழ்மொழி பேசக்கூடியவர்கள் “குறும்பர்கள்” எனப்படுவர். இவ்வின மக்கள் காஞ்சியைத் தலைநகரமாக்க் கொண்டு ஆண்ட பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என வாய்மொழி வரலாறும் உண்டு. இவர்கள் மலைகளில் வாழ முற்பட்டாலும் இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்த்தலும், கம்பளி நெய்வதும் ஆகும். இவ்வினப் பழங்குடி மக்கள் வளர்க்கும் ஆட்டினைக் ‘குறும்பாடு’ எனக் கூறுவதுண்டு. இன்றைய திரைப்படப் பாடல் ஒன்றில் குறும்பாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

  புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களில் சித்திரை, ஆடி, மாசி, புரட்டாசி மாதங்களில் வீரபத்திர விழா நடைபெறும். அப்பொழுது ஆடும் ஆட்டமே பலகை ஆட்டம் எனப்படுகிறது. ஆனால், இந்த ஆட்டத்தைப் பற்றி களாய்வு செய்யும்போது கிடைத்த தகவல்களின் படி குறும்பர்கள் ஆட்டம் என்று தான் அன்று வழங்கப்பட்டு வந்துள்ளது. பின் ஆட்டத்தில் ஆடும் கருவிகளின் இயக்கத்தைக் கொண்டு ஆட்டங்களுக்குப் பெயர் வைத்து ஆடுகின்றனர். “வீரபத்ரசாமியைத் தலையில் வைத்து ஆடுவதால் இப்பெயர் பெற்றுள்ளது. இச்சிலை ஐம்பொன்னால் ஆன சாமியாகும். இச்சிலை குதிரையின் மீதோ, சக்தியுடன் இருப்பது போலவோ செய்யப்பட்டுப் பலகை போல் இருத்தப்பட்டிருக்கும். ‘வீரபத்ரசாமி பலகை ஆட்டம்’ என்றும், அதனைக் குறும்பர்கள் ஆடுவதால் ‘குறும்பலகை ஆட்டம்’ என்றும் அழைக்கப்படும். எனவே ,குறும்பர் பலகையில் சாமியை வைத்து ஆடுவதால் குறும்பர் பலகை ஆட்டம் எனப் பெயர் வரலாயிற்று.

  சிவனின் மகனாகிய அருள்மிகு வீரபத்திர சாமியை வணங்கி ஆடி மகிழ்வித்தால் அவர்களின் அன்பும் ஆசியும் எல்லாவிதச் செல்வங்களும் பெற்று நல்ல மனிதர்களாக வாழலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

  அன்று இறைவழிபாட்டுக்காக ஆடிய ஆட்டம் இன்று அறிவியல் அடிப்படையில் பயன் தருகிறது எனலாம். எவ்வாறு எனில் ஆட்டத்தின் போது ஆடுபவர்களின் கைகளும் கால்களும் முழுமையாக இயங்குவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் உடற்பயிற்சிக்கு அதிகம் செலவு செய்கிறோம். அன்று அப்பயிற்சியை இலவசமாகவே ஆட்டத்தின் மூலம் பெற்றனர். அத்துடன் நரம்புகளுக்குப் புத்துணர்வும் தரப்படுகிறது.

  இவர்கள் மலைவாழ் மக்களாகிய ‘லிபி’அல்லாத தமிழ் பேசக்கூடியவர்கள் என்பதும் புலனாகிறது. இந்த இனமக்கள் பல இடங்களில் வாழ்வதாகத் தெரிகின்றது. அன்றைய காலக்கட்டத்தில் இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும், இவர்களது உணவு காய், கனி, கிழங்கு வகைகள் என்பதும் புலனாகின்றன. இந்த உணவை வைத்து ஆட்டக்காரர்களின் விரதத் தன்மையை அறிய முடிகிறது. அன்று ‘குறும்பாட்டம்’ என்று கூறி வந்த நிலைமாறி இன்று ‘குறும்பர்களின் பலகை ஆட்டம்’ என மாறியிருப்பதும் தெரிய வருகிறது. பலகை ஆட்டம் என்பது இன்று வளர்ந்து சேர்வை ஆட்டம், சேவையாட்டம், தேவராட்டம் போன்ற ஆட்டங்களுடன் தொடர்புடைய ஆட்டமாகக் கருதவும் இடமிருக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:35:29(இந்திய நேரம்)