தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாசாப்பு நாடகம்

 • வாசாப்பு நாடகம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கூத்து வடிவிலுள்ள கலை வடிவங்களுள் வாசாப்பு நாடகமும் அடங்கும். ‘வாசகப்பா’ என்ற சொல்லின் திரிபே ‘வாசாப்பு’ ஆகும்.

  வசனமும் (உடையாடலும்) பாடலும் கலந்த நாடக வகை என்ற பொருளில் வாசகப்பா என்றாயிற்று. (வாசகம் + பா = வாசகப்பா).

  திருமறையின் வசனங்களைப் பாக்களாக இசையுடன் அமைத்து பாடுவதால் வாசகப்பா என்ற பெயர் பெற்றது. இந்நாடகமானது தனி நாடக வகையாகும்.

  வாசகப்பா போர்ச்சுக்கீசியக் கத்தோலிக்கர்கள் அறிமுகப்படுத்தினாலும், தமிழகத்தின் தெருக்கூத்து, பள்ளு, குறவஞ்சி போன்ற நாடக வடிவங்களையே உள்ளடக்கி உள்ளது.

  வாசாப்பு நாடகம் கேரள சவுட்டு நாடகம் போன்றது. ஏறக்குறைய 500 ஆண்டுகளாக இக்கலை பழமைப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வருகிறது.

  இக்கலை தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாகவும், திருச்சி, வேலூர், வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. கேரளத்தில் பாலக்காட்டில் சித்தூர் பகுதியில் வழக்கிலிருந்தாலும் இடத்திற்கு இடம் பல்வேறு வேறுபாடுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளன.

  வாசாப்பு நாடகம் வயலில் தொழில் நடைபெறாத கோடை காலத்தில் நடைபெறும். ஈஸ்டர் திருவிழா அன்று இரவிலோ அதற்கு மறுநாளோ தொடங்கி பத்து நாட்கள் வரை தொடர்ந்து நிகழும்.

  இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி காலை ஐந்து மணி வரை நாடகம் நடக்கும். குறிப்பிட்ட சில புனிதர்களின் திருவிழாக்களில் நடக்கும் வாசகப்பா நாடகம் அந்நாட்களின் தன்மைக்கேற்ப கூட்டியுங் குறைத்தும் நடத்தப்படும்.

  இக்கலை திறந்தவெளி அரங்கில் மேடையில் நிகழ்த்தப்படும். இம்மேடை ‘வாசகப்பா மேடை’ என அழைக்கப்படுகிறது. மற்ற நிகழ்ச்சி இம்மேடையில் நிகழ்த்தப்படுவது இல்லை. மேடையில் இரண்டு அடுக்குடன் கூடிய அரண்மனையும், மேல் அடுக்கிலிருந்து இறைத்தூதர்கள் இறங்கி வருவதற்கு ஏற்றவாறு அமைப்பும் உள்ளன. மேடை பின்புறம் ஓவியத் திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருக்கும். மேடையின் மூன்று புறமும் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள்.

  இந்நாடகத்தின் ஒப்பனை பாத்திரங்களுக்கு ஏற்பவும், புனிதர்களின் ஓவியத்தைப் போன்று ஒப்பனைச் சாதனங்களும் உள்ளன. ஒப்பனையில் மேல்நாட்டுச் செல்வாக்கும், தமிழகச் செல்வாக்கும் காணப்படுகின்றன. கதைப் பாத்திரங்களாக யார் நடிக்கிறார்களோ அவர்களே ஒப்பனைச் செலவையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

  நாடகம் நடிக்கும் ஊரிலுள்ள பங்குத் தந்தை நாட்டாண்மை, ஊர்மக்கள் ஆகியோர் பங்கு கொள்வார்கள்.

  வாசகப்பா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே கால் நாட்டும் சடங்கும், காலைத் திருப்பலி முடிந்ததும் நாட்டாண்மையார், அண்ணாவியார், ஊர் மக்களில் சிலர் ஆகியோர் பங்கு தந்தையைக் கால் நாட்டும் சடங்கிற்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பார்கள்.

  பங்கு தந்தை ஜெபம் செய்து கூடியுள்ளவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு அளிப்பார். இச்சடங்கு ‘மூன்றாங்கால்’ என்றும் ‘உடன் கால்’ என்றும் வழங்கப்படும்.

  வாசகப்பா நிகழ்வுக்குரிய புனிதரின் உருவம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மேளத்தாளம் முழங்க மெழுகுவர்த்தி ஏந்தி புனிதரின் உருவம் மேடையின் வலது புறமாக வைத்து அனைவரும் வணங்குவர்.

  மேடையில் அண்ணாவி அமர்ந்ததும் ஆடை அணிவித்து மரியாதை செய்து, அண்ணாவியும் பின் பாட்டுக்காரர்களும் கடவுள் வாழ்த்துப் பாடுவர்.

  பின் பெண்கள் மலர் தூவி, அறிவொளி, பிரிவாளி இருவர் தோன்றி அன்று நடக்க இருக்கின்ற காட்சிகளைத் தொகுத்துக் கூறுவர்.

  நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர்களும் பார்வையாளர்களும் கோவிலுக்குச் சென்று திருப்பலியில் பங்கு கொள்வர். கலைஞர்கள் மரியாதையை மட்டுமே பெற்றுக்கொள்வர். அதாவது அன்பளிப்புப் பணத்தை மட்டுமே பெற்றுக்கொள்வர். நிகழ்ச்சிக்குக் கூலி வாங்குவது இல்லை.

  வாசாப்பு நாடகத்தின் மையக்கருத்து மேல் நாட்டைச் சார்ந்ததாக இருப்பினும், அடிக் கருத்தும் அமைப்பும் தமிழகத்தைச் சார்ந்ததாகவே உள்ளன.

  வாசாப்பு நாடகத்தின் பாக்கள்:

  1. வெண்பா

  2. ஆசிரியப்பா இலக்கிய வடிவம்

  3. விருத்தம்

  4. நொண்டிச்சிந்து

  5. தாலாட்டு நாட்டுப்புற பா வடிவம்

  6. ஆனந்தக் களிப்பு

  வாசாப்பு நாடகம் கிறிஸ்துவ சமயமாக இருப்பினும் ‘இரணியன் வாசகப்பா’ என்ற இந்து சமய புராண நாடகமும் இருந்திருக்கிறது.

  இந்நாடகம் இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு போன்றவற்றைக் குறிப்பிட்டும், சடங்குகளுடன் இணைந்தும் கலை நிகழ்வாக உள்ளன. ஒவ்வொரு வாசகப்பாவிற்கும் ஒரு நம்பிக்கை உண்டு.

  1. ஆக்னசு அம்மா வாசகப்பா - பெரியம்மை நோய் வராது

  2. மருகரிது அம்மாள் வாசகப்பா - சுகமான பிரசவம்

  3. அந்தோணியார் வாசகப்பா - பேய்த் தொல்லையிலிருந்து காப்பாற்ற

  அந்தோணியார் நாடகத்தின் போது பேய் பிடித்தவர்கள் ஆடுகின்றனர். அந்தோணி பாத்திரம் ஏற்றவர் பேய் பிடித்தவரின் தலையில் கை வைத்து, சிலுவைக் குறியிட்டால் பேய் ஓடிவிடும். மேலும் இவ்வாசகப்பா கலை நடந்தப்படும் நாளன்று மழை பொழியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

  வாசகப்பா தொடர்ந்து நடைபெறாவிட்டால் ஊருக்குத் தீமையும், இக்கலையைக் கிண்டல் செய்பவரின் குடும்பம் துன்பப்படும் என்றும், இக்கலையை வியாபார பொருளாக்கக்கூடாது என்ற நம்பிக்கையும் உண்டு.

  ஊர்மக்கள் புனிதர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். புனிதர்களுக்குத் தண்டனை வழங்கிய மன்னர்களாக நடித்தவர்கள் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்கின்றனர்.

  வாசகப்பா கலைஞர் இறந்த பின் அவர் வீட்டில் வாசாப்பு பாடல் பாடப்பட்டும் அவரது உடலுக்கு நாடக உடை அணிந்தும் அடக்கம் செய்யப்படுகிறது.

  வாசாப்பு நாடகத்தின் பயிற்சி ‘அடுக்கு’ ஆகும். இயேசுநாதர் தனியாகத் தவமிருக்கும் 40 நாட்கள் ‘தவக்காலம்’ ஆகும். இக்காலத்தில் தான் அடுக்கு (பயிற்சி) நடைபெறுகின்றன.

  மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை பயிற்சி அண்ணாவியே அளிப்பார். இவருக்குப் பயிற்சியாளர்கள் கட்டுப்பட்டு நடக்கின்றனர். கோவில் வளாகத்தில் பயிற்சியும், பயிற்சியின் போது விரதமும் இருக்கவேண்டும். அண்ணாவி முறை, மரபு வழியாக வருவதாகும்.

  வாசாப்பு நாடகம் நடிக்கும் போது ஊரின் பொதுமக்களே பார்வையாளர்களாகவும், அக்கம்பக்கம் ஊரினரும் வருகின்றனர்.

  பார்வையாளர்களில் கத்தோலிக்கர் இருப்பின் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்கள் வரவில்லை. அவர்களின் சமயக் கூறாக வாசாப்பு உள்ளதால் அதை மதிக்கின்றனர்.

  தற்போதைய நிலையில் இந்நாடகம் மறைந்து கொண்டும், நாடக வழிபாட்டுக் கூறுகள் மறைந்தும் வருகின்றன. அதற்கு இக்கலைஞர்களின் பொருளாதார நிலையே காரணமாகக் கருதப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:34:55(இந்திய நேரம்)