3. காப்பிய இலக்கியம்

காப்பிய இலக்கியம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்.

உலகின் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். அம்மொழியின் இலக்கிய வடிவம் மிகுதியும் கவிதையாகவே அமைகின்றது. செய்யுள் என்றும் பாட்டு என்றும் அதற்கு வேறு பெயர்கள் உண்டு. நெடுங்கதைகளைச் செய்யுள் வடிவத்திலேயே சொல்லும் முறை தமிழில் இருந்தது. அக்கதைச் செய்யுள்கள், பெருங்காப்பியங்களாகவும், சிறுகாப்பியங்களாகவும் வடிவம் பெற்றன. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களைக் கொண்டு அமைவது பெருங்காப்பியம். வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகிய மூன்றில் ஒன்று காப்பியத்தின் முன்னதாக அமைதல் வேண்டும். காப்பியத் தலைவன் தனக்கு நிகராக வேறு யாரையும் சொல்ல முடியாத அளவிற்குச் சிறந்தவனாக இருக்க வேண்டும். மலை, கடல், நாடு, நகர், பருவம் முதலான வருணனைகள் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வாறான இலக்கணங்களோடு அமைவதாகப் பெருங்காப்பியம் விளங்கும். இத்தன்மைகளுள் சில குறைந்து காணப்பட்டால் அவை சிறுகாப்பியம் ஆகும். பொதுவாக, தமிழில் பெருங்காப்பியங்கள் ஐந்து என்று சொல்லப் பெற்றாலும் அந்த மரபில் தோன்றிய பல பெருங்காப்பியங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கம்பர் இயற்றிய கம்பராமாயணம். அக்காப்பியத்தில் இடம் பெறும் ஒரு பகுதியைத்தான் இங்குப் பாடமாகப் பயில இருக்கின்றீர்கள் !