காப்பிய இலக்கியம்
பாடல் கருத்து
Theme of the Poem
தமது சிற்றன்னையாகிய கைகேயி உரைப்படி, மரவுரி (துறவுக்கு உரிய காவி உடை) தரித்து, 14 ஆண்டுகள் காட்டில் தங்கித் தவம் புரிய வந்தவன் இராமன். அவனோடு சீதையும், இலக்குவனும் வந்தனர். வழியில் கங்கைக் கரையில் முனிவர்கேளாடு தங்கிப் பேசிக்கொண்டிருக்கின்றான் இராமன். அச் சமயம் இராமன் வந்தது கேள்விப்பட்டு அவனைச் சந்திப்பதற்காகத் தம்படை வீரர்கள் புடைசூழக் குகன் வருகின்றான். குகன் கங்கைக் கரையைக் கடப்பதற்குப் பயன்படும் படகுகளுக்கு (ஓடங்களுக்கு) எல்லாம் தலைவன் ; வேடன்; சிருங்கிபேரம் என்னும் நகரை ஆள்பவன். இந்த நிலையில் அவன் முதலில் இலக்குவனையும் பின்னர் இராமனையும் சந்தித்துப் பேசியப் பகுதி நமது பாடப்பகுதியாக அமைகின்றது.
முனிவர்கேளாடு உள்ளே இராமன் உரையாடிக் கொண்டிருக்கின்றான். வாசலில் இலக்குவன் நிற்கின்றான். அப்போது, குகன் தன்கூட்டத்தினரோடு வருகின்றான். தனது வில் முதலான கருவிகளை வைத்துவிட்டுத் தம்முடன் வந்த படைவீரர்களையும் தனியே இருக்க வைத்துவிட்டு, குகன்மட்டும் முன்வருகின்றான். இதனைக் கண்ட இலக்குவன், குகன் தன்னை அழைக்கும் முன்பே, விரைந்து குகனிடம் சென்று “நீ யார்?” என்று கேட்கிறான். குகன், “தேவனே, உனது பாதங்களை வணங்குவதற்காக வந்தேன். நாயினும் அடியவனாகிய நான் கங்கையைக் கடக்க உதவும் படகுகளைக் கொண்ட வேடன். குகன் எனது பெயர்” என்று கூறினான்.
உடனே, இலக்குவன், “இங்கே நில்” என்று சொல்லிவிட்டு இராமன் இருந்த தவச்சாலைக்குள் சென்று இராமனை வணங்கினான். “மன்னவனே, கங்கைக் கரையில் உள்ள படகுகளுக்கு எல்லாம் தலைவனாகிய குகன் என்பவன் தன்கூட்டத்தினரோடு உன்னைக் காண்பதற்காக வந்துள்ளான். உள்ளம் தூயவன் ; தாயைவிட நல்லவன்” என்று கூறினான்.
அதுகேட்ட இராமன், மிகுந்த விருப்பத்தோடு, “நீ சென்று அவனை என்னிடம் அழைத்துவருக !” என்றான். இலக்குவனும் வந்து குகனை அழைத்துச் சென்றான். மிகுந்த அன்புடையவனான குகன் இராமனைக் கண்டான். தமது இருள்போன்ற தலைமுடி தரையில்படும் அளவிற்குத் தாழ்ந்து வணங்கினான். அடக்கத்தோடு தமது கையால் வாய்பொத்தி நின்றான்.
உடனே, இராமன் “இங்கே அமர்வாயாக !” என்று கூறியும் குகன் அமரவில்லை. அளவு கடந்த அன்புடையவனான குகன், “தங்களுக்கு அமுது(உணவு)க்கு ஆகும்படியாகத் தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். தங்கள் விருப்பம் எப்படியோ, அப்படியே செய்யுங்கள் !” என்று கூறினான். அதனைக் கேட்ட இராமன், உடன் இருந்த முனிவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். பின்னர் குகனைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.
“உள்ளத்து அன்பு தெரியும்படியாக நீ கொணர்ந்த பொருள்கள் அனைத்தும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியவையே. அவை வானவர்கள் உண்ணும் அமுதத்தைவிடச் சிறந்தவை. புனிதமான (தூய்மையான)வை. அதனை ஏற்றுக் கொண்டோம். அது உண்பதற்குச் சமம் !” என்று இராமன் கூறினான்.