3. காப்பிய இலக்கியம்

காப்பிய இலக்கியம்

பாட அறிமுகம்
Introduction to Lesson


இராமன் கதையைச் செய்யுள் வடிவில் காப்பியமாகப் பாடியவர் கம்பர். வடமொழியில் வால்மீகி பாடிய இராமன் கதையைத் தமிழ் மரபிற்கு ஏற்பப் பாடியவர் இவர். கம்பர்+இராமன்+அயனம் = கம்பராமாயணம். அயனம் என்றால் வழி என்று பொருள். இராமன் நடந்த வழி என்பது இதன் பொருள். கம்பர் இயற்றியதால் அது கம்பராமாயணம் என்பர். கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம் ஆகும். இந்திய இதிகாசங்களுள் சிறப்பான இடம் பெறுவது இராமாயணம் ஆகும். கோசலநாட்டு மன்னனாகிய தசரதனின் மகன் இராமன். அவனைப் பெற்ற அன்னையின் பெயர் கோசலை ஆகும். அவனை வளர்த்தவள் கைகேயி ஆவாள். வளர்ப்பு அன்னை கைகேயின் ஆணைப்படி தான் ஏற்க வேண்டிய அரசைத் தன்தம்பி பரதனிடம் கொடுத்து 14 ஆண்டுகள் காடு நோக்கிச் சென்றவன் இராமன். இவனோடு இவனது மனைவி சீதையும், தம்பி இலக்குவனும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் குகன் என்னும் வேடன் இவர்களைச் சந்திக்கின்றான். அந்தக் காட்சியைத்தான் பின்வரும் செய்யுள்களில் படிக்க இருக்கின்றோம்.