காப்பிய இலக்கியம்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப் பெறுபவர் கம்பர் ஆவார். இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும். இவர், சோழநாட்டில் தேரழுந்தூரில் பிறந்தவர். திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர். கல்வியில் பெரியவர் கம்பர் என்று போற்றப் பெற்றவர்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவன்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை !
என்று பாரதியார் கம்பரைப் போற்றுகின்றார். பன்னிரண்டாயிரம் பாடல்களால் பாடப்பெற்ற பெரிய காப்பியம் கம்பராமாயணம் ஆகும். இனிய சந்தங்களும், அழகிய உவமைகளும், சிறப்பான வருணனைகளும் கொண்டு விளங்குவது கம்பராமாயணம் ஆகும்.
இவர் பாடிய கம்பராமாயணம் மொத்தம் ஆறு காண்டங்களைக் கொண்டது. அதில் இரண்டாவது காண்டமாக விளங்குவது அயோத்தியா காண்டம் ஆகும். ஏழாவது காண்டம் உத்தரக் காண்டம் ஆகும். இதனைப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். அயோத்தியா காண்டத்தில் இடம்பெறும் குகப்படலத்தில் இருந்து ஒரு பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.