18. கோயில் வேவு

 

இதன்கண் -காட்டிற்குச் சென்ற உதயணன் வாசவதத்தை விரும்பிய அரும்பு, மலர், தளிர்.முதலியவற்றைக் கைக்கொண்டு மலைச் சாரலினின்றும் நகர் நோக்கி வருதலும், அவன் ஏறிவரும் புரவியின் மாண்பும், வரும்வழியில் தீய நிமித்தம்காண்டலும், நகரத்தில் புகைஎழுதலை அவ்உதயணன் காண்டலும், உருமண்ணுவாவும் வயந்தகனும் உதயணனுக்குத் தீங்கு நிகழாமல் பாதுகாத்தற் பொருட்டு விழிப்புடன்இருத்தலும், காஞ்சன மாலை கலங்குதலும், உதயணன் நகரத்துள் புகுந்து அரண்மனை வாயிலின்கண் நினைவிழந்து வீழ்தலும், தோழர் உபசரித்தலும், அவன் நினைவுமீண்டு எழுதலும் பிறவும் கூறப்படும்.
 
              உள்ளியது முடித்த யூகியும் செவிலியும்
            ஒள்ளிழை மாதரோடு ஒளித்த பின்னர்ப்
            பலாவமல் அசும்பின் பயமலைச் சாரல்
            உலாவேட்டு எழுந்த உதயண குமரன்
        5   குழைஅணி காதில் குளிர்மதி முகத்திக்குத்
            தழையும் தாரும் கண்ணியும் பிணையலும்
            விழைபவை பிறவும் வேண்டுவ கொண்டு
            கவவிற்கு கமைந்த காமக் கனலி
            அவவுறு நெஞ்சத்து தகல்இடத்து அழற்றத்
       10    தனிக்கன்று உள்ளிய புனிற்றுஆப்போல
            விரைவில் செல்லும் விருப்பினன் ஆகிக்
 
              கலினங் கவவிக் கான்றுநுரை தெவிட்டும்
            வலியுடை உரத்தின் வான்பொன் தாலிப்
            படலியம் பழுக்கமொடு பஃறகை இல்லாப்
       15    பருமக் காப்பின் படுமணைத் தானத்து
            அருமைக் கருவி அலங்குமயிர் எருத்தின்
            வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்துக்
 
              குறுக்கை புக்க கொளுஅமை கச்சையன்
            அறைக்கண் மருங்கின் அகத்துளை இன்றிக்
       20   கண்அளவு அமைந்து கதிர்ந்த மூங்கில்
            பண்ணமை காழ்மிசைப் பசும்பொன் வலக்கும்
            அடிநிலைச் சாத்தோடு யாப்புப் பிணியுறீஇ
            வடிஇலைக் கதிர்வாள் வைந்நுனைக் குந்தமொடு
            வார்ப்பின் அமைத்த யாப்புஅமை அரும்பொறி
       25   மணிக்கை மத்திகை அணித்தகப் பிணித்துக்
            கோற்குஅமை வுறும்நடைக் குதிரைக்கு ஒதிய
            நூற்க ணாளரொடு நுனித்துத் கதிவினாய்
            வாக்கமை வாளன் கூப்புபு வணங்கிக்
            கடுநடைப் புரவி கைம்முதல் கொடுப்ப
       30   அடுதிறல் அண்ணல் அணிபெற ஏறி
            மறுவில் மாநகர் குறுக வருவழி
 
              இடுக்கண் தருதற்கு ஏது ஆகி
            இடக்கண் ஆடலும் தொடித்தோள் துளங்கலும்
            ஆருயிர்க் கிழத்தி அகன்றனள் இவண்இலள்
       35   நீர்மலர்ப் படலை நெடுந்தகை யாள
            காணாயாகி ஆனா இரக்கமொடு
            இழுக்கில் தோழரொடு இயங்குவை இனிஎன
            ஒழுக்கும் புள்குரல் உட்படக் கூறிய
            நிமித்தமும் சகுனமும் நயக்குணம் இன்மையும்
       40   நினைத்தனன் வரூஉம் நேரத்து அமைத்த
 
              தண்நிதிப் பலகைச் சந்தனச் சார்வணைக்
            கண்ணுற நினைத்த கைப்புடை ஆவணத்து
            திருமணி அருங்கலம் எளிதினின் தரீஇக்
            காலத்தின் நடக்கும் கூலக் கொழுங்கடைக்
       45   கடுவுங் கோட்டமும் காழ்அகில் குறையும்
            அரக்கும் அதிங்கும் அரும்பெறற் பயினும்
            நறையும் நானமும் நாறுஇரு வேரியும்
            அறைவெள் ளாரமும் அன்னவை பிறவும்
            அண்ணரும் பேரழல் ஆக்கிய கமழ்புகை
       50   மாதிரத்து இயங்கும் சோதிடர் விமானமும்
            வாச மூட்டும் வகையிற் றாகி
            மஞ்சொடு நிரைஇ வெஞ்சுடர் மழுக்க
            இருள்படப் பரந்த மருள்படு பொழுதின்
 
              கண்டான் ஆகித் திண்தேர் உதயணன்
       55   வண்டார் கோதை வாசவ தத்தை
            இருந்த இடமும் பரந்தெரி தோன்றஅவட்கு
            ஏதுகொல் உற்றதென்று எஞ்சிய நெஞ்சின்
            ஊறுவஅண் உண்மை தேறினள் ஆகிச்
            செல்லா நின்ற காலை வல்லே
 
         60   மாய மள்ளரை ஆயமொடு ஓட்டி
            உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
            பொருமுரண் அண்ணல் புகுதரும் வாயிலுள்
            பொச்சாப்பு ஓம்புதல் புரிந்தனர் நிற்ப
 
              எச்சார் மருங்கினும் எரிபுரை தாமரை
       65   கண்ணுற மலர்ந்த தெண்நீர்ப் பொய்கையுள்
            நீப்பருஞ் சேவலை நிலைவயின் காணாது
            பூக்கண் போழும் புள்ளில் புலம்பி
            எரிதவழ் கோயில் எவ்வழி மருங்கினும்
            திரிதரல் ஓவாள் தீய்ந்துநிறம் மழுங்கிக்
       70   கட்டழற் கதிய நெட்டிருங் கூந்தல்
            புதைஎரி பற்றப் புன்சொற் கேட்ட
            பெரியோர் போலக் கருகி வாடிய
            தகைஅழி தாமமொடு தாழ்வன பரப்பித்
            தோழியைக் காணாள் சூழ்வளிச் சுழற்சியள்
       75   செவ்விய தன்கையின் அவ்வயிறு அதுக்கா
 
              நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய
            காவலன் மகளே கனங்குழை மடவோய்
            மண்விளக்கு ஆகி வரத்தின் வந்தோய்
            பெண்விளக்கு ஆகிய பெறலரும் பேதாய்
       80   பொன்னே திருவே அன்னே அரிவாய்
            நங்காய் நல்லா கொங்கார் கோதாய்
            வீணைக் கிழத்தீ வித்தக உருவீ
            தேனேர் கிளவீ சிறுமுதுக் குறைவீ
            உதயண குமரன் உயிர்த்துணைத் தேவீ
       85   புதையழல் அகவயின் புக்கனை யோஎனக்
            கானத் தீயிடைக் கணமயில் போலத்
            தானத் தீயிடைத் தானுழன்று ஏங்கிக்
            காணல் செல்லாள் காஞ்சனை புலம்பிப்
            பூசல் கொண்டு புறங்கடைப் புரளும்
 
         90   ஆகுலத்து இடையே அண்ணலும் கதுமென
            வாயில் புகுந்து வளங்கெழு கோயில்
            தீயுண் விளியும் தேமொழிச் செவ்வாய்க்
            காஞ்சன மாலை கலக்கமும் காணாப்
            பூங்குழை மாதர் பொச்சாப்பு உணர்ந்து
       95   கருவி அமைத்த காலியல் செலவின்
            புரவியின் வழுக்கிப் பொறிஅறு பாவையின்
            முடிமிசை அணிந்த முத்தொடு பன்மணி
            விடுசுடர் விசும்பின் மீன்எனச் சிதறச்
            சாந்துபுலர் ஆகத்துத் தேந்தார் திவளப்
      100    புரிமுத்து ஆரமும் பூணும் புரள
            எரிமணிக் கடகமும் குழையும் இலங்க
            வாய்மொழி வழுக்கி வரையின் விழுந்தே
            தேமொழிக் கிளவியின் திறல்வே றாகி
            இருநில மருங்கில் பெருநலம் தொலையச்
      105    சோரும் மன்னனை ஆர்வத் தோழர்
            அடைந்தனர் தழீஇ அவலம் தீர்க்கும்
 
              கடுங்கூட்டு அமைத்துக் கைவயின் கொண்ட
            போகக் கலவை ஆகத்து அப்பிச்
            சந்தனம் கலந்த அந்தண்  நறுநீர்த்
      110    தண்தளி சிதறி வண்டினம் இரியக்
            குளிரிமுதல் கலவையின் கொடிபெறக் குலாஅய்
            ...........................................................ஒண்மணி தட்டப்
            பவழப் பிடிகை பக்கங் கோத்த
            திகழ்பொன் அலகின் செஞ்சாந்து ஆற்றியில்
      115    பன்முறை வீசத் தொன்முறை வந்த
            பிறப்பிடைக் கேண்மைப் பெருமனைக் கிழத்தியை
            மறப்படை மன்னன் வாய்சோர்ந்து அரற்றாச்
            சேற்றுஎழு தாமரை மலரின் செங்கண்
            ஏற்றெழுந் தனனால் இனியவர் இடைஎன்.