தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு ஆனையூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

திருவக்னீசுவரமுடைய பரமசுவாமிகள், திருவக்கீசுவரமுடைய நாயனார், திருக்குறு முள்ளுர்த் தேவர்

ஊர் :

ஆனையூர்

வட்டம் :

உசிலம்பட்டி

மாவட்டம் :

மதுரை

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ஐராவதேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

மீனாட்சி

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

கட்டக்கருப்பன்பட்டி கண்மாய் முதுமக்கள் தாழிகள், ஆனையூர் கண்மாய்க் கரை முதுமக்கள் தாழிகள், புத்தூர் மலை

சுருக்கம் :

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் ஆனையூர் ஒரு முக்கியப் படைத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டுகளில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் 10-வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டே மிகவும் பழமையானதாகும். இக்கல்வெட்டு கோயில் கருவறை நுழைவாயிலின் நிலையில் காணப்படுகின்றது. ஆனையூர் ஒரு தேவதானமாக இருந்தபோதிலும், இங்கிருந்த நிலங்களுக்காக அரசிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வரி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது சுந்தரபாண்டியனின் கல்வெட்டிலிருந்து தெரியவருகின்றது. திருக்குறுமுள்ளுர் நிச்சயித்த பொன்னில் என்னும் கல்வெட்டுச் சொற்றொடரிலிருந்து திருக்குறுமுள்ளுர் ஊர்ச்சபை வரி நிர்ணயம் செய்த விபரம் தெளிவாகத் தெரியவருகிறது. இவ்வருவாயில் இருந்துதான் மன்னர் கோயிலுக்குக் கொடை வழங்குகிறார். ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பாண்டி நாட்டில் சோழர்களின் உச்சநிலை ஆட்சிக் காலத்தின் போது கோயில் நிர்வாகத்தில் படைத்தலைவர்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர். முதலாம் இராஜராஜனின் 26-வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றில் ஆனையூர் கோயிலுக்கு ஆடுகள் தானமாக வழங்கப்பட்டது. அந்த ஆடுகளை இவ்வூரில் இருந்த வேலன் சேந்தன் மற்றும் அறையன் பல்லவன் ஆகிய படைத் தலைவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், கோயிலின் ஒரு விளக்கினை எரிக்க 1 உழக்கு நெய் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர்

கல்வெட்டு / செப்பேடு :

சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டு (கி.பி.956) கோயிலின் காலத்தால் மிகவும் பழமையான கல்வெட்டாகும். அக்கல்வெட்டில் திருவக்னீசுவரமுடைய பரமசுவாமிகள் என இங்குள்ள இறைவன் குறிப்பிடப்படுகிறார். இக்கோயிலிலுள்ள மூலவரின் பெண் தெய்வமான மீனாட்சி திருமுன்னில் திருப்பதிகம் பாடப்பட்டதைக் கல்வெட்டு சுட்டுகிறது. திருக்குறுமுள்ளுர்க் கோயிலில் திருப்பதிகம் பாடும் உரிமையை அம்பலத்தாடி வெண்காடன் என்ற திருபுவனத் தொண்டன் பெற்றிருந்தார். இவரது பணிக்குரிய ஊதியமாகக் கோயிலில் இருந்து தினமும் ஒரு தூணி நெல் பெற்றதையும் அறிய முடிகிறது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் தனது பெயரில் சுந்தரபாண்டியன் சந்தி என்று விழா எடுத்துள்ளான். செட்டி வணிகக் குழுவைச் சேர்ந்த ஒரு வியாபாரி இக்கோயிலுக்கு மூலவரின் புனிதநீராட்டுக்காகப் பால் கொடையாக வழங்கியுள்ளார். ஆனையூரில் கிடைக்கக்கூடிய கல்வெட்டுகளில் நான்கு கல்வெட்டுகள் தேவரடியார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவற்றுள் முதலாம் இராஜராஜனது கல்வெட்டு பூண்டான் சோலை என்னும் தேவரடியார் 16 பலம் எடை கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட இரண்டு திருவடி நிலைகளைக் கோயிலுக்குக் கொடையாக வழங்கியமைப் பற்றிக் குறிப்பிடுகிறது. நக்கன் இரட்டியூர் என்னும் தேவரடியார் தனது மகள் நக்கன் கண்டி என்பவளது நினைவாக இக்கோயிலுக்கு 50 ஆடுகளை ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்குக் கொடையாக வழங்கியுள்ளார். மற்றொருக் கல்வெட்டில் 7 மா நிலத்தை தேவதாசிப் பெண் பெற்றிருந்தாள். சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளுள் ஒன்றில் தாமோதிர பரஞ்சோதி என்பவர் இக்கோயிலுக்கு ஒரு நொந்தா விளக்கை எரிப்பதற்கு 25 ஆடுகளை வழங்கியுள்ளார். பாண்டி நாட்டின் தென்கல்லக நாட்டுப் பிரிவிலிருந்த விக்கிரமசோழபுரத்தைச் சேர்ந்த குற்றாலம்நம்பன் இளஞ்சிங்கத்தன்மச்செட்டி மூலவருக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு 16 பசுக்களை கொடையாகக் கொடுத்துள்ளான்.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். முகமண்டபத்தில் வாயிற்காவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். கணபதி, சண்டேசர், பைரவர் ஆகிய பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன. கார்த்திகேயன், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், இரட்டை விநாயகர் ஆகியன பிற்காலத்தைச் சேர்ந்தவையாகும். பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த ஜேஷ்டாதேவி சிற்பம் மிகவும் எழில் வாய்ந்தது. அம்மன் திருமுன்னில் நின்ற கோலத்தில் மீனாட்சி அருள்பாலிக்கிறாள். பாண்டியர் கால நந்தி உள்ளது.

கோயிலின் அமைப்பு :

மேற்கு நோக்கி அமைந்த கருவறையைக் கொண்டுள்ளது. இடைகழிக்கூடம், மகாமண்டபம், திருச்சுற்று ஆகியன இடம்பெற்றுள்ளன. மகாமண்டபத்தின் மேற்கு மூலையில் வாகனம் மண்டபம் அமைந்துள்ளது. கருவறையின் தாங்குதளம் குமுதம் வரை நிலத்தினுள் புதைந்துள்ளது. கருவறையின் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்குச் சுவர்களில தேவகோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி வெளிப்பகுதியில் தற்காலக் கட்டிட அமைப்புக் கூறுகளைக் கொண்டு தெற்கே தட்சிணாமூர்த்திக்கும் மேற்கே சண்டிகேசுவரருக்கும் சிறுகோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடைக்கழிக்கூடத்திற்கும் நந்திக்கும் இடையே மகாமண்டபத்தின் வடக்குப் பகுதயில் தெற்கு நோக்கி மீனாட்சி திருமுன் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். இக்கோயிலின் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஒரு விநாயகர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றின் தென்புறச் சுவற்றின் மூலையில் முருகனுக்குத தனியாக திருமுன் உள்ளது. இக்கோயிலின் மேற்குத் திசையில் உள்ள முதன்மையான நுழைவாயிலைத் தொடர்ந்து ஆறு தூண்களையுடைய முக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது விஜயநகர காலத்தை ஒத்ததாகும்.

அமைவிடம் :

அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், ஆனையூர்- மதுரை

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை

செல்லும் வழி :

மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து மேற்கே 29 கி.மீ. தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

உசிலம்பட்டி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

மதுரை, திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

மதுரை மாவட்ட விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:53(இந்திய நேரம்)